
பிள்ளை வளர்ப்பின் பூரண நிலையில் ஒன்றே பிள்ளைகளை நல்லமுறையில் வளர்ப்பதில் பெற்றோர் புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பதாகும். அங்கு ஆன்மீக ரீதியாக ஈமானும் இபாதத்தும் விதைக்கப்படும். அறிவு ரீதியாக நல்ல விளக்கமும் கல்வியும் வழங்கப்படும். பண்பு ரீதியாக ஒழுக்கமும் பண்பாடும் புகட்டப்படும். உடல் ரீதியாக சுத்தமும் உடற் பயிற்சியும் தெளிவுபடுத்தப்படும். சமூக ரீதியாக நன்மையை விரும்ப வைப்பதும் சமூகத்திற்கு பணி செய்ய வைப்பதும் காணப்படும். அரசியல் ரீதியாக தனது சமூகத்திற்கும் அகீதாவுக்கும் விசுவாசமாக நடத்தலிருக்கும். கலை ரீதியாக தன்னைச் சூழவுள்ள பிரபஞ்சத்தின் அழகை உணர வைத்தலிருக்கும். மொழி ரீதியாக தனது சமூகத்தின் மொழியை விரும்பி, சரியாக விளங்கி, மொழிவதற்கு பழக்கப்படுவது காணப்படும்.
இந்தப் பயிற்சி மிக கஷ்டமானதும் முக்கியமானதும் ஆகும். இதனைப் பற்றி தாய், தந்தை இருவரும் வினவப்பட இருக்கின்றனர். இதனைப்பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்: “நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்களின் பொறுப்புக்கள் பற்றி மறுமையில் வினவப்படுவீர்கள்... ஆண் தனது குடும்பத்தில் பொறுப்பாளராகவும் தனது பொறுப்புக்கள் பற்றியும் வினவப்படுவார். பெண் தனது கணவனின் வீட்டில் பொறுப்பாளராகவும் தனது பொறுப்புக்கள் பற்றியும் வினவப்படுவார்." (புஹாரி, முஸ்லிம்)
இது அல்லாஹுதஆலாவுக்கு முன்னால் பதில் சொல்லவேண்டிய பொறுப்பாகும். மட்டுமன்றி, தனது உள்ளத்திற்கு முன்னால் பதில் சொல்லவேண்டிய பொறுப்பாகும். மேலும், இது சமூகத்திற்கு முன்னால் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பாகும்.
குழந்தையின் ஆரம்ப கட்டத்தில் தாயின் பொறுப்பு தந்தையின் பொறுப்பைவிட மேலானதாகும். ஏனென்றால், அவள்தான் தந்தையை விட அதிகமாக குழந்தையோடு வாழ்கிறாள். அவள் தான் எந்த தரகரும் இன்றி தனது குழந்தையோடு தொடர்புபடுகிறாள். எனவேதான், அறிஞர்களும் பயிற்றுவிப்பாளர்களும் ஒழுக்க அறிஞர்களும் கவிஞர்களும் இது விடயமாக கவனம் செலுத்துகின்றனர். அவள்தான் குழந்தை தனது முதல் பாடங்களை கற்கும் முதல் பாசறையாகும். இதுவிடயமாக நைல் நதிக் கவிஞர் ஹாபிழ் இப்றாஹிம் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"தாயொரு பாசறை அவள் உருவாக்கினால் நல்ல தொன்றையே உருவாக்குவாள்."
குழந்தை வளர வளர தந்தையின் பொறுப்பு அதிகரிக்கின்றது. இவ்வாறுதான் தாயின் பொறுப்பை விட தந்தையின் பொறுப்பு பெரியதாக கருதப்படுகின்றது. ஏனெனில், அவர்தான் குழந்தையின் நடத்தைகளை நெறிப்படுத்தவும் மேற்பார்வை செய்யவும் அவை விடயத்தில் விளிப்பாக இருக்கவும் வேண்டும். இதன் சுமை அனைத்தும் தந்தைக்கே பொறுப்புச் சாட்டப்படுகின்றது.
சில தந்தைமார் பிள்ளைகளைப் பெற்றெடுப்பது மாத்திரமே தமது பொறுப்பென நினைத்து, அவர்களைப் பற்றி யாதொன்றையும் அறியாது, மறந்துவிடுகின்றனர். அவர்களில் சிலருக்கு தனது மகன் எந்தப்பாடசாலையில் படிக்கிறான்? அவன் எத்தனையாவது வகுப்பில் கற்கிறான்? அவன் வகுப்பில் சித்தியடைந்துள்ளானா? அல்லது சித்தியடையவில்லையா? அவன் தனக்குள் மாத்திரம் சுருங்கியுள்ளானா? அல்லது அவனுக்கு நண்பர்கள் இருக்கிறார்களா? அவனது நண்பர்கள் சீரானவர்களா? அல்லது உளநோயால் பீடிக்கப்பட்டவர்களா? அல்லது வழி தவறியவர்களா? என்பவை கூட அவர்களுக்கு தெரியாது. பாடசாலை பெற்றோர் சந்திப்புக்கு (Parents Meeting) அழைப்பு விடுக்கும். ஆனால், இவர்கள் அவற்றுக்கெல்லாம் வருகை தரமாட்டார்கள். பாடசாலை நிர்வாகம் அவர்களின் பிள்ளைகள் பற்றிய கடிதங்களை அனுப்பிவைக்கும். ஆனால், அவை ஒன்றுக்கும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள். சில வேளைகளில் அவர்கள் அவற்றை வாசிக்கக் கூடமாட்டார்கள். அவர்களின் பிள்ளைகள் சீரடைந்தாலும் சரி அல்லது சீர்கெட்டாலும் சரி. அவர்கள் எந்தக்கவனமும் செலுத்தமாட்டார்கள்.
சில பெற்றோர் தமது பிள்ள களுக்கு பொருளாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மாத்திரம் போதுமானது என நினைக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான சிறந்த உணவு, சிறந்த ஆடை, நல்ல உறைவிடம், சிறந்த வாகனம் என்பவற்றை வழங்குகின்றனர். சிலவேளைகளில் இவற்றை விட ஆடம்பரமானவற்றையெல்லாம் வழங்குகின்றனர்.
அவர்கள் அவன் கேட்கின்ற பணம் அனைத்தையும் வழங்குகின்றனர். அவர்கள் அவனுக்கு எந்த மறுப்பும் தெரிவிப்பது கிடையாது. அவனுக்கு அதிகமாக கொடுப்பதிலே கஞ்சத்தனம் காட்டுவது கிடையாது. சிலவேளைகளில் இது அவனை வழிகெடுப்பதாகவும் அமைந்துவிடும்.
இதனை அபுல்அதாஹியா பின்வருமாறு குறிப்பிடுகிறார்-
“நிச்சயமாக இளமையும் ஓய்வும் செல்வமும் ஒரு மனிதனுக்கு ஆபத்தானவையாகும்."
தந்தை மகனுக்கு விருப்பமான அனைத்தையும் வழங்குகின்ற போது தான் மகனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக நினைப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகும்.
அல்லாஹுதஆலா கணவன், மனைவியரையும் பெற்றோரையும் விளித்து பின்வருமாறு கூறுகிறான்:
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உங்களையும் உங்களின் குடும்பத்தவரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களும் ஆகும்." (அத்தஹ்ரீம்:06)
அல்லாஹ் ஒரு மனிதனிடம் விசாரிப்பதற்கு பொருத்தமானவர்கள் பிள்ளைகளாகும் என்பது சந்தேகத்திற்கிடமற்ற விடயமாகும். அல்லாஹுதஆலா பெற்றோரிடம் தங்களையும் குடும்பத்தவரையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டியுள்ளான். அவர்கள் தமது குடும்பத்தினரை பசி, ஆடையின்மை, ஏனைய சடத்துவ விடயங்களிலிருந்து பாதுகாப்பதில் மாத்திரம் போதுமாக்கிக் கொள்ளக்கூடாது.
எனவேதான், இந்த வசனத்தை அலி (றழி) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்தினார்கள்: குடும்பத்தினருக்கு நல்ல விடயங்களைக் கற்றுக்கொடுங்கள்.
றஸூல் (ஸல்) அவர்கள் கூறியதாக பின்வருமாறு ஒரு அறிவிப்பு வருகிறது: “ஒரு தந்தை தனது மகனுக்கு வழங்குவதில் மிகச்சிறந்தது அழகிய பண்பாடு ஆகும்." (திர்மிதி, ஹாகிம்)
தனது பிள்ளைகளை விரும்பி, அவர்கள் மீது ஆசை வைத்துள்ள தந்தை நரகிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது கடமையாகும். அவர் நரகிற்கும் அவர்களுக்கும் இடையே பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். அவர் அவர்களை பாவங்கள், பெரும்பாவங்கள் செய்வதனை விட்டும் பாதுகாக்க வேண்டும். அவர்கள் தடுக்கப்பட்டவற்றை செய்வதனை விட்டும் ஏவப்பட்டவற்றை விடுவதனை விட்டும் பாதுகாக்க வேண்டும்.
தந்தை பிள்ளைகளை அவர்களின் சிறுபராயம் முதல் அல்லாஹ் விற்கும் பெற்றோருக்கும் உறவினருக்கும் அயலவருக்கும் முழு சமூகத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற பழக்க வேண்டும். இவை அனைத்துக்கும் முன்னால் தனக்கே செய்ய வேண்டிய கடமைகளை நிறை வேற்ற வேண்டும்.
தமிழில் : றுஸ்லி ஈஸா லெப்பை (நளீமி
0 comments:
Post a Comment