
தாயும் தந்தையும் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் ஒழுங்கை சரியாக புரிந்திருக்க வேண்டும். தாய் பிள்ளைகள் விடயத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் நேரத்தில், தந்தை பிள்ளைகள் விடயத்தில் கடும்போக்காக நடந்து கொள்ளக்கூடாது. அவர்கள் இருவரும் நடுநிலையான ஒரு போக்கை கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, கடும்போக்கில் எல்லை மீறுவதோ அல்லது அன்பு காட்டுவதில் எல்லை மீறி நடப்பதோ கூடாது.
கடுமையாக நடப்பதும் கடும் போக்கும் பிள்ளையின் ஆளுமையைத் தகர்த்துவிடும். அவனை இழிவடையச்செய்து, தான் அற்பமானவன் எனக்கருதத்தோன்றும். மட்டுமன்றி, அவன் தானொரு விருப்புக்குரிய மனிதனல்ல என எண்ணத்தோன்றும். அது அவனில் மனநெருக்கடிகளை அல்லது மன நோய்களை உண்டாக்கிவிடும். சிலவேளைகளில் அவனை சீரற்ற முறையில் வளரச்செய்துவிடும். அவனிடம் சமூகத்தை பழிவாங்க வேண்டும் என்ற உணர்வை வளர்த்து விடும். அவனிடம் பாவங்கள் மீதான ஆசை ஏற்பட்டுவிடும்.
இஸ்லாம் எம்மை அனைத்து மனிதர்களோடும் நல்ல பண்பாட்டுடன் நடக்குமாறு பணிக்கிறது. அவர்களுடன் வன்மையாகவன்றி, மென்மையாக நடக்கவேண்டும். எதில் மென்மை காணப்படுகிறதோ அது அழகுபெற்றுவிடும். எதில் வன்மை கலந்து விடுகிறதோ அது அலங்கோலமாகிவிடும். அல்லாஹ் அனைத்திலும் மென்மையையே விரும்புகிறான். இந்த மென்மை எமது எதிரிகளோடும் எம்மோடு முரண்படுபவர்களோடும் கூட காணப்படவேண்டும். அவ்வாறாயின் கண்குளிர்ச்சியாக அமையுமாறு வேண்டப்படும் பிள்ளைகளுடன் மென்மையாக நடந்து கொள்ளக்கூடாதா?!
"எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததி யரிடமும் இருந்து எங்களுக்குக் கண்குளிர்ச்சியை அளிப்பாயாக!" (25:74)
எனவேதான், நபி (ஸல்) அவர்கள் நாட்டுப்புற அறபிகளின் தலைவரிடம் தனது வெறுப்பை வெளிப்படுத்தினார்கள். அவர் நபியவர்கள் தனது பேரப்பிள்ளைகளுக்கு முத்தம் கொடுத்ததை அந்நியமான விடயமாகக்கருதி, பின்வருமாறு கூறினார்: “எனக்கு பத்து பிள்ளைகள் உள்ளனர். நான் அவர்களில் ஒருவருக்கும் முத்தமிட்டது கிடையாது." நபியவர்கள் அவரை நோக்கி பின்வருமாறு கூறினார்கள்: "யார் அன்பு செலுத்தவில்லையோ அவர் அன்பு செலுத்தப் படமாட்டார்." (புஹாரி, முஸ்லிம். ஹதீஸில் வந்துள்ள நாட்டுப்புற அறபி அக்ரஃ பின் ஹாபிஸ் ஆவார்.)
ஆயிஷா (றழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்: ஒரு நாட்டுப்புற அறபி றஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் குழந்தைகளுக்கு முத்தமிடுகின்றீர்கள். நாங்கள் அவர்களுக்கு முத்தமிடுவது கிடையாது" என்றார். அதற்கு றஸூல் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: "அல்லாஹ் உனது உள்ளத்திலிருந்து அன்பை எடுத்துவிட்டானா?!" (புஹாரி 5998, முஸ்லிம் 2317)
விளையாடுவதற்கும் கேளிக்கைகளில் ஈடுபடவும் சந்தர்ப்பம் வழங்கப்படுவது பிள்ளைகளின் உரிமையாகும். அவர்களின் விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் தீரும் வரை விளையாட விடவேண்டும். இது அல்லாஹுதஆலா ஏற்படுத்தி வைத்த இயல்பாகும். ஏனெனில், பிள்ளையிடம் மிகப் பெரும் சக்தி காணப்படும். அவன் விளையாட்டில் தனது சக்தியை செலவழிக்க வேண்டும். அதன் மூலமாக அவனது தசைகள் உறுதியடையும். அவனது உடம்பு பயிற்சிபெறும். அவனது செயல் உற்சாகத்தைப் பெற்றுக்கொள்ளும்.
அவனது உள்ளம் அதனால் ஆறுதல் அடையும். அவனது வயதை ஒத்தவர்கள் அவனோடு விளையாட்டில் பங்கெடுப்பார்கள். பெற்றோருக்கும் முடியுமாக இருப்பின் அவர்களும் அவர்களின் விளையாட்டில் பங்கெடுக்க வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை அவர்கள் வலிந்தாவது எடுக்க வேண்டும். உதாரணமாக அவர்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து பந்து விளையாடுவது, ஓட்டப் போட்டி வைப்பது, தமது முதுகுகளில் அவர்களை சவாரி செய்யு வைப்பது.
அதாவது தந்தை பிள்ளைக்கான குதிரையாகவோ அல்லது ஒட்டகமாகவோ மாறிவிடுவதாகும்.
ஸலபுகளிலுள்ள ஒரு அறிஞர் பின்வருமாறு கூறுகிறார்: “ஏழு வயது வரை உனது குழந்தையோடு விளையாடு. மற்ற ஏழு வயது வரை அவனுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடு. மற்ற ஏழு வயது வரை அவனை சகோதரன் போல நடத்து, பின்னர் அவனை அவனது பொறுப்பில் சுதந்திரமாக விட்டுவிடு."
நவீன காலத்தில் நாம் அறிவை பயன்படுத்தி சிந்திக்க வேண்டிய பல விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. அவை பிரித்தல், பொருத்துதல் போன்ற விளையாட்டுக்களாக காணப்படுகின்றன. அவற்றை எமது பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இன்று கணனி விளையாட்டுக்கள் (Computer Games) பல காணப்படுகின்றன. அவற்றில் எமது பிள்ளைகளின் வயதுக்கும் சக்திக்கும் பொருத்தமானவற்றை தெரிவுசெய்ய வேண்டும். மேலும் அவை எமது பெறுமானங்களுக்கும் எமது ஷரீஅத்தின் மாறா விதிகளுக்கும் ஒத்துப்போகின்ற வையாக இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பிள்ளைகளோடு விளையாடுபவராக இருந்தார்கள். அவர்கள் தமது பேரப் பிள்ளைகளை முதுகில் சவாரி செய்ய வைப்பார்கள். அவர்கள் தொழுகையில் இருந்தாலும் ஸுஜூதில் இருந்தாலும் இவ்வாறு நடந்துள்ளது. இவ்வாறு தான் நபியவர்கள் ஸுஜூதில் இருக்கும் வேளையில் ஹஸன் (றழி) அல்லது ஹுஸைன் (றழி) நபியவர்களின் முதுகில் ஏறிக் கொண்டார். நபியவர்களுக்கு ஏதாவது ஏற்பட்டுவிட்டதோ என ஸஹாபாக்கள் எண்ணுமளவுக்கு நபியவர்கள் ஸுஜூதை நீட்டித் தொழுதார்கள்.
பின்னர், ஸுஜூ திலிருந்து எழுந்து, தொழுகையை பூரணப்படுத்தினார்கள். "நபியவர்களின் ஸுஜூதை எது நீண்டதாக மாற்றியது எது?" என வினவப்பட்ட போது, நபியவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: “எனது பேரன் என்னில் சவாரி செய்தான். அவனை அவசரமாக இறக்கிவிடுவதற்கு நான் விரும்ப வில்லை." (புஹாரி, அஹ்மத்)
நபியவர்கள் பிள்ளைக்கு சவாரி செய்யும் இனிமையை துண்டித்து விட விரும்பவில்லை. கடுமையான அசைவை ஏற்படுத்தி தமது முதுகிலிந்து இறக்கிவிடவில்லை. மாறாக, பிள்ளை சவாரி செய்யும் இன்பத்தை அனுபவித்து, அதிலே சலிப்படைந்து, செல்லும் வரை விட்டுவிட்டார்கள்.
சிறியவராக இருந்த இப்னு அபீதல்ஹாவுடன் நபியவர்கள் கொஞ்சிவிளையாடுவார்கள். அவர்கள் அவனைப்பார்த்து, "அபூ உமைரே! உமது சிறிய குருவி என்ன செய்கின்றது?!" என வினவுவார்கள். (புஹாரி, முஸ்லிம்)
எனவே, எல்லைமீறிய கடும் போக்கானது பிள்ளை வளர்ப்பில் அவசியமற்றதாக இருக்கின்றது. அதுபோலவே, எல்லைமீறிய அன்பும் வேண்டப்படாத ஒன்றாக இருக்கின்றது.
பிள்ளை விரும்பியதைச் செய்து கொள்வதற்கு அவனை கவனிப் பின்றி விட்டுவிடவும் கூடாது. ஏனெனில், அவன்தான் முதல் பிள்ளை அல்லது அவனை வைத்தே மக்கள் உன்னை அழைக்க இருக்கிறார்கள். அவனே ஏக பிள்ளையாக அல்லது இறுதிப்பிள்ளையாகக் கூட இருந்துவிடலாம்.
எனவே, தவறிழைப்பவர் தண்டிக்கப்பட வேண்டும். வழிதவறுபவர் நேரான வழிகாட்டப்படவேண்டும். குறிப்பாக தவறு திரும்பத்திரும்ப நிகழ்கின்ற போது இந்த நிலை காணப்படவேண்டும். என்றாலும், நல்லவார்த்தைகளும் நல்ல நடத்தைகளும் அவனைத்திருத்தலாம். ஆனால், மென்மையாக நடப்பது இரட்டிப்பான பாவத்துக்கு இட்டுச் செல்லக்கூடாது. நாம் தவறை இன்னொரு தவறைக்கொண்டு திருத்த முற்படுவதும் உண்டு. சிலவேளைகளில் தவறை ஒரு பெருந்தவறால் திருத்த முற்பட்டும் விடுவோம்.
பெற்றோர் தன்னோடு நேர்மையாக நடக்கிறார்கள் என்பதனை பிள்ளை உணர்ந்து கொள்ள வேண்டும். மாறாக, அவர்கள் தன்னோடு மோசமாக நடக்கிறார்கள் என நினைக்குமளவுக்கு நடந்து கொள்ளவே கூடாது. எமது முன்னோர்கள் தமது பிள்ளைகளின் அனைத்து விடயங்களிலும் சரிசமமாகவே நடந்து கொண்டார்கள். முத்தமிடுவதாக இருப்பினும் பிள்ளைகளுக்கு இடையே நீதமாகவே நடந்தார்கள்.
பெற்றோர் ஒரு பிள்ளையை அதிகம் விரும்பினால் அதனை தமது நடத்தையிலும் செயற் பாட்டிலும் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். பிள்ளைகள் இதனை அறிந்தால் அந்தப்பிள்ளை விடயத்தில் அவர்களின் உள்ளம் குரோதத்தை உணர ஆரம்பிக்கும். சிலவேளைகளில் அவர்கள் தமது தந்தை அல்லது தாய் விடயத்திலும் குரோதத்தைக் காட்ட முற்படுவர். இதனைப்பற்றி அல்குர்ஆன் யஃகூப் (அலை) யினதும் அவரது பிள்ளைகளாக யூஸுப் (அலை), புன்யாமீன் ஆகியோரதும் கதையைக் கூறுகின்றது. யஃகூப் (அலை) அவர்கள் யூஸுப் (அலை) யையும் புன்யாமீனையும் மற்ற பிள்ளைகளை விட அதிகமாக விரும்பினார்.
இதனால் அவர்களின் உள்ளங்களில் மோசமான எண்ணங்கள் தோன்றின. மேலும், படுமோசமான செயற்பாடுகளும் வெளிப்பட்டன. இந்த சோக நிகழ்வுகளின் வடுக்கள் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்திருக்கின்றன.
எனவே, றஸூல் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ”அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். உங்களின் பிள்ளைகள் விடயத்தில் நீதமாக நடந்துகொள்ளுங்கள்." ஒரு தடவை ஸஹாபி யொருவர் தனது ஒரு மகனுக்கு மாத்திரம் விஷேடமான பரிசு வழங்குவதற்கு சாட்சியாக நபியவர்களை வைக்க முற்பட்டபோது நபியவர்கள் பின்வருமாறு வினவினார்கள்: "இதனைப் போன்று உமது அனைத்து பிள்ளைகளுக்கும் வழங்கினீரா?" அதற்கு அவர்: "இல்லை" என பதிலளித்தார். அப்போது நபியவர்கள்: "இதற்கு சாட்சியாக இன்னொருவரை வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் அநியாயத்துக்கு சாட்சிபகரமாட்டேன்" என பதிலளித்தார்கள். (முஸ்லிம்)
தமிழில் : றுஸ்லி ஈஸா லெப்பை (நளீமி)
0 comments:
Post a Comment