
முஸ்லிம் சமூகம், ஒருவகையான தப்பித்துச் செல்லும் ஒதுங்கும் மனோபாவத்திற்குள் (Escapism) அகப்பட்டிருக்கிறது என்று நேர்ப் பேச்சில் ஒரு ஆய்வாளர் தெரிவித்திருந்தார். நாம் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், இதில் பல உண்மைகள் உள்ளன.
பிரச்சினைகள் என்று வருகின்றபோது, அதனைச் சரியாக உணர்ந்து எதிர்கொள்ளும் திராணியும் தெளிவும் நமக்கு மிகவும் அவசியம். ஆனால், இந்த உறுதியான மனநிலையிலிருந்து அடிக்கடி நம்மில் பலர் சறுக்கி வருகின்றனர். தப்பித்துச் செல்வதை வசதியான ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
எமக்கு வித்தியாசமான கருத்துகள் இருக்கும்போது, ஒதுங்கிப் போவது நல்ல வழிமுறையல்ல. நாசூக்காகவும் நாகரிகமாகவும் அவற்றை வெளிப்படுத்த வேண்டும். அறவே வெளிப்படுத்தப் பொருத்தமில்லாத சூழலில், அதனைத் தவிர்ப்பதுதான் நல்லது.
ஆனால், பேச வேண்டிய இடத்தில் கூட பேசாமல் மௌனியாய் இருந்துகொண்டு, அதற்கு நியாயம் கற்பிக்கும் போலி அறிவுஜீவிகள் பலரைக் காண்கிறோம். இவர்களை விட சாமான்ய மனிதர்கள் எவ்வளவோ மேல். அவர்களுக்கு இப்படி அறிவு முலாம் பூசத் தெரியாது. வெளிப்படையாகப் பேச மட்டுமே தெரியும்.
உரையாடல் (Dialogue), புரிந்துணர்வை வளர்க்கும் மிகச் சிறந்த ஆயுதமாகும். இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு இது மிகவும் இன்றியமையாதது.
‘ஸாலிஹான அமல்’ என்ற கருத்தை நாம் அடிக்கடி பேசுகிறோம். நற்செயல்கள் என்று இதற்குப் பொதுப்படையாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஆனால், பொருத்தமான தருணத்தில், பொருத்தமான பணியை செய்வது (Right Time, Right Action) என்பதே இதன் சரியான அர்த்தமாகும். தூய்மையான எண்ணத்துடன் இந்தப் பணியை முன்னெடுத்தால் அது ஒரு இபாதத்தாக (வணக்க வழிபாடாக) அமையும்.
ஏனையவர்கள் எம்மைக் குறித்து என்ன மனப் பதிவைக் கொண்டுள்ளார்கள்? நாம் அவர்கள் குறித்து என்ன மனப் பதிவைக் கொண்டுள்ளோம்? இரு தரப்பினரும் தெளிவுபெற வேண்டிய இடங்கள் எவை? வேறுபடும் இடங்கள் எவை? உடன்படும் இடங்கள் எவை? இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? இவ்வாறான பல கேள்விகளுக்குரிய பதில்களைத் தேட, உரையாடல் மிகச் சிறந்த வழிமுறையாகும்.
இப்போது பிற சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்களுடனான உரையாடல்கள் நடந்து வருவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. இதனை சமூகத்தின் உயர் மட்டங்களில் மட்டுமல்லாது, அடி மட்டங்கள் வரை விஸ்தரிக்க வேண்டும். பல முனைகளிலும் உரையாடல்களைத் தொடங்கி, அதன் பயன்களை உடனடியாகவும் நீண்ட காலத்திலும் அறுவடை செய்வோம்.
0 comments:
Post a Comment