Banner 468 x 60px

 

Sunday, January 13, 2013

செயற்கை இரத்தம் உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் சாதனை

0 comments

உயிர்களை காக்க உதவும் இரத்தத்தினை செயற்கையாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள். இந்த இரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு அறுவை சிகிச்சையின் போது ரத்தம் தேவைப்படுகிறது. இதற்காக இரத்த தானம் செய்பவர்களையோ, ரத்த வங்கிகளையோ நாடவேண்டியுள்ளது. ஒரு சிலருக்கு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்டவகை இரத்தம் கிடைப்பதில்லை. இதனைக் கருதியே இந்த செயற்கை இரத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ஆய்வில் வெற்றி டாக்டர் சோமா குகதகுர்தா தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சிக்கு மத்திய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதி ஒதுக்கியது. தொடர்ந்து மூன்றாண்டுகளாக அவர்கள் செய்த ஆராய்ச்சியின் பலனாக செயற்கை இரத்தத்தினை விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளனர்.

இந்த செயற்கை இரத்தம் தயாரிப்பு சோதனை குறித்து விளக்கமளித்த டாக்டர் சோமா கூறுகையில், 'இரத்தம் தேவைப்படுபவரின் ஸ்டெம் செல்களில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான இரத்த செல்கள் தயாரிக்கப்படும். இந்த செயற்கை இரத்தம், இரத்த வங்கிகளில் இருந்து வாங்கும் இரத்தத்திற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே செலவாகும். அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் அனைத்து இரத்த வங்கிகளிலும் செயற்கை இரத்தம் எளிமையாக கிடைக்கும் எனவும் டாக்டர் சோமா தெரிவித்துள்ளார்.

'நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது இதுவரை இரத்த வெள்ளை அணுக்களை 40 சதவீதம் உற்பத்தி செய்யும் சோதனைகளே நடைமுறையில் இருந்து வந்தது. இந்த செயற்கை இரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், பாதுகாப்பான அதேசமயம் நோய்த்தொற்று இல்லாததாகவும் இருக்கும். அறுவை சிகிச்சைகளின் போதும் இவற்றை பயன்படுத்த முடியும்' என்றும் டாக்டர் சோமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செயற்கை இரத்தம் விலங்குகளில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மனிதர்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் விபத்துக்களின் போது போதிய இரத்தம் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது. இறுதி கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு செயற்கை இரத்தத்தை பெருமளவில் தயாரிக்க ஐ.ஐ.டி.யின் பயோ டெக்னாலஜி துறை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment