Banner 468 x 60px

 

Wednesday, February 6, 2013

கட்டிளமைப் பருவத்தினரின் மனச்சோர்வு (Depression)

0 comments
teenageஹனான் அஷ்ராவி
மனச்சோர்வு மனநிலையைச் சார்ந்த ஒரு அசாதாரண நிலை. காலப்போக்கில் அது உடல் தாக்கங்களையும் உண்டாக்கக் கூடியது. முன்பொரு காலத்தில் இதனை வருத்தம் தோய்ந்த நிலை (–Melencoly) என்றனர். இன்று சிறு குழந்தைகள், கட்டிளமைப் பருவத்தினர், வயது வந்தோர், வயதானோர் என மனச் சோர்வு யாரையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக மனச்சோர்வுக்கு உட்படும் கட்டிளமைப் பருவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. பதின்ம வயதினரிடம் காணப்படும் தீவிர மனச்சோர்வு சில நேரங்களில் ஒரு கோளாறாக அல்லது பிறழ்வாக அல்லது நோயாகப் பார்க்கப்படுகின்றது.
ஓர் இளைஞனிடம் மனச் சோர்வுக் கோளாறு காணப்படுமாயின், ஒரு குடும்பத்தில் அல்லது சமூக அமைப்பில், பள்ளிச் சூழலில், அயலவரிடத்தில் ஏதோ ஒரு தப்பு இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகவே அது பார்க்கப்பட வேண்டும்.
பிலிப் கிரஹாம் மற்றும் கரேல் ஹியூஸ் ஆகியோர் மனச்சோர்வை உடல்நலக் கோளாறாக அல்லது மருத்துவப் பிரச்சினையாகப் பார்ப்பதை விட, சமூகம், கல்வி, குடும்பம் சார்ந்த அணுகு முறையில் பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர். வளரிளம், பதின்ம, கட்டிளமை பருவத்தினரிடையே ஏற்படும் மனச்சோர்வுக் கோளாறின் அறிகுறிகள் பின்வருமாறு இனங் காணப்படுகின்றன.
1. துயரம்/மகிழ்ச்சியற்ற நிலை:
பல வாரங்கள் தொடர்ந்தும் துயரத்தையும் மன வருத்தத்தையும் வெளிக்காட்டுவர். சூழல் மாறினாலும் அவர்களது துயரம் மாற்றமடையாது. தொடர்ந்தும் மகிழ்ச்சியற்ற மனநிலையை அவர்களிடம் அடையாளம் காண்பது அவ்வளது எளிதல்ல. சிலபோது இவர்களுக்கு வேறு பிரச்சினைகளும் இருக்கலாம். மனச்சோர்வுடன் பதற்றமும் சேர்ந்து வரலாம்.
2. அன்றாட செயல்களில் மகிழ்ச்சியற்றிருத்தல்:
இளம் வயதினருக்கு வழக்கமாக மகிழ்ச்சியளிக்கும் செயல்களைச் செய்ய வாய்ப்பிருந்தும் அவற்றில் பங்களிக்க விரும்பாமல் இருந்தால், நிச்சயம் அது மனச்சோர்வுக்கான அறிகுறியே. நண்பர்கள் அழைத்தாலும் அவர்களுடன் சேர்ந்திருப்பதற்கு இவர்கள் விரும்ப மாட்டார்கள்.
3. தூக்கப் பிரச்சினை:
தூக்கம் வராமை, இரவில் விழித்தல், மீண்டும் தூங்க இயலாமை, காலையில் வழக்கமாக எழும் நேரத்திற்கு முன்பே விழித்தல் போன்றவை இவர்களிடம் காணப்படும் பொதுவான பிரச்சினைகளாகும். மகிழ்ச்சியற்ற கலக்கமூட்டும் கனவுகள் வழக்கமாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது வரலாம். சிலர் தூக்கத்தில் நடக்கின்றனர்.
4. சாப்பிடுவதில் ஏற்படும் மாற்றங்கள்:
உணவில் நாட்டம் அற்றுப் போதல் மற்றொரு அறிகுறியாகும். அதேவேளை, மன நிம்மதிக்காக உணவை நாடி உடல் நலம் கெட்டுப் போகும் அளவுக்கு அளவுக் கதிகமாக உண்பதும் மனச்சோர்வின் அடையாளமே. எவ்வாறாயினும், உணவு பற்றிய மனப்பாங்கில் நீடித்த மாற்றம் இருப்பது மனச்சோர்வின் அறிகுறியே.
வளரிளம் பருவப் பெண்களிடம் தமது உடலை மெல்லியதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் பருவம் இருக்கக் கூடும். இது மனச்சோர்வின் அறிகுறியல்ல. உணவைச் சுவைத்து இன்புறாத பெண்களிடம்தான் மனச்சோர்வு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
5. தற்கொலைச் சிந்தனை/நடத்தை:
சந்தேகத்திற்கு இடமின்றி இதுதான் மனச்சோர்வின் மிகவும் கவலைப்பட வேண்டிய அறிகுறி. ஒவ்வொரு நாளும் 12 முதல் 16 வயது வரையானவர்களில் நூற்றில் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சிக்கின்றார். 1000 மாணவர்கள் உள்ள பள்ளியில் 10 மாணவர்களுக்கு தற்கொலை உணர்வு ஏற்படுவதாக அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வு கூறுகிறது.
15-19 வயது வரையான குழுவினரில் ஏற்படும் மரணங்களில் உத்தேசமாக ஏழில் ஒன்று தற்கொலையால் நிகழ்கின்றது. ஓர் இளம் வயதினரிடம் தற்கொலைச் சிந்தனை தொடர்ந்து காணப்படுகிறதா என்பதைக் கண்டறிவது எப்போதும் இலகுவானதல்ல. பதின் வயதினரிடம் இவ்வித சிந்தனைகள் இருக்கின்றனவா என்பது பொதுவாகப் பெற்றோருக்குத் தெரிவதில்லை. நம்பிக்கை இழந்து இருப்பதையும் வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்று பேசுவதையும் பெற்றோர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
6. எதிர்மறை சிந்தனைகள்:
மனச் சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களிடம் எதிர்மறைத் தானியங்கு சிந்தனைகள் (‡Nagative Autometic Thoughts) இருக்கும் எனக் கருதப்படுகின்றது. இந்தச் சிந்தனைகள் மனக்கவலை, தன்னைப் பற்றி கேவலமாக நினைத்தல் போன்ற மகிழ்ச்சியற்ற உணர்வுகளோடு இணைந்திருப்பதால், அவை எதிர்மறையானவை. எந்தக் காரணமும் இன்றி, திடீரென அவை மூளையில் தோன்றுவதனால், தானியங்கும் சிந்தனைகள் எனப்படுகின்றன.
7. சுய குற்றச்சாட்டு:
மனச்சோர்வுற்ற இளம் பருவத்தினர், சில நேரங்களில் தமது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் பொதுவாக உலகத்திற்கும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தாங்களே காரணம் என்று பொறுப் பேற்றுக் கொள்வார்கள். அவர்கள் எதையும் குறையின்றிச் செய்பவர்களாகவும், தங்களுகென்று உயர்வான தரத்தை நிர்ணயிப்பவர்களாகவும் இருக்கலாம்.
பெற்றோர்களுக்கிடையில் ஏற்படும் விவாதங்களுக்கும் அவர்கள் பிரிந்து வாழ்வதற்கும் சகோதரன் அல்லது சகோதரிக்கு நோய் ஏற்பட்டமைக்கும் தாங்களே காரணம் என்று தங்கள் மீது குறை கூறுவார்கள். அவர்கள் காரணம் அல்ல என்று அவர்களை நம்ப வைப்பது மிகவும் கடினமானது. பொதுவாக இச்சிந்தனைகள் பதின்ம வயதினரிடம் இருப்பதில்லை. ஆனால், சில சந்தர்ப்பங்களில் அது வந்து செல்கின்றது.
வாழ்க்கையில் மனஉளைச்சலைத் தரும் நிகழ்வுகளைப் பற்றிப் பேசுவது அவர்களிடம் இவ்வித மனநிலை இருப்பதை வெளிப்படுத்தும். மேலே சொன்ன அடையாளங்கள் குறித்து பெற்றோர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வேறு பிரச்சினைகளை மனச்சோர்வாக நாம் அடையாளம் காண வேண்டியதுமில்லை.
நீடித்த களைப்பும், ஆற்றலின் மையும் மனச்சோர்வின் முக்கியமான வேறு சில அறிகுறிகளாகும். பாரிய இழப்புகள், ஏமாற்றங்கள், மனஅழுத்தங்கள், பாதுகாப்பற்ற நிலை, ஆளுமைப் பண்பு, சூழவுள்ளவர்களால் ஏற்படும் மனப்பாதிப்பு, மரபணுக்கள், குரோமசோம்கள் போன்ற பல்வேறு காரணிகளால் ஒருவர் மனச்சோர்வுக்கு உட்படலாம்.
இளைஞர்கள் மனச்சோர்வுக்கு உட்படுவது மிக ஆபத்தான விளைவுகளையே கொண்டு வரும். மட்டுமன்றி ஒரு சமூகத்தின் உற்பத்தித் திறனையும் செயலூக்கத்தையும் முடக்கிவிடும். எனவே, சமூகத்தின் ஒவ்வொரு நிறுவனமும் உள ஆரோக்கியமுள்ள இளைஞர்களை வளப் படுத்துவதில் கவனம் குவித்தாக வேண்டும்.

0 comments:

Post a Comment