Banner 468 x 60px

 

Tuesday, February 5, 2013

டீனேஜ் பருவம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

0 comments
teen0ஹனான் அஷ்ராவி
உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு அடிக்கடி ஆளாகும் டீனேஜ் பருவத்தினர் பல்வேறு வகையான உளநெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் உள்ளாகின்றனர். உடல், உள மாற்றங்களே இதற்குப் பின்னணியாக உள்ளன. இப்பருவ மாற்றங்களையும் அதனால் விளையும் பிரச்சினைகளையும் பெற்றோர் மனங்கொள்ளல் வேண்டும்.

பொதுவாக, டீனேஜ் பருவத்தினர் அல்லது கட்டிளமையினர் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினைகளாக பின்வருவனவற்றை அடையாளம் காணலாம்.
1. பாலியல் விலகல்/தவறான வழிக்குச் செல்லல்
2. உளவியல் சார்ந்த பிரச்சினைகள்
3. சமூகம் சார்ந்த நெருக்கடிகள்
4. நடத்தைசார் பிரச்சினைகள்
டீனேஜ் பருவத்தினருக்கு ஏற்படும் தவறான தொடர்புகள் அவர்களது உளவியலில் மிகுந்த தாக்கம் செலுத்துகின்றது. இளம் வயதினருக்குத் தவறான தொடர்புகள் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. வீடுகளில் தனித்திருப்பது அதில் முக்கியமானது. அதிலும் கண்காணிப்பற்ற தனிமை மிகவும் ஆபத்தானது.
பொதுவாக டீனேஜ் பருவத்தினர் இரு வழிகளில் தவறான தொடர்புகளுக்கும் சிக்கல்களுக்கும் முகங்கொடுக்க நேர்கின்றது. முதலாவது வழி, இவர்களது அறியாமையையும் உணர்ச்சிசார் நிலமைகளையும் பலர் பலவீனமாகப் பயன்படுத்த எத்தனிக்கின்றனர். வீடுகளுக்கு அடிக்கடி வந்து போகும், தெரிந்தவர்களாகவோ உறவினர்களாகவோ இருக்கும் சிலர் இப் பலவீனத்தைப் பயன்படுத்தக் கூடும்.
டீனேஜ் பருவப் பெண்கள் குறிப்பான கவனத்திற்கு உள்ளாக வேண்டியவர்கள். ஏனெனில், அவர்கள் மிக இலகுவாக அடுத்த ஆண்களால் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. இவர்களோடு அன்பாகப் பேசி, நட்பாகப் பழகி, தகாத உறவு வரை யாரும் கொண்டு செல்ல முடியும். இத்தகைய இளம் பெண்கள் அறிவோ அனுபவமோ இல்லாமையினால் இவ்வாறான வலைகளில் சிக்கிக்கொள்ளும் பரிதாபமான நிலை உள்ளது.
இரண்டாவது அம்சம், இப்பிள்ளைகள் வெளியில் செல்லும்போது ஏற்படும் இளம் வயது காதல் தொடர்புகள், மீள முடியாத சிக்கல்களில் அவர்களை மாட்டி வைக்கின்றன. இவற்றுக்குப் பக்க பலமாக இவர்களின் கைகளில் கொடுக்கப்படும் கையடக்கத் தொலைபேசிகள், கணனிகள், இணையதள வசதிகள் சமீபகாலமாக முகநூல் (Face book) அமைகின்றன. தமது பிள்ளைகள் அந்தளவுக்குப் போக மாட்டார்கள் என பெற்றோர் தமது மனங்களில் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே இவ்வாறான சிக்கல்கள் ஏற்படக் காரணமாகின்றது.
இத்தகைய தவறான தொடர்புகள் பிள்ளைகளில் மீள முடியாத உள, உடலியல் தாக்கங்களை உருவாக்குகின்றன. பிற்பட்ட கால திருமண வாழ்க்கையை பயந்தவர்களாகவும் தன்னம்பிக்கை இல்லாதவர்களாகவும் எதிர்கொள்ளும் நிலைக்கு அவர்களைத் தள்ளி விடுகின்றது. மொத்தமாகவே வாழ்வில் வெறுப்பை உருவாக்கிக் கொள்பவர்களாக இவர்கள் மாறுகின்றனர். சில மாணவர்கள் கல்வியில் தமது திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் மங்கிப் போகின்றனர். குடும்ப வாழ்வில் பிரிவுகள் பிரச்சினைகளுக்கும் இது காலாக அமைகின்றது.
டீனேஜ் பருவத்தினர் எதிர்நோக்கும் இத்தகைய பிரச்சினைகளில் ஒன்று, ஆண் பிள்ளைகளுக் கிடையே ஏற்படும் ஒருபால் உறவாகும். பாலியல் சார் நடத்தைகளால் இலகுவாகக் கவரப்படுகின்ற டீனேஜ் பருவத்தினர் இத்தகைய விலகல்சார் நடத்தைகளுக்கான வாய்ப்பு ஏற்படும்போது அதனைப் பயன்படுத்தக் கூடும். எனவே, பெற்றோர் இவ்விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்துதல் அவசியம். ஏனெனில், இறுக்கமான ஆன்மீக கலாச்சார சூழலில் வளர்க்கப்படும் பிள்ளைகள் கூட சிலவேளைகளில் இத்தகைய பிறழ்வு நிலைக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது.
உளவியல்சார் நெருக்கடிகள்
மன அழுத்தம், மனச்சோர்வு (Depression) டீனேஜ் பருவத்தினரிடையே ஏற்படக் கூடிய முக்கிய உளநெருக்கடியாகும். நாம் வாழ்வது மனஅழுத்தத்தின் யுகம். மன அழுத்தத்தின் விளைவாக ஏற்படும் மனச்சோர்வு யாரையும் விட்டு வைக்கவில்லை. இறுக்கமான வாழ்க்கைச் சூழல் மன அழுத்தத்தின் ஆணிவேர். அது இயல்பான வாழ்விலிருந்து நிம்மதியற்ற வாழ்க்கையையும் காலப்போக்கில் உடல் நோய்களையும் தருகின்றது.
ஏமாற்றம், பயம், நிராசை, எரிச்சல், திருமணம்-கல்வி போன்றவற்றில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. டீனேஜ் பருவத்தினர் சஞ்சலம், பதகளிப்பு, தோல்வி என்பவற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வகையான தற்காப்புப் பொறிமுறைகளைக் கையாள்கின்றனர். தனிமை அதில் முதன்மையாது.
சமூக, குடும்ப தொடர்புகளை முற்றாக அறுத்துக் கொண்டு ஒதுங்கிப் போகும் ஒருவகை ஏகாந்த நிலையை சில இளைஞர்கள் தெரிவுசெய்கின்றனர். சிலர் போட்டித் தன்மையுள்ள சூழ்நிலைகளிலிருந்து முற்கூட்டியே தம்மை விலக்கிக் கொள்கின்றனர். இதனை உளவியலில் விரண்டோடுதல் (Escaping) என்பர். சிலர் இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலட்சியவாத உலகை கட்டி யெழுப்புகின்றனர்.
கனவில் மிதப்பது இன்னொரு வகை தற்காப்புப் பொறிமுறையாகும். பகற் கனவில் ஈடுபடல், பரீட்சைகளில் தோல்வியடையும் போது இந்தக் கல்வி முறையே பயனற்றது என்று வாதாடுவது போன்ற சுயபாதுகாப்பு முறைகளை இவர்கள் கையாள்கின்றனர். இவ்வகை உளவியல் நெருக்கடிகள் நீடிப்பது நரம்பு உளவழி நோய்களை உருவாக்கக் கூடும் என உளமருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இளைஞர்களின் இத்தகைய உளவியல்சார் நெருக்கடிகளைப் பெற்றோர் இனங்கண்டு அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டியுள்ளது.
கட்டிளமைப் பருவத்தினரிடம் ஏற்படும் இன்னொரு பிரச்சினை, தமது பணி என்ன என்பது பற்றிய மனக்குழப்பமாகும். இதை உளவியலில் Role Confusion என்பவர். தமது சொந்த அடையாளத்தைக் கைவிட்டு ‘போலச் செய்தல்’ (Imitating) மூலம் பிறரை முன்மாதிரியாகக் கொள்ளும் இயல்பு இப்பருவத்தினரிடம் உள்ளது. விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள், கலைஞர்கள், அழகு நட்சத்திரங்கள் போன்றோரை இவர்கள் முன்மாதிரியாகக் கொள்கின்றனர்.
இங்கு சமயம், மொழி, கலாச்சாரம் ஆகிய எல்லைகளைத் தாண்டி ஒரு புறக் கவர்ச்சி டீனேஜ் பருவத்தினரை கொள்ளை கொள்கின்றது. நல்ல முன்மாதிரிகளை அறிமுகம் செய்வதும் அவர்களை நோக்கி வழிப்படுத்துவதும் பெற்றோரின் பொறுப்பாகும். ஏனெனில், இவர்கள் தான் அடுத்த தலைமுறையை வழி நடத்தப் போகின்றனர்.

0 comments:

Post a Comment