
2013 ஆம் ஆண்டின் உலக அரசியல் நகர்வுகளில் ஏற்படப் போகும் மிகப் பாரிய 3 மாற்றங்களைப் பற்றி அண்மையில் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சர்வதேச புகழ்பெற்ற அரசியல் சஞ்சிகையான "பொரின் பொலிஸி" (Foreign Policy) விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அச் சஞ்சிகைக் குழு அவ்வறிக்கைக்கு "2013 ஆண்டை ஆட்டிப் படைக்கப் போகும் 3 முக்கிய உலக அரசியல் நிகழ்வுகள்" என்றே தலைப் பிட்டிருந்தனர். அம் மூன்று நிகழ்வுகளாவன:
-ஜரோப்பிய நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார மந்தநிலை பயங்கரமான முறையில் அதிகரித்தலும் யூரோவின் வீழ்ச்சியும்.
-அரபுலகில் நடைபெற்றுவரும் புரட்சிகள் தொடர்ந்தும் ஏனைய அரபு நாடுகளிலும் பரவுதல். குறிப்பாக, ஈராக் மற்றும் சிரியாவின் புரட்சியின் விளைவாக பல பிரிவினைகள், குழுநிலைக் கிளர்ச்சிகள் (sectarian strife) ஏற்படல்.
-உலக அரசியலைத் தீர்மானிக்கும் கதாநாயகனாகத் திகழ்ந்த ஜக்கிய அமெரிக்காவின் பலம் சர்வதேச அரசியலில் இருந்து வெகுவாகக் குறைதல்.
ஜக்கிய அமெரிக்காவின் "சர்வதேச சமாதானத்திற்கான குரோன்ஜி" ஒன்றியத்தின் அரசியல் ஆய்வாளர்களே மேற்படி ஆய்வை மேற் கொண்டனர். மத்திய கிழக்கின் அடுத்த வருட அரசியல் போக்குகள் எவ்வாறு அமையப் பெறும் என்பது தொடர்பாக அவ்வறிக்கை குறிப்பிடும் போது "அரபுநாடுகளின் எழுச்சி 2013 ஆம் ஆண்டிலும் தொடரும். இவ்வெழுச்சி மொரோக்கோ முதல் ஈரான் வரை நீண்டுசெல்லும்.
மேலும், அரபு நாடுகளின் மன்னர் பரம்பரைகளைக் கூட ஆட்டம் காணச் செய்யும் அளவுக்கு அரபு நாடுகளின் எழுச்சி விரிந்து செல்வது மட்டுமல்லாது, அரபு நாடுகளின் 2013 ஆம் ஆண்டின் அரசியல் களத்தை சூடு பிடிக்கச் செய்யும் மிகமுக்கியமான அம்சமாக இருக்கப் போகும் விடயம் இஸ்லாமியவாதிகளின் ஆட்சிகளை மதச்சார்பற்றவாதிகள் விமர்சிப்பதே" எனக் குறிப்பிட்டிருந்தது.
சிரியா மற்றும் ஈராக்கில் நடை பெற்றுவரும் புரட்சிகளைப் பொறுத்தவரை, அவை இவ்வருடம் முடிவுக்கு வரலாம் என்றும், ஆனால் ஷீயா மற்றும் ஸுன்னி முஸ்லிம்களுக்கு மத்தியிலான குழுப்பிரச்சினையாக மாற்றம் பெறும் அபாயம் உள்ளதாகவும் "பொரின் பொலிஸி" யின் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மறுபுறத்தில் எகிப்தைப் பொறுத்தவரை, எகிப்தின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பலம் பெறும் பொற்காலமாகவும், உள்ளக ஸ்தீரத்தன்மை வலுப் பெறும் வருடமாகவும் 2013 ஆம் ஆண்டு காணப்படலாம் என "பொரின் பொலிஸி" எதிர்வு கூறுகிறது. மேலும், அந்த அறிக்கையில் "எகிப்து தற்போது சந்திக்கும் நாட்கள் தனது புரட்சியின் பின் முகங்கொடுக்கும் கஷ்டமான காலமாகும். எனவே முஹம்மத் முர்ஸியின் அரசு எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள் இஸ்லாமியவாதிகளின் எதிர்காலத்தை பிராந்தியத்தில் தீர்மானிக்கும் சக்திமிக்க சவால்களாகும்" எனக் குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்காவைப் பொறுத்த வரை சர்வதேசத்தின் மீது அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்த முடியாத காலப்பகுதியாக 2013 ஆம் ஆண்டு இருக்கும் என பொரின் பொலிஸி எதிர்வு கூறுகிறது. குறிப்பாக, ஆப்கான் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறுவதனைத் தொடர்ந்து, அங்கு செல்வாக்கு செலுத்தும் சக்தியாக மாறுவதற்கு பல அயல் நாடுகள் முயற்சிக்கலாம். இதனால் அமெரிக்காவின் பலம் குன்றலாம் என்றும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
மிகக் குறிப்பாக, ஈரான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகள், அமெரிக்காவின் படைகள் நாட்டுக்கு மீண்ட பின்னர் ஆப்கானில் செல்வாக்கு செலுத்தும் சக்தியாக மாறும் என பொரின் பொலிஸி மேலும் குறிப்பிடுகிறது.
2013 ஆம் ஆண்டில் ஜக்கிய அமெரிக்காவின் முழு மொத்த கவனமும் தனது பொருளாதாரத்தை மீள் சீரமைப்பதிலேயே உருண்டோடும் என பொரின் பொலிஸி அடித்துச் சொல்கிறது. ஏனென்றால், மத்திய கிழக்கின் எண்ணை நுகர்வுக்காக பாரியளவு பணத்தை அமெரிக்கா தனது பாதீட்டில் ஒதுக்குகிறது.
அத்துடன் ஈராக் மற்றும் ஆப்கான் மீதான ஆக்கிரமிப்புகளால் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பொரின் பொலிஸி குறிப்பிடுகிறது. அமெரிக்கா தனது பொருளாதாரத்தின் ஸ்தீரத் தன்மையை மீட்டிப் பெறும் பாதையை தேடிக்கொண்டிருப்பதாகவும் அது குறிப்பிடுகிறது. எனவே, ஈரானின் அணுச் செறிவாக்கல் தொடர்பான கருத்துக்கள் கூட 2013 இல் மிதவாத போக்கையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடைபிடிக்கும் என பொரின் பொலிஸி மேலும் தெளிவு படுத்துகிறது.
மத்திய கிழக்கின் அரசியல் விமர்சகர்களின் கண்ணோட்டத்தில் 2013 இன் சர்வதேச அரசியல் மாற்றங்கள்:
அமெரிக்காவின் சர்வதேச சஞ்சிகையான பொரின் பொலிஸி தன்னுடைய அரசியல் அவதானங்களை வெளியிட்ட அதேநேரம், மத்திய கிழக்கின் இஸ்லாமிய அரசியல் பகுப்பாய்வாளர்களும் பிராந்திய அரசியல் நகர்வுகளைப் பற்றி தமது அனுமானங்களை விவரித்துள்ளனர்.
குறிப்பாக, 2013 ஆம் ஆண்டில் ஜக்கிய அமெரிக்காவின் மத்திய கிழக்கின் மீதான உறவு தொடர்ந்தும் ஈரானின் அணுவாயுத உற்பத்தியுடன் தொடர்புபட்டே அமையும். மேலும், எகிப்திலோ அல்லது ஏனைய அரபுப் புரட்சி நடைபெற்ற நாடுகளிலோ அமெரிக்கா தனது செல்வாக்கை சுதந்திரமாக செலுத்தும் அளவுக்கு தனது உள் நாட்டின் பொருளாதார நிலைமை இடம் கொடுக்கமாட்டாது என எகிப்தின் அரசியல் பகுப்பாய்வாளர் பஹ்மி ஹூவைதி கருதுகிறார்.
இன்னும் சிரியாவைப் பொருத் தவரை, 2013 ஆம் ஆண்டில் பஷ்ஷார் அஸதின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படுமானால் பிராந்தியத்தில் பல்வேறு விதமான மாற்றங்கள் நடைபெறும் என பஹ்மி ஹூவைதி விவரிக்கிறார். அவரின் வார்த்தைகளில் சொல்வதானால் "மத்திய கிழக்கின் வரை படம் மீண்டும் ஒருமுறை திருப்பி வரையப்படலாம். மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் வலுச் சமநிலையில் பாரிய மாற்றங்கள் நிகழும்" என்கிறார்.
அரசியல் விமர்சகர் பஹ்மி ஹூவைதி இது பற்றி மேலும் குறிப்பிடும் போது "சிரியாவில் 22 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அதில் 75 வீதமான முஸ்லிம்கள்" அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமா ஆவை"ச் சேர்ந்தவர்கள். நாட்டில் 13 வீதமானவர்களே ஷீயாவின் அலவிய்யா பிரிவைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்தவர்கள் 10 வீதமானவர்கள் வாழ்கின்றனர். ஆனால் நாட்டின் 13 வீதமான அலவிய்யா பிரிவினரே சர்வதிகார ஆட்சியை செய்து வந்தனர். பஷ்ஷார் அஸதின் ஆட்சி வெறுமனே அலவிய்யா பிரிவினரின் உந்துதலிலேயே நடந்தேறியது. எனவே சிரியாவில் அஸதின் வீழ்ச்சி பெரும்பாலும் பிராந்தியத்தின் பாரிய அதிர்வலைகளை உருவாக்கலாம். அவ்வதிர்வுகள் எப்படி இருக்கப் போகும் என்பது பற்றி பலரும் பல பார்வைகளைச் சொல்கின்றனர். குறிப்பாக, கீழ்வரும் இரண்டு பார்வைகள் அவற்றில் முக்கியத்துவம் பெறுகின்றன:
- சிரியாவில் ஷீயா, ஸூன்னி மற்றும் குர்திஷ் மக்களுக்கு மத்தியிலான உள்நாட்டுப் போர் வெடிக்கலாம். இதனால், எதிர்கால சிரியா ஒரு சோமாலியாவாகவோ அல்லது ஆப்கானாகவோ மாறலாம்.
- அல்லது சிரியா லெபனானைப் போல பல மதக் குழுக்களுக்கு மத்தியில் துண்டாடப்படலாம்.
ஆனால், சிரியாவில் ஏற்படும் மாற்றம் ஏற்படுத்தும் அதிர்வலைகள் வேறு ஒருகோணத்திலும் மத்திய கிழக்கின் அரசியலைப் பாதிக்கலாம். அதாவது சிரியாவில் அஸாதின் ஆட்சி பலவீனப்பட்டால், லெபனானில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பினர் நேரடியாக அதனால் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால், லெபனானின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பினர் சிரியாவினுடாக ஈரானின் உதவியைப் பெற்றே அதனைச் சாதிக்கின்றனர். எனவே, சிரியாவின் வீழ்ச்சி பிராந்தியத்தில் ஹிஸ்புல்லாவின் செல்வாக்கை நேரடியாக தாக்கும்.
யதார்த்தத்தில் ஹிஸ்புல்லாவின் வீழ்ச்சி என்பது ஈரானின் இராஜ தந்திர நகர்வுகளின் மீது விழும் பேரிடியாகும். இதனால் ஈரான் மத்திய கிழக்கில் தனிமைப்படுத் தப்படலாம். அத்துடன் ஈரானின் அணுவாயுத திட்டத்தை வைத்து விளையாடுவது இஸ்ரேலைப் பொருத்தவரை மிக இலகுவானதாக அமையும் என்கிறார் பஹ்மி ஹூவைதி.
துருக்கி 2013: மேற்குலகு அச்சம் "ஆபிரிக்காவை உஸ்மானிய மயப்படுத்தல்"
துருக்கியின் 2013 ஆண்டின் நகர்வுகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பது தொடர்பாக ஜரோப்பிய நாடுகளும், மத்திய கிழக்கில் உள்ள மதச்சார்பற்ற அரசியல் அவதானிகளும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தையே கொண்டுள்ளனர்.
குறிப்பாக, துருக்கி அரசு மிக அண்மைக் காலமாக தனது பொருளாதார அபிவிருத்தியை ஆபிரிக்கா கண்டத்திலுள்ள நாடுகளோடு பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளின் மீதான துருக்கியின் பொருளாதார செல்வாக்கு பலம் பெற்றவண்ணம் உள்ளன. இது தொடர்பாக துருக்கியின் தேசிய பத்திரிகையில் "துருக்கியும், ஆபிரிக்காவும்" என்ற தலைப்பில் எழுதிய துருக்கியின் பிரபல்யமான ஊடகவியளாளரான IBRAHIM KALIN, ஆபிரிக்க கண்டத்துடன் துருக்கியின் உறவுகளின் பல் பரிமாணத் தன்மையை விரிவாகவே விளக்கியிருந்தார். குறிப்பாக கீழ் வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
- அண்மைக் காலமாக, துருக்கியின் உயர்மட்ட இராஜதந்திர தூதுக்குழுக்கள் ஆபிரிக்காவின் பல்வேறு நாடுகளுக்கும் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் விஜயம் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, சென்ற வருடம் நடுவிலிருந்து 2013 ஆரம்பம் வரை 31 தூதுக்குழுக்கள் ஆபிரிக்காவை நோக்கி பயணித்துள்ளன.
- மிகக்குறுகிய காலத்தில் துருக்கியின் தூதுவராலயங்கள் பல ஆபிரிக்க நாடுகளிலும் ஆரம்பிக் கப்பட்டமை.
- 2008 முதல் 2012 வரையான காலப்பகுதியில்" ஆபிரிக்காவின் இராஜதந்திர நண்பன் துருக்கி" என ஆபிரிக்க யூனியன் சிறப்புப் பிரகடனம் செய்தமை.
- ஆபிரிக்காவில் மிகவும் வறுமைமிக்க 31 நாடுகள் இணைந்து உருவாக்கிய ஒன்றியத்தின் வருடாந்த மாநாட்டை துருக்கி ஏற்று நடாத்தியமை.
- 2002 ஆம் ஆண்டு வரை துருக்கி ஆபிரிக்க நாடுகளில் வெறும் 2 பில்லியன் டொலர்களை மாத்திரமே முதலீடு செய்திருந்தது. அண்மைக் காலங்களில் அத்தொகை 31 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் ஆபிரிக்காவின் பிரபல்யமான ஊடகவியளாளர்கள் "துருக்கி ஆபிரிக்கா என்ற பாரிய கண்டத்தை ஒரு தேசமாக கருதி கட்டியெழுப்புகிறது" என சிலாகித்துப் பேசியமையும் நோக்கத்தக்கது
எனவே, 2013 ஆம் ஆண்டில் ஆபிரிக்கப் பிராந்தியத்தின் மீதான துருக்கியின் செல்வாக்கை பற்றிப் பேசும் சில மேற்கு ஊடகவியலாளர்கள் "ஆபிரிக்காவை உஸ்மானிய மயமாக்கள்" (Usmanaisation of Africa) என்ற தனது பயணத்தில் இன்னொரு கட்டமாக அது இருக்கும் என எதிர்வு கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment