
போர் முடிவடைந்ததன் பின்னர், இலங்கையில் நேரடியாகத் தலையீடு செய்வதற்கான வலுவான நியாயங்கள் இல்லாத கையறு நிலை அமெரிக்காவுக்கும் அதன் நேச சக்திகளுக்கும்
ஏற்பட்டது. இலங்கை அரசின் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்க எதிர்ப்புப்
போக்கு ஆழமாக வெளிப்படுகிறது. சீன சார்புப் போக்கை வெளிப்படையாகப்
பின்பற்றும் அரசியல் நகர்வு தீவிரம் பெற்றுள்ளது.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர்க்களமாக மாறியுள்ளது. பனிப்போர் என்ற எல்லையைத் தாண்டி, நேரடி பலப் பரீட்சையாக அது தீவிரமடைந்துள்ளது.
இப்பின்னணியிலேயே
இலங்கையின் ஒட்டுமொத்த நலனுக்கும் சவால் விடுக்கும் அதிதீவிர சிங்கள
கடும்போக்கு சக்திகள் திட்டமிட்டு வளர்க்கப்பட்டன. இது வெளிச் சக்திகளின்
பலமான செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கிறது என்பதற்கு பலமான ஆதாரங்கள் உள்ளன.
உள்நாட்டு
அதிகார சக்திகள் இதே இனவாதிகளுக்குத் தூபமிட்டு ஆதரவுக் கரம்
நீட்டியதுதான் அபத்தமும் முரண்நகையுமாகும். வளர்த்த கடா மார்பில் பாய்வது
போல், இவ் இனவாதிகளது அட்டகாசம் எல்லை மீறி, அதிகார சக்திகளின் நலன்களுக்கு ஆபத்தாக மாறியதால், அவர்கள் அமெரிக்காவுக்கு பொதியிடப்பட்டு அனுப்பப்பட்டதாகவும் ஊகிக்கப்படுகிறது.
பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரருக்கு அமெரிக்கா ஏன் வீசா வழங்கியது
என்பதில் உள்ள சந்தேகம் நியாயமானதே. தனிப்பட்ட விஜயம்தான் என்று அமெரிக்கா
அதற்கு நியாயம் கற்பிக்கிறது. எத்தனையோ மிதவாதிகளான முஸ்லிம்களுக்கு வீசா வழங்க மறுக்கும் அமெரிக்கா, கடும்போக்கு வலதுசாரித் தீவிரவாதிகளுக்கு பச்சைக் கொடி காட்டுவது ஏன்?
இந்த லட்சணத்தில், ராஜதந்திர வரையறைகளை மீறி, கிழக்கு
முஸ்லிம்கள் சிலரை அமெரிக்கத் தூதர் சந்தித்திருக்கிறார். அதுவும் ஞானசார
தேரர் இன்னும் அமெரிக்காவில் இருக்கும் நிலையில்தான் இந்த நாடகம்
அரங்கேறியுள்ளது.
இந்நாட்டின்
முக்கிய முஸ்லிம் அமைப்புகளைச் சந்திப்பதில் அமெரிக்கத் தூதரகம் அளவுக்கு
மீறி அக்கறை காட்டுவதாக ஏற்கனவே தகவல்கள் உள்ளன. அமெரிக்கா ஒரு விடயத்தில்
மூக்கை நுழைக்கிறது என்றால் அதனை மிகுந்த எச்சரிக்கையுடனேயே அணுக வேண்டும்.
சீன
விரிவாதிக்கத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா கைகோர்த்துள்ளது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற மத்திரம் இலங்கை விவகாரத்திலும் பலமாக
செயற்படுகிறது. இந்திய உளவுப் பிரிவினர் கிழக்கில் ஜிஹாத் குழுக்கள்
இருப்பதாக அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வருவது வழக்கம்.
கிழக்கில்
ஜிஹாத் குழுக்கள் இருப்பதாக பொது பல சேனா தலைவர் விமல ஜோதி தேரரும்
சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
இக்குழுக்களை தூபமிட்டு வளர்ப்பதாக வேறு அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அப்பட்டமான பொய் என்று தெரிந்துகொண்டே அவர் அவ்வாறு கூறினார் அல்லது கூற வைக்கப்பட்டார்.
நோர்வே
பொது பல சேனாவுக்கு நிதியுதவி வழங்குவதாக பரவலாக சந்தேகம்
தெரிவிக்கப்படுகிறது. நோர்வே இதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளது. ஆயினும், சந்தேகம் நீடிக்கவே செய்கிறது.
இந்த விடயங்களை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், அமெரிக்கத் தூதுவர் கிழக்கு முஸ்லிம்களைச் சந்தித்தது மிகப் பெரும் ஆபத்தின் அறிகுறியாகவே நோக்கப்பட வேண்டும்.
அமெரிக்கா ஒரு சதி வலையையே விரிக்கிறது. அமெரிக்காவின் பொறிக்குள் அகப்பட்ட யாரும் இலகுவில் மீட்சி பெற்றதாய் வரலாறு
இல்லை. நாட்டில் அக்கறையுள்ள அனைத்துப் பிரஜைகளும் இந்த அபாயம் குறித்து
கூடுதல் பொறுப்புணர்ச்சியுடன் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
0 comments:
Post a Comment