மனிதனது
வளர்;ச்சிப் பருவங்களில் இளமைப் பருவம் முக்கியமானதாகும். மேலும்
சமூகத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் அல்லாஹ் இந்த இளைஞர்களது கையிலேயே
வைத்திருக்கிறான் என்றால் கூட அது மிகையல்ல. உலக நாகரிகங்களைக்
கட்டியெழுப்பியதில் இளைஞர்கள் வகித்த பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இளமைப்
பருவத்தில்தான் உணர்ச்சிகள் பிரவாகிக்கின்றன. துடிப்பும் வேகமும் முதன்மை
ஊக்கமும் மனோவலிமையும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கொண்ட பருவம் அது.
இளைஞர்கள் குழைத்தமாவுக்கு ஒப்பானவர்கள். அவர்களை சமூகத்தின் மூத்தவர்களும்
தலைவர்களும் தொடர்புசாதனங்களும் விரும்பும்; விதங்களில் திசை திருப்ப
முடியும். அவர்களை கூரிய ஆயுதத்திற்கு ஒப்பிடலாம். அந்த ஆயுதத்தை
நற்காரியங்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பது போலவே அதனை
வைத்திருப்பவர் நாடினால் கொலைகள் செய்யவும் அதனை உபயோகிக்க முடியும். எனவே
இளைஞர்கள் விடயமாக அதிக கரிசனை காட்டுவது ஒரு சமூகத்தின் கட்டாயக்
கடமையாகும்.
நபிகளார்
(ஸல்) அவர்களின் தூதை விசுவாசித்து அதனை சுமப்பதிலும், பல்வேறு
தியாகங்களுக்கு மத்தியில் அதனை பிரசாரம் செய்வதிலும் முக்கிய பங்கு
வகித்தவர்கள் இளவயதினரே. இளமையின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்த நபி (ஸல்)
அவர்கள் அந்த இளைஞர்களை அரவணைத்துப் பயிற்றுவித்து பெரும் பதவிகளையும்
பொறுப்புக்களையும் அவர்களுக்கு வழங்கினார்கள். யுத்தம், நீதி, நிர்வாகம்,
பொருளாதாரம், கல்வி, பிரசாரம் போன்ற இன்னோரன்ன துறைகளில் இளைஞர்களுக்கு
முன்னுரிமை வழங்கப்பட்டது.
அலி,
முஸ்அப் இப்னு உமர், இப்னு அப்பாஸ், உஸாமா, ஜுன்துப் போன்ற வாலிபர்களதும்
அஸ்மா, ஆயிஷா போன்ற இளம் நங்கையர்களதும் வரலாறுகள் எமக்கு சிறந்த
முன்மாதிரிகளாக விளங்குகின்றன. ஸ்பெயினை தாரிக் என்ற இளைஞனும் இந்தியாவை
முஹம்மது பின் காஸிம் என்ற இளைஞனுமே வெற்றி கொண்டார்கள். அநியாயக்கார
ஆட்சியாளர்களது கொடுமைகள் தாங்காது தமது ஈமானைப் பாதுகாக்க குகைகளில்
ஒழிந்து கொண்டு தியாகம் செய்தவர்கள் தமது இரட்சகனை விசுவாசித்த இளைஞர்களே
என சூரா கஹ்பில் அல்லாஹ் கூறுகிறான்.
பொதுவாக
உலக வரலாறு நெடுகிலும் மதங்கள் மற்றும் கொள்கைகளின் வெற்றிக்காக
சீர்திருத்தவாதிகளோடும் மதத்தலைவர்களோடும் புரட்சியாளர்களோடும் சேர்ந்து
இளைஞர்கள் முன்னணியில் நின்று போராடியிருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு
சமூகத்தின் முதுகெழும்பாக அவர்களைக் கணிக்கலாம்.எனவே நபி(ஸல்) அவர்கள்
இளமைப் பருவத்தின் முக்கியத்துவத்தை பல சந்தர்ப்பங்களில்
வலியுறுத்தியுள்ளார்கள்.
1
“உனக்கு முதுமை வருவதற்கு முன்னர் உனது இளமைப் பருவத்தையும், உனக்கு நோய்
வருவதற்கு முன்னர் உனது தேகாரோக்கியத்தையும் நன்கு பயன்படுத்திக்கொள்.”
(ஹாகிம் பைஹகி)
2
“மறுமை நாளில் நான்கு விடயங்கள் சம்பந்தமாக ஓர் அடியான் விசாரிக்கப்படம்
வரை அவனது இரண்டு கால்களும் இருந்த இடத்தை விட்டு நகர மாட்டாது. அதில் ஒரு
கேள்வி உனது இளமைப் பருவத்தை எதில் கழித்தாய் என்றும் அமையும்.” (
திர்மிதி)
3
“நிழலே இல்லாத, சூரியன் கடுமையான உஷ்ணத்தை கக்கும் மறுமைநாளில் ஏழு
பேருக்கு மட்டும் அல்லாஹ் தனது அர்ஷின் நிழலில் இடம் வழங்குவான்” என்று
கூறிய நபி(ஸல்) அவர்கள், அவர்களில் முதலாமவராக நீதியான ஆட்சியாளரையும்
இரண்டாமவராக அல்லாஹ்விற்கு இபாதத் செய்வதிலேயே வளர்ந்த இளைஞர்களையும்
குறிப்பிட்டார்கள்.
நீதி
செலுத்தும், நல்லாட்சி செய்யும் அதிகாரிக்கு ஒரு நாட்டையும் சமூகத்தையும்
கட்டியெழுப்புவதில் எவ்வளவு தாக்கமும் செல்வாக்கும் இருக்குமோ அதே
போன்றுதான் ஒரு சமூகத்தின் எழுச்சி, முன்னேற்றம், ஸ்திரப்பாடு, நாகரிகம்,
ஒழுக்க வளர்ச்சி போன்றவற்றில் இளைஞர் சமுதாயத்திற்கும் பங்கு இருக்கின்றது
என நபி(ஸல்) அவர்கள் இதன் மூலம் உணர்த்த விரும்பினார்கள.; வேறுவகையில்
பார்த்தால் ஒரு சமூகத்தை சீரழிப்பதிலும், குட்டிச்சுவராக்குவதிலும்
ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அதே அதிகாரமும் செல்வாக்கும், இளைஞர்களுக்கும்
இருக்கிறது. இவ்விருவரையும் பற்றி அருகருகில் ஹதீஸில்
பிரஸ்தாபித்திருப்பதற்கும் இது காரணமாகும் என கலாநிதி சயீத் ரமழான்
கூறுகிறார.; இளமைக் காலத்தை இறை பக்தியோடு, இச்சைகளை நெறிப்படுத்தி வணக்க
வழிபாடுகளில் கழித்த இளைஞன் நிச்சயம் நல்லதொரு முஸ்லிமாகவும், வீட்டிற்கும்
நாட்டிற்கும் பயனுள்ள நற்பிரஜையாகவும் இருப்பான். அந்த சமூகத்தின்
வச்சிரத் தூணாக, தீமைகளை நொறுக்குவதில் முன்னணி வீரனாக அவன் விளங்குவான்.
அத்தகைய இளைஞனை அல்லாஹ் மறுமையில் நீதியான ஆட்சியாளனோடு சேர்த்து
கௌரவிப்பதும் பாதுகாப்பதும் ஆச்சரியமான விடயமல்ல.
இளைஞர்கள்
ஒரு சமூகத்தின் பிரதானமான அங்கமாக இருப்பதால் தான், சகல சீர்திருத்த
வாதிகளது கவனமும் முதலில் அவர்கள் மீது செலுத்தப்படுகிறது. அதே வேளை ஒரு
சமூகத்தை அடிமைப் படுத்தவும், சீரழிக்கவும் நாடும் எந்தவொரு
வெளிச்சக்தியும் இளைஞர்களை சீரழிப்பதற்கே முதலில் முயற்சிக்கின்றது.
ஈமானில் பலமில்லாத, பெற்றோரால் நன்கு வளர்க்கப்படாத, பாடசாலையிலும்
சமூகத்திலும் நல்ல சூழலைப் பெறாத இளைஞர்கள் கெட்டுப் போவதற்கான
வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.
தற்காலத்தில்
இளைஞர்கள் வழிகெட்டு, சமூகத்தில் அழிவுச்சக்திகளாக மாறி வருகின்றார்கள்.
கையடக்கத் தொலை பேசி, இன்டர்நெட் கெபேக்கள் இளைஞர்கள் வழிகேட்டில்
நுழைவதற்கான பிரதான நுழை வாயில்களாக மாறிவருகின்றன. ஆபாசமான
காட்சிகளைப்பார்ப்பதற்கு நண்பர்களின் துணையோடும், தனித்தனியாகவும் அவர்கள்
துணிந்து விட்டார்கள். இளைஞர்களும் யுவதிகளும் கையடக்க மற்றும் வீட்டுப்
பாதையோர தொலைபேசிகள் மூலமும் தமக்கிடையே தொடர்புகளை வைத்திருக்கின்றார்கள்.
மாலை
நேர வகுப்புக்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்துள்ளன.
ஆண்கள், பெண்கள் சர்வசாதாரணமாக நெருங்கிப் பழக அவை வழி சமைக்கின்றன.
கல்வியைத் தேடுவதை விட வேறு நோக்கங்களுக்காகத்தான் டியுஸன் வகுப்புக்களா என
எண்ணத் தோன்றும் நிலை இருந்து வருகின்றது.
மோசமான
நண்பர்களது தொடர்புகள் மூலம் விபசாரம், ஓரினச்சேர்க்கை, புகைபிடித்தல்,
மதுபாவனை போன்ற துர்நடத்தைகள் இடம் பெற வாய்ப்பு அதிகம் உள்ளது. உயிருக்கே
உளைவைக்கும் பயங்கரமான போதை வஸ்துக்கள் கூட இளைஞர்களுக்கு தற்காலத்தில்
இலகுவாகக்கிடைக்கின்றன.
தற்போது
சர்வசாதாரணமாக விற்பனையாகும் சீடிக்களிள் (CDs) பெரும்பாலானவை மட்டரகமான,
பாலுணர்வு களைத்தூண்டும் நிகழ்ச்சிகளையும், துப்பறியும் பயங்கரமான
படங்களையும், மனிதனை கிறங்க வைக்கும் ஆடல் பாடல்களையும் கொண்டே
வெளிவருகின்றன. அவற்றை ஒரு தடவை மட்டும் பார்க்கும் சந்தர்ப்பத்தைப் பெறும்
இளைஞன் தொடர்ந்தும் அவற்றைப் பார்க்க ஆவல் கொள்கிறான். அவற்றை பார்க்காது
நாளைக்கடத்த முடியாது என்ற நிலை உருவாகி ஈற்றில் அவன் தனது அருமையான இளமைப்
பருவத்தில் குணப்படுத்த முடியாத நோய்களுக்கு உள்ளாவதோடு போராட்டங்கள்
நிறைந்த, குழப்பமான, மன நிலை பாதிக்கப்படும் நிலைக்கும் வந்து சேர்கிறான்.
துர்நடத்தைகளில்
இன்பம் காணும் ஒருவன் அதில் தொடர்ந்தும் பல படித்தரங்களைக் கடப்பதிலேதான்
ஆர்வம் காட்டுவான். எந்தப் படித்தரத்திலும் அவனுக்கு மன நிறைவு கிட்டாது,
ஷைத்தானின் வலையில் முழுமையாக வீழ்ந்து, அவன்; கல்வியை, ஆரோக்கியத்தை, சமூக
உறவுகளை, மதிப்பை, கண்ணியத்தை இழந்து நடைப்பினமாகி விடுவான். ஒன்றில் அவன்
இறக்க நேரிடும் அல்லது நோய் பீடித்து வீட்டில் சிறைப்படலாம் அல்லது
சிறைக்கூடம் செல்லலாம். மேற்குலகில் இடம் பெறும் தற்கொலைகள் கூட இந்த
துர்நடத்தைகளினதும் மன நோய்களதும் தவிர்க்க முடியாத முடிவுகளில் சிலவாகும்.
எனவே
இந்நிலையிலிருந்து விடுபடுவதற்காக முழுச்சமூகமும் முழு மூச்சாக
செயற்படுவது உடனடித் தேவையாகும். ஒரு பிள்ளை பிறந்தது முதல் அதன்
உடலுக்குத்தேவையான உணவை, ஊட்டச்சத்தை கொடுப்பதிலும் சிறிய ஒரு நோய் வந்தால்
கூட டாக்டரிடம் பதரிக்கொண்டு எடுத்துச்சென்று மருந்து வாங்குவதிலும் அதிக
கவனமெடுக்கும் பெற்றார் தமது பிள்ளை எதிர்காலத்தில் வீட்டிற்கே எதிரியாக,
பெரும் விபசாரியாக, கள்வனாக, கைதியாக மாறிவிடக்கூடாது என்பதற்காக
சிந்திப்பது குறைவாக உள்ளது. இது ஆச்சரியமான ஒரு போக்காகும்.
இன்றைய
குழந்தைகள் தான் நாளைய இளைஞர்கள் என்ற வகையில் குழந்தை பிறந்தது முதலே
பிள்ளையின் ஆளுமையை வளர்ப்பதில் பெற்றார் கூடிய கவனமெடுக்க வேண்டும்.
அப்போது தான் எதிர்காலத்தில் நல்ல இளைஞர்களை உருவாக்கமுடியும். பிள்ளைப்
பருவத்தை கவனத்திலெடுக்காமல் இளைஞர்களை உருவாக்கமுடியாது.
ஒரு
பிள்ளை அல்லது இளைஞனின் சீரிய வளர்ச்சியில் வீடு, பாடசாலை, சமூகம் ஆகிய
மூன்று நிறுவனங்களும் கூடிய பங்களிப்பை நல்க முடியும். குறிப்பாக
வீட்டுச்சூழல் மிக முக்கியமானதாகும். தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை,
இளமையிற் கல்வி சிலையில் எழுத்து, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வழையாது போன்ற
முதுமொழிகள் வீட்டில் பிள்ளை நன்றாக வளர்க்கப்படுவதன் அவசியத்தைப்
பின்னணியாகக் கொண்டு கூறப்பட்டுள்ளன. பின்வரும் விடயங்களில் கவனம்
செலுத்துவது இளைஞர்களைப் பாதுகாக்க உதவும்.
1
சிறுவர்களின் உள்ளத்தில் அல்லாஹ், மறுமை நாள் மீதான நம்பிக்கையை பலமாக
விதைப்பது எத்தகைய சவால்கள் மிக்க நெருக்கடியான சூழலிலும்
தன்னைப்பாதுகாத்துக் கொள்ளும் கவசமாக அமையும்.
2
தொழுகை, குர்ஆன் ஓதல், நோன்பிருத்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் பிள்ளைகளை
ஈடுபடுத்துவதோடு அவர்கள் அவற்றில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபடப் பழக்குவது,
இதன் மூலம் உள்ளத்தில் ஜோதி உருவாகும். நன்மைகளைச் செய்ய விருப்பமும்
தீமைகள் மீது வெறுப்பும் தோன்றும். நற்பண்புகள் வளர வாய்ப்பேற்படும்.
“நிச்சயமாக தொழுகையானது மானக்கேடான பாவமான காரியங்களிலிருந்து தடுக்கும்”
என குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளான்.
3
சிறந்த முன்மாதிரி: பெற்றோரும் முஅல்லிம்களும் ஆசிரியர்களும்
பொறுப்புக்களை வகிப்பவர்களும் தீய செயல்களை விடுவதிலும் நற்காரியங்களை
முன்னின்று மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தி சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ
வேண்டும். நல்ல இளைஞர் பரம்பரையைக்காண கனவு காணும் எவரும் இதில்
அசிரத்தையாக இருக்க முடியாது. உதாரணமாக புகைபிடிக்கின்ற,
பள்ளிக்குச்செல்லாத ஒரு தகப்பன் அல்லது ஆசான்; பிள்ளைகள் அல்லது மாணாக்கர்
புகைபிடிக்கலாகாது பள்ளி செல்ல வேண்டும் எனப் போதிப்பதில் எப்பயனும்
ஏற்படப் போவதில்லை.
4
தொடர்பு சாதனங்களை பாவிப்பதில் நல்ல வழிகாட்டல்கள் தேவை. ஆபாசமான, நேரத்தை
விழுங்கும் பயனற்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியிலோ, சீடீக்கள் (ஊனுள)
வாயிலாகவோ பிள்ளைகள்; பார்ப்பதை முற்றாகத் தடுக்க வேண்டும். கல்;வி, இயற்கை
காட்சிகள், பொது அறிவு என்பவற்றினுடன் சம்பந்தமான செய்தித் துனுக்குகள்
கொண்ட நிகழ்ச்சிகளை மட்டும்; பார்ப்பதற்கு வழிகாட்ட வேண்டும். இன்டர்
நெட்டில் ஆபத்தான பகுதிகளை பிள்ளைகள் பார்க்காதிருக்க தகுந்த
வழிகாட்டல்களும் ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும.; சிறுவயதிலேயே கையடக்கத்
தொலைபேசிகளை சிறுவர்களது கையில் பாவனைக்காக கொடுக்கலாகாது.
5
பிள்ளைகளுடன் பெற்றார் நெருக்கமாகப் பழகுவது: பிள்ளையின் முதல் பாடசாலை
தாயும் தகப்பனும்தான். அன்பு, பாதுகாப்பு, வழிகாட்டல், உடலியல் தேவைகள்
அனைத்திற்கும் பிள்ளைகள் பெற்றாரையே அதிகம் நம்பி இருப்பார்கள்.
சிறுபராயத்தில் அல்லது இளமைப் பருவத்தில் அவர்களது அரவணைப்பை, தம்முடனான
ஈடுபாட்டை, பிள்ளைகள் அதிகம் எதிர்பார்ப்பார்கள். வீட்டில் இவை கிட்டாத
போது வீட்டுச்சூழலுக்கு வெளியே நன்பர்களிடமிருந்து அவற்றைப் பெற
முயற்சிப்பார்கள். அந்த நன்பர்கள் மோசமானவர்களாக இருந்தால் அவர்களது
அச்சில்தான் இவர்கள் வளர ஆரம்பிப்பார்கள். இளவயதிலுள்ள பலர் காதல்
வயப்படுவதற்கு வீட்டில் கிடைக்காத அன்பை காதல் சோடியிடம் தேட முற்படுவதே
காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன.
6
பிள்ளைகளுக்கு அறிவுட்டுவதும் ஒழுக்கம் கற்பிப்பதும் : “ஒரு தந்தை தனது
பிள்ளைக்கு வழங்கும் அன்பளிப்புக்களில் நல்லொழுக்கத்தைத் தவிர வேறொரு
சிறந்த அன்பளிப்பு எதுவுமில்லை” ( திர்மதி ஹாகிம் ) " “யார் மூன்று பெண்
பிள்ளைகளை பராமரித்து அவர்களை ஒழுக்கமாக வளர்த்து திருமணமும் செய்து வைத்து
அவர்களுக்கு உபகாரமும் செய்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் உண்டு” (அபுதாவுத்)
மேலும்
சிறார்களுக்கு ஏழுவயதில் தொழும்படி கட்டளை பிறப்பிக்கும் படியும்,
படுக்கைகளில் அவர்களை வேறாக்கும் படியும் (அபுதாவுத் திர்மதி )
கட்டளையிட்டார்கள். நவீனத்துவம் சடவாதம், பெண்ணிலைவாதம், நாஸ்திகம்,
கம்யுனிஸம் போன்ற கொள்கைகளும் மற்றும் மதங்களும் உலகில் மிகவும்
கவர்ச்சிகரமான பிரசார நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருப்பதால் அவை பற்றி
எச்சரிப்பதும் அவற்றிலிருந்து தவிர்ந்து நடக்கும் அளவிற்கு அறிவூட்டுவதும்
பெற்றாரதும் ஆசிரியர்களதும் தொடர்பு சாதனங்களதும் பொறுப்பாகும். பின்
விளைவுகளை யோசிக்காத தன்மை கொண்ட, அனுபவமற்ற இளைஞர்கள் இன்று பல்வேறு
வழிகெட்ட சித்தாந்தங்களுக்கு இரையாகி தம் சொந்த இஸ்லாத்திற்கே கோடரிக்
காம்புகளாகி வருகிறார்கள். இந்நிலையின் பாரதூரத்தை சரிவரப் புரிவது
சீர்திருத்த வாதிகளது கடமையாகும்.
7
நல்ல நண்பர்களின் சகவாசம்: இளைஞர்கள் பழகும் நண்பர்கள் நல்லவர்களா என்பது
கவனிக்கப்பட வேண்டும.; நல்ல நன்பர்களது சகவாசத்தை ஊக்குவிப்பதோடு கெட்ட
நண்பர்களைவிட்டும் அவர்களை தூரப்படுத்த வேண்டும். மார்க்க அறிஞர்கள், சமூக
சேவகர்கள், நன்மக்கள், உறவினர்களுடன் இளைஞர்கள் தொடர்பு கொள்ள வழிவகை
செய்யப்படுவது அவசியமாகும். “உன் நண்பன் யாரென்று கூறு நீ யாரென்று
கூறுகிறேன்” என்று கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் கூட கெட்ட சகபாடி
குறித்து எச்சரித்திருப்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
8
வீட்டிலும் பாடசாலை மற்றும் பொது வாசிகசாலையிலும் நல்ல தரமான நூல்களும்
சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் இருக்க வேண்டும். அறிவு மனிதனுக்கு
அவசியமானது. அது நேரடியாக மார்க்கத்துடன் தொடர்பான அறிவாக அல்லது லோகாயுத
அறிவாக இருப்பினும் இளம் பருவத்தினருக்கு அவை அவசியப்படுகின்றன.
அப்பருவத்தில் அறிவு தேடும் வேட்கையால் உந்தப்படும் அவர்களுக்கு நல்ல
பதிலீடுகளாக இவை அமையும்.
9
நல்ல உபன்னியாசங்கள், கருத்தரங்குகள், விரிவுரைகள், நல்ல பொது
நிகழ்ச்சிகள் நடை பெறும் இடங்களுக்கு இளைஞர்களை அழைத்துச் சென்று நல்வழி
பெற உதவுவதும் சமூக சேவைப் பணிகளோடு இளைஞர்களை சம்பந்தப் படுத்தி விடுவதும்
அவசியமாகும்.
10
நற்காரியங்களில், ஆக்க முயற்சிகளில் பிள்ளைகள் ஈடுபடும் போது மெச்சுவதும்
உற்சாகப் படுத்துவதும் அவர்களது ஆளுமை விருத்திக்குத் துணையாகவே அமையும்.
அதே நேரம் தீய செயல்களில் ஈடுபடும் பிள்ளைகளை கண்டிப்பதும் அவசியமாகும்.
ஆனால் கண்டிப்பு நிதானமாகவும் பொருத்தமான வார்த்தைகளைப் பிரயோகித்தும் இடம்
பெறுவது பற்றி ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும். சகல அனுகு முறைகளும்
பயனளிக்காத போது தண்டனைகள் கூட பயன்படுத்தப்படலாம.; ஆனால் அவை மிக அரிதாகவே
இடம் பெற வேண்டும். தாய், தகப்பன், ஆசிரியன் தீயவற்றை வெறுப்பார்கள்.
அவர்களது அதிருப்திக்கு உள்ளாக நேரிடும். சிலபோது தண்டனையும் கிடைக்கும்
என்ற அச்சமும் பிள்ளைகளது உள்ளத்தில் இருப்பது அவசியமாகும்.
தற்காலத்துப்
பெற்றோர்களில் பலர் தமது பிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்குவது மிகக்
குறைவாகும். தகப்பன் தொழில், பயணங்கள், நண்பர் தொடர்புகள் என
வீட்டிலிருந்து வெளியில் இருப்பதே அதிகம். தாய் வீட்டிலிருந்தாலும் வீட்டு
வேலை, தொலைக்காட்சி பார்ப்பது என்பவற்றில் மூழ்கியிருப்பதால் அல்லது
சந்தைக்கும், உறவினர், நண்பிகள் வீட்டுக்கும் என்று ஏறி இறங்குவதிலும் அவள்
காலம் கழியும். மொத்தத்தில் பிள்ளை கவனிப்பாரற்று தறிகெட்டு தன்வழியை தானே
தேர்ந்தெடுத்து வாழ ஆரம்பிக்கும். கேளிக்கை நாட்டம், மேற்குலக நாகரிக
மோகம், துர்நடத்தை, நீண்ட தலை மயிரும் நகங்களும், நவீன மோஸ்தர்கள் என
பிள்ளை வேறு திசையில் போய்க் கொண்டிருக்கும். இது இளைஞர்கள் யுவதிகள்
இருவருக்கும் பொதுவான உண்மையாகும்
“ஒருவர்
தான் செலவழிக்கக் கடமைப் பட்டவர்களை (மனைவி மக்களை) கவனிக்காமல்
பொடுபோக்காக விட்டு விடுவதே அவருக்குத் தீமை எழுதப்படுவதற்குப்
போதுமானதாகும்” (அபுதாவுத், ஹாகிம், அஹ்மத்) என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். உங்களிள் ஒவ்வொருவரும்;;; பொறுப்புதாரிகள் உங்கள் ஒவ்வொருவரது
பொறுப்புக்கள் பற்றியும் விசாரிக்கப் படுவீர்கள் என்றும் கூறினார்கள்.
நாம் இறந்ததற்குப் பிறகும் எமக்கு நன்மைகள் தொடர்ந்து கிடைக்க வேண்டுமாயின்
“வலதுன் ஸாலிஹ{ன்” எனப்படும் நல்ல பிள்ளைகளை உருவாக்க முயற்சிக்க
வேண்டும்.
மொத்தத்தில்
நல்ல பிள்ளைகளை அல்லது இளைஞர்களை உருவாக்குவதில் வீடு, பாடசாலை, சமூகம்
ஆகிய மூன்று நிறுவனங்களும் கைகோர்த்து செயல் படுவது அவசியமாகும். மூன்றில்
ஏதாவது ஒன்று அசிரத்தை காட்டுவது மற்றைய இரண்டாலும் புரியப்படும்
முயற்சிகளை பாழ்படுத்துவதாக அமையும். அல்லாஹ் எம் இளம் பரம்பரையை
நற்குணசீலர்களாக வளர்த்து எமக்குத் துணைபுரிவானாக!
0 comments:
Post a Comment