Banner 468 x 60px

 

Tuesday, February 5, 2013

பல்லின சமூகத்தில் தனித்துவம் பேணலும் சகவாழ்வும்

1 comments

Rauff-Zain0அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன் (நளீமி) ஆற்றிய உரையின் தொகுப்பு.

முஸ்லிம் சமூகம் பெரும் பான்மையாகவோ சிறுபான்மையாகவோ வாழ நேரிடலாம். அது உலகின் எந்தப் பிராந்தியத்திலும் வாழலாம். ஆயினும், இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணி வாழ்வது அதன் மீதான மார்க்கக் கடமையாகும். அதேவேளை, பிற சமூகங்களுடன் இணங்கி, சமாதானமாக வாழ்வதும்; தாம் வாழ்கின்ற நாட்டிற்கு தம்மாலான பங்களிப்பை ஆற்றுவதும் அவர்கள் மீது கடமையாகும்.
இலங்கை போன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் இக்கருத்தை சீர்தூக்கிப் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாதது.
இஸ்லாமிய தனித்துவத்தை விட்டுக் கொடுக்காத நிலையில், முஸ்லிம் அல்லாதவர்களோடு இணங்கியும் கலந்தும் வாழ்தல் என்ற இத்தொனிப்பொருள் கடந்த பல தசாப்தங்களாக இஸ்லாமிய சட்டத்துறையின் பேசு பொருளாக இருந்து வருகின்றது.
இஸ்லாத்தைப் பொறுத்த வரை, தனித்துவத்தைப் பேணி வாழ்தல், ஒரு மார்க்கக் கடமை என்றே அது கருதுகின்றது. ஸூறதுல் ஹுஜ்ராதின் 7 ஆவது வசனம், "அல்லாஹ் உங்களுக்கு ஈமானை விருப்பத்திற்குரியதாகவும், உங்கள் உள்ளங்களில் அதனை அலங்காரப் பொருளாகவும் ஆக்கினான்" எனக் குறிப்பிடுகின்றது.
இவ்வசனத்திற்கு விளக்கம் தரும் இந்திய துணைக் கண்டத்தின் பேரறிஞர் மர்ஹூம் அபுல் ஹஸன் அலி நத்வி (றஹ்) அவர்கள், அலங்காரப் பொருளாக ஆக்கினான் என்பதன் அர்த்தம், ‘ஒரு முஸ்லிமின் தனித்துவம் இஸ்லாமே’ என்பதை எடுத்துக் காட்டுவதாகக் கூறுகின்றார்.
ஸூறதுல் பகராவின் 115 ஆவது வசனத்திலும் இதன் தாத்பரியம் வலியுறுத்தப்படுகின்றது. "கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் எத்திசை நோக்கித் திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் கண்காணிப்பு உள்ளது." இவ்வசனம் முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் அல்லாஹ்வின் தூதை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதையே பறைசாற்றுகின்றது.
"நீங்கள் இணை வைப்போருக்கு மாற்றமாக நடவுங்கள் எனக் கூறிய ரஸூல் (ஸல்) அவர்கள், ஆஷூரா நோன்பை யூதர்கள் ஒரு நாள் நோற்றபோது, முஸ்லிம்கள் அதனை இரு நாள் நோற்குமாறு பணித்தார்கள். எனது கோவேறு கழுதையின் மூக்கணாங் கயிறு காணாமல் போனாலும் அதனை நான் அல்லாஹ்வின் குர்ஆனில் கண்டு கொள்வேன் என்ற அபூபக்ர் (றழி) அவர்களின் கூற்றும் "நாம் இழிவடைந்த சமூகமாக இருந்தோம், இஸ்லாத்தின் மூலம் அல்லாஹ் எங்களை கண்ணியப் படுத்தினான். யார் இஸ்லாத்தை விட்டும் கண்ணியத்தைத் தேடுகிறாரோ அவரை அல்லாஹ் இழிவு படுத்திவிடுவான்" என்ற உமர் (றழி) அவர்களின் கூற்றும் இஸ்லாத்தின் மீதான பற்றையும் அதன் தனித்துவத்தைப் பேணி வாழ வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கின்றன.
நாம் கூறும் இந்தத் தனித்துவம் எமது சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரப் பாரம்பரியங்கள் என்பவற்றில் மட்டுமன்றி, வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மனித வாழ்வை எழுபது பகுதிகளாகப் பிரிக்க முடியுமென்றால் அந்த ஒவ்வொரு பகுதியுடனும் இந்த தனித்துவம் தொடர்புபட்டுள்ளதை நாம் புரிந்துகொள்ளலாம்.
இத்தொனிப்பொருளின் இன்னொரு பக்கம் உள்ளது. அதுதான் நாம் ஒரு தஃவா சமூகமாக இருப்பது. ஸூறதுல் ஆலஇம்ரானின், "உங்களில் ஒரு சமூகம் நன்மையின் பால் அழைக்கட்டும். நன்மையை ஏவி தீமையைத் தடுக்கட்டும். அவர்கள்தான் வெற்றியாளர்கள்" என்ற வசனத்திற்கு இமாம் ரஷீத் ரிழா தனது தப்ஸீருல் மனாரில் தரும் விளக்கம் கவனத்திற்குரியது.
இவ்வசனத்தில் உள்ள ‘கும்’ என்பது ஒட்டுமொத்த மனித குலத்தையும் குறிக்கின்றது. ஏனெனில், குர்ஆன் முழு மனித குலத்துக்குமானது. அவ்வாறாயின் உம்மா என்று வந்திருப்பது முழு முஸ்லிம் சமூகத்தையும் குறிக்கும். எனவே முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் ஒவ்வொரு தாஇயாக இருக்கின்றான் என்பதையே இவ்வசனம் கூறுகின்றது.
தாஇயாக இருக்கின்ற ஒருவன், தான் பிரச்சாரத்தை எத்திவைக்க விரும்பும் சமூகத்திடமிருந்து ஒருபோதும் விலகியிருக்க முடியாது. அல்லது மூடுண்டு வாழ முடியாது. திறந்த நிலையில் இணங்கி வாழ்பவனாக அவன் இருக்க வேண்டும்.
சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இரு பாரிய சவால்களை அவர்கள் எதிர்நோக்குகின்றனர். அந்நியப் பெரும்பான்மை மத்தியில் தனித்துவத்தைப் பேணல் முதலாவது சவால். தனித்துவம் சிதையாமல் பிற சமூகங்களுடன் இணைந்து வாழல் அல்லது கலந்து வாழல் அடுத்த சவால். அத்தகைய சவாலை மிகச் சரியாக எதிர்கொண்டு, இவ்விரு நோக்கங்களையும் நிறைவேற்ற வேண்டுமாயின், சிறுபான்மைச் சமூகங்கள் கடைப் பிடிக்க வேண்டிய வாழ்வியல் சமன்பாடொன்றை சமகால இஸ்லாமிய அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
கரைந்து போகாமல் கலந்து வாழ்தல், திறந்த நிலையில் தனித்துவம் பேணல் (ˆOpen Conservation and Possitive Integration)
ஐரோப்பிய நாடுகளிலும் வட அமெரிக்காவிலும் வாழ்கின்ற சிறுபான்மை முஸ்லிம் சமூகங்கள் இத்தகைய வாழ்வியல் சமன்பாட்டை நன்கு பேணும் வகையில், தமது சமூக, கலாசார, ஆன்மீக வாழ்வை ஒழுங்கு படுத்தியுள்ளனர். அதற்கான இஸ்லாமிய வழிகாட்டல்களை சமகால இஸ்லாமிய அறிஞர்கள் போதுமானளவு வழங்கி வருகின்றனர்.
இன்று உலகிலுள்ள மொத்த முஸ்லிம் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுபான்மையாக வாழ்கின்றனர். தனித்துவத்தைப் பேணுதல் இத்தகைய சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஒரு சவாலே அல்ல எனக் கருதும் அளவுக்கு இஸ்லாமிய சட்டத் துறையில் விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன் பேறாக சிறுபான்மைக்கான சட்ட மரபு தோற்றம் பெற்றுள்ளது.
ஆரம்ப காலத்தில் சில இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்வதை அங்கீகரிக்கவில்லை. தொழில் நிமித்தமாக அல்லது உயர் கல்விக்காக அல்லது வரலாற்றுக் காரணங்களால் முஸ்லிம்கள் அந்நிய நாடொன்றை தாய் நாடாகக் கொள்வது தமது மார்க்கத் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்குச் சவாலாக இருக்கும் என்று அத்தகைய அறிஞர்கள் கருதினர்.
ஆனால், நவீன காலத்தில்-குறிப்பாக முதல் உலகப் போருக்குப் பின்னர், முழு உலகிலும் முஸ்லிம் சிறுபான்மை எனும் தோற்றப்பாடு தவிர்க்க முடியாத ஒரு சமூக யதார்த்தமாக மாறி விட்டுள்ளது. எனவே, தஃவா நோக்கத்தில் இத்தகைய நாடுகளை தாருல் அஹ்த் (ஒப்பந்த நாடுகள்), தாருஷ் ஷஹாதா (அல்லாஹ்வுக்கு சாட்சி பகரும் நாடுகள்), தாருத் தஃவா (பிரச்சாரத்திற்கான நிலம்) என்றே கொள்ள வேண்டும் என இஸ்லாமிய சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
முன்னர் தாருல் ஹர்ப், தாருல் குப்ர் என்றே இத்தகைய நாடுகள் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், பொருள் தேடல் என்ற ஒரே நோக்கத்திற்காக அந்நிய நாடொன்றைத் தாயகமாக ஏற்பதை ஷரீஆ அங்கீகரிக்காது. மாறாக, தஃவா நோக்கமும் இத்தகைய முஸ்லிம்களிடம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அந்நியப் பெரும்பான்மை நாடொன்றில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்வதற்கு ஷரீஆ அங்கீகாரம் அளிக்கின்றது. ஆயினும், அவர்கள் இரு சவால்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அது பணிக்கின்றது.
01. கொள்கை, நடைமுறை இரண்டிலும் இஸ்லாமிய தனித்துவத்தைப் பேணல்
02. பிற சமூகங்களோடு கலந்து வாழ்வதோடு தேசிய வாழ்விலும் பங்குகொள்ளல்.
இன்று இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தின் கலாசார பன்மைத்துவத்தை இல்லாதொழித்து, மேற்கத்தேய ஒற்றைக் கலாசார மாதிரியின் கீழ் உலக சமூகங்களைக் கொண்டு வருவதற்குத் தீவிரமாகச் செயல்படுகின்றனர். சர்வதேச ஊடகங்கள், பல் தேசிய கம்பனிகள், யூத சியோனிய இயக்கங்கள் இந்தத் திட்டத்தைக் கவனமாக முன்னெடுக்கின்றன
உலகமயமாதல் என்ற பெயரில் ஓய்வு, உல்லாசம், உணவு முறை, உடையமைப்பு என்பவற்றை மாற்றி, அனைத்து சமூகங்களையும் அரைநிர்வாண சடவாத மதச்சார்ப்பற்ற சமூகமாக ஆக்குவதற்குத் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அனைத்துக் கலாசாரங்களையும் உருக்கி, ஒரு ஒற்றைக் குடத்தை (–Melting Pot Model) உருவாக்கும் இம் முயற்சியை இஸ்லாம் ஏற்பதில்லை.
பல்வேறு கலாசாரங்களுக்கிடையில் முஸ்லிம்கள் தமது தனித்துவத்தை (Cross-Cultural Identity) பேணிப் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு தனித்துவம் பேணும்போது அது பண்பாடுகளுக்கிடையில் உரசல்களை உருவாக்கி விடவும் கூடாது என் பதில் இஸ்லாம் உறுதியாகவுள்ளது.
இலங்கை போன்ற சிறுபான்மை நாடொன்றில் எமது மார்க்க, கலாசார தனித்துவங்களைப் பேண வேண்டுமாயின், பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
1. ஷரீஆவின் அடிப்படை விழுமியங்களைப் பேணும் வகையிலான மாற்று நிறுவனங்களை உருவாக்குதல். உதாரணமாக கொடுக்கல் வாங்கலில் ஹலாலைப் பேணும் வகையில் இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை உருவாக்கல்.
2. ஏற்கனவே உள்ள நிறுவனங்களை இஸ்லாமிய மயமாக்கல். (பாடசாலைகள், மற்றும் சமூக நிறுவனங்கள்)
3. அழகியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான மாற்று இஸ்லாமிய கலை இலக்கிய முயற்சிகளில் கவனம் செலுத்தல்.
4. சிறுபான்மையாக வாழ்வதால் ஏற்படும் பிரச்சினைகளை ஆய்வு ரீதியாக அடையாளம் கண்டு, எமக்கென ஒரு சிறுபான்மை சட்ட மரபை (பிக்ஹு லில் அகல்லியாத்) உருவாக்கல்.
5. இஸ்லாமிய தனித்துவம் குறித்த விழிப்புணர்வை பரந்து பட்ட வகையில் உருவாக்குவதற்கான ஊடக வலையமைப் பொன்றை ஏற்படுத்தல்.
(தொடரும்)

1 comments:

Unknown said...

thank u very much its useful 4 my degree

Post a Comment