வகைதொகையின்றி அப்பட்டமான பொய்களையே அது தனது ஆயுதமாகக் கொண்டிருக்கிறது. பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லும் இந்த சதி நாடகத்தின் பின்னால், உள்ளூர் அரசியல் ஆதாயங்கள் மட்டும் கிளை பரப்பவில்லை. அதற்கும் அப்பால், சர்வதேச ஆதிக்க நலன்களின் தலைகள் அப்பட்டமாகத் தெரிகின்றன.
விரும்பியோ விரும்பாமலோ நாம் சில அதிகார நலன்களால் குறிவைக்கப்பட்டுள்ளோம். ஒரு சமூகம் என்ற வகையில் இது குறித்து கூடுதல் விழிப்புடன் செயலாற்ற வேண்டிய கடப்பாடு நம் முன்னே உள்ளது. எய்பவர் யார்? அம்பு யார் என்ற அவதானம் நமக்கு அதிகம் தேவை.
இது வெறுமனே வாய்ப் பேச்சுகளாலோ கேள்விச் செவிகளாலோ அடையாளம் காணப்பட முடியாத ஒன்று. சற்று ஆழ நின்று அவதானிக்க வேண்டிய எத்தனையோ விடயங்கள் உள்ளன. நம் மத்தியில் ஆய்வறிவு மனோபாவம் நன்கு வலுப்பெற வேண்டும். எதையும் தேடித் தெரிந்து, தீர விசாரித்தறியும் பரந்த பார்வை இதற்கு மிகவும் அவசியம்.
முஸ்லிம் சமூகம் தமது அக முரண்பாடுகளை ஒருபுறம் தள்ளிவைத்து விட்டு, ஒருங்கிணைந்து இந்த எதிர்ச் சக்திகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை அதிகம் வளர்த்துக் கொள்வோம். அவசியமற்ற கிளைப் பிரச்சினைகளுள் எமது சக்தியையும் நேரத்தையும் வளங்களையும் வீணடித்து விடும் நிலையை, வெகு வேகமாய் மாற்றியமைக்க வேண்டிய வரலாற்றுத் தேவை எழுந்துள்ளது.
பொது வேலைத் திட்டம், எல்லோரும் இணைந்து செயலாற்றும் வகையிலான குறைந்தபட்ச இணக்கப் பாட்டுக்கான வாய்ப்புகள் என்பன எமக்கு மிக இன்றியமையாதவையாய் உள்ளன. தனித்து எதிர்கொள்வதை விடவும், ஒன்றுபட்டு எதிர்கொள்ளும்போது நமது பலம் பன்மடங்காகிறது.
நிலமைகளை மிகக் கவனமாகப் பரிசீலித்து, காலப் பொருத்தமான, விவேகமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்பதற்கு இந்த இணக்கப்பாடு மிகவும் அடிப்படையான தேவையாகும். அப்போதுதான் நம்முள் இருக்கும் புல்லுருவிகளை இனங்கண்டு செயற்படுவது சாத்தியமாகும்.
முஸ்லிம் சமூகம் சோதனைகளை எதிர்கொள்ளாத சமூகமல்ல. வரலாறு நெடுகிலும் அது கடும் சோதனைகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டே வந்துள்ளது. இந்த நாட்டின் உண்மையான பிரஜைகளாக நின்று, நாட்டை நேசித்து, நாட்டுக்குப் பங்களிக்கும் நல்ல பக்கங்களை நாம் உரத்துப் பேச வேண்டும்.
தேசத்தின் அனைத்து நல்ல சக்திகளுடனும் இணைந்து அனைவருக்கும் பொதுவான சிறந்த எதிர்காலமொன்றை உருவாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியின் பங்காளிகளாய் நாமும் மாறுவோம். அதுதான் இந்த நாட்டிற்கும் சமூகத்திற்கும் நாம் ஆற்றுகின்ற மகத்தான வரலாற்றுப் பங்களிப்பாய் அமையும்.
0 comments:
Post a Comment