ஹலால் தொடர்பான ஜம்இய்யதுல் உலமாவின் நிலைப்பாடு பலவகையான கேள்விகளை எழுப்பவே செய்கிறது. அந்த தீர்மானத்திற்குப் பின்னால் பல நியாயங்கள் இருப்பது போலவே, அது கவனிக்காமல் விட்ட பல அம்சங்களும் இருக்கவே செய்கின்றன.
2012 இல் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நெருக்கடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழத் தொடங்கி, இப்போது அது தீவிரமடைந்துள்ளது. முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சார சக்திகள் தான் தோன்றிகளாக நடத்தவில்லை. அவர்களை பின்னின்று இயக்குகின்ற சக்திகள், எதைச் செய்ய வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கின்றன.
இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் பல சம்பவங்களைப் பார்க்கும்போது, இவ்வாறு சிந்திப்பதைத் தவிர்க்க முடியவில்லை. இதை வெறுமனே ஹலால் பிரச்சினை மட்டும் நாம் குறுக்கி விடக்கூடாது. இந்த அம்சம் இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டும்.
இந்த ஹலால் விவகாரம் பல பரிமாணங்கள் கொண்டது. அதனை ஒரு மார்க்கப் பிரச்சினையாக மட்டும் மட்டுப்படுத்த முடியாது. அது ஒருவகையில் சமூக பொருளாதாரப் பிரச்சினையும்தான். ஆழமான அரசியல் பரிமாணமும் அதற்கு உள்ளது.
இப்படி பல்முனைப் பிரச்சினை ஒன்றை ஒருதலைப்பட்சமாகக் கையாள முடியாது. எல்லாப் பிரச்சினையையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலையில் ஏற்றிவிட்டு, பலரும் குளிர்காய நினைத்ததுதான் மிகப் பெரும் அபாயமாக மாறி இருக்கிறது.
எதிரிகள் எப்போதும் ஜம்இய்யதுல் உலமாவை மட்டுமே குறிவைக்கின்றனர். முஸ்லிம் சமூகத்தின் குறைந்தபட்ச ஒற்றுமையைச் சிதைக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் குறியாகவே இருக்கின்றனர். திரும்பத் திரும்ப பந்து ஒரு இலக்கை நோக்கியே அடிக்கப் படுகிறது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையின் அரசியல் பரிமாணத்தைக் கண்டு கொள்ளவு மில்லை; அதற்குரிய கவனத்தைக் கொடுக்கவுமில்லை. தெரிந்துகொண்ட செய்யப்பட்ட அப்பட்டமான சமூகத் துரோகமாகும். பக்குவமாகக் கையாளல், இராஜதந்திர நகர்வு என்றெல்லாம் இனியும் பேசி மழுப்ப முடியாது.
அரசியல் பிரச்சினையை அரசியல் நகர்வின் ஊடாகவே அணுக முடியும். அதையும் ஜம்இய்யதுல் உலமாவின் பக்கம் நகர்த்திவிட்டு ஒதுங்கிவிட முடியாது என்பதை நமது அரசியல் வாதிகள் உணர வேண்டும்.
ஹலால் விவகாரத்தின் பின்னணியில் உள்ள ஆழ்நிலை அரசியலை, அந்த அரசியலுடன் நேரடிச் சம்பந்தமே இல்லாத ஜம்இய்யதுல் உலமாவின் மேல் சுமத்தி, அதனைத் தனிமைப் படுத்திவிட்டு, திரைமறைவில் ஒதுங்கி நாடகம் ஆடும் இந்த கடை நிலை அரசியல் போக்கை உடன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
அரங்கிற்குப் பின்னே ஆடியது போதும். இப்போது எல்லோரும் அரங்கிற்கு முன் வந்துதான் ஆட வேண்டும். அதிகார சக்திகளை எதிர்கொள்ள முடியாமல் அற்ப இலாபங்களுக்காக உண்மைகளை அழுத்தி உரைக்காமல் அடங்கிப் போகின்ற இந்தக் கோழைத்தனத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.
இது அற்பப் பிரச்சினை. அதற்குரிய அளவில் அதைப் பார்த்தால் போதுமென்றும், அதிகார பீடத்தில் உள்ளோர் நமது பக்கம் தான் இருக்கின்றனர்; எல்லாவற்றையும் அவர்கள் தீர்த்துத் தருவார்கள் என்று நமக்கு திரும்பத் திரும்பக் கூறப்பட்டது. இப்போது எல்லோரும் வாயடைத்துப் போய் நிற்கின்றனர்.
இது சமூகப் பிரச்சினையும் தான். சிவில் சமூகம் எந்தளவு தூரத்திற்கு இதில் செயல் வேகத்துடனும் அறிவாளுமையுடன் செயற்பட்டுள்ளது? எல்லோரும் அவரவருக்கு வசதியான எல்லைகளுக்குள் நின்று கொண்டுதான் கண்ணாடிக் கூட்டிற்கு கல் எறிகிறார்கள்.
விமர்சன அரசியல் அல்லது விமர்சன செயற்பாட்டை விடவும், பங்கேற்கும் அரசியல் அல்லது பங்கேற்கும் செயற்பாடே இப்போது தேவைப்படுகிறது. சமூக செயற்பாட்டாளர்களை ஒரு முகப்படுத்துகின்ற நடைமுறைச் சாத்தியமான பொறிமுறை ஒன்று இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் எத்தனையோ முனைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உண்மையான அக்கறையுடன் செயற்படுவோர் கூட, நம்பிக்கையீனத்திற்கும் மனச்சோர்விற்கும் ஆளாகியுள்ளனர். இது மிக அபாயகரமான நிலை. சமூகத்தின் அகக் கட்டுமானத்தை நன்கு வலுப்படுத்த வேண்டும். எந்த ஒரு சமூகப்பிரச்சினையிலும் கூட்டாகவும் விரிந்த கலந்தாலோசனை ஊடாகவும் உறுதியாகவுமே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.
இதில் ஒரு வகையான பொருளாதாரப் பொறி ஒன்றும் உள்ளது. பெருமுதலாளிகளின் வணிக இலக்குகள் கலந்த ஒன்றாகவே இந்த ஹலால் விவகாரம் காணப்படுகிறது. வணிக நலன்களுக்காக சமூக நலன்கள் இழக்கப்பட்டு விடக்கூடாது என்ற விடயம் எந்தளவு தூரத்திற்கு கவனிக்கப் பட்டது என்பதில் தெளிவில்லை.
குறிப்பாக ஹலால் விவகாரத்தின்போது அதன் ஆழ்நிலையில் உள்ள பன்முகப் பரிமாணங்களை, ஒரு சமூகம் என்ற வகையில் நாம் சரியாக இனங்கண்டு கொள்ளவில்லை. அதனால்தான் அதன் ஒவ்வொரு பரிமாணத்தையும் சம்பந்தமில்லாத சக்திகளின் கையில் விட்டு வைத்திருக்கிறோம்.
இது குறித்து சம்பந்தப்பட்ட சக்திகள் அங்கொன்று இங்கொன்றாய் ஆலோசனைகளைப் பெற்றிருக்க முடியும். ஆனால், அவை விரிந்த, முறையான கலந்துரையாடலுக்கு வரவில்லை. இங்கு தான் இதன் பின்னே உள்ள நிகழ்ச்சி நிரல் பற்றி சந்தேகங்கள் கிளப்பப்படுகிறது.
நமக்கிடையே செயற்பாட்டு வேகமும் ஆர்வமும் உள்ள அளவுக்கு போதிய ஒருங்கிணைப்பு இல்லை. இப்போது நாம் படிக்க வேண்டிய பாடம் அதுதான். எல்லோரையும் உள்வாங்கும் பண்பு கொண்ட ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியிலும், அதற்கான பொறிமுறையிலும் கட்டமைப்பிலுமே இப்போது நமது கவனம் குவிய வேண்டியுள்ளது.
ஒரு தலையில் எல்லாவற்றையும் சுமத்திவிட்டு, அங்கலாய்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
0 comments:
Post a Comment