Banner 468 x 60px

 

Thursday, March 14, 2013

'என்னையும் உங்களோடு சேருங்கள்!' பொது பல சேனாவிடம் ஒரு கோரிக்கை.

0 comments


bodu-bala-sena(மூதூர் முறாசில்)
நான் ஒரு முஸ்லிம். நடுத்தர வயதைத் தாண்டியவன். என்றபோதும் உறுதியாக உழைக்கக் கூடியவன். அல்லாஹ்வை மட்டும் வணங்குபவன். அவனைத் தவிர மனிதர்கள் எவருக்கும் அஞ்சாதவன். இலகுவில் எவருக்கும் விலைபோகாதவன்.  இவ்வளவுதான் எனது முக்கிமான 'டேட்டா'.

இருந்த போதும் என்னால் உங்களுக்கு நிச்சயம் உதவ முடியும் என்னும் அதீத நம்பிக்கையுடன் என்னையும் உங்களது பொது பல சேனாவில் இணைத்துக் கொள்வதற்கு ஆவன செய்யுமாறு தயவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
எனது இக்கோரிக்கையோடு எளிமையான நிபந்தனை ஒன்றையும் முன்வைக்கின்றேன்.
அதாவது, தெமடகொட சம்பவத்தின் போது 'முஸ்லிம்களும் எங்களோடு இணைந்துள்ளதாக' உதாரணம் காட்டியிருந்தீர்கள். அவ்வாறு நீங்கள் கூறுவதுபோல் உங்களோடு முஸ்லிம்கள் யாராவது இணைந்திருந்தால் 'அக்கோடரி காம்புகளை' வேறு ஒரு தலைப்பில் அழைக்க வேண்டும் என்றும் உங்களோடு புதிதாக இணைய விரும்பும் இவனை முஸ்லிம் என்ற அடைமொழியுடன் கட்டாயம் அழைக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
நான் பொது பல சேனாவின் தலைவரதும் செயலாளரதும் செயற்பாடுகளை முக்கியமாக அவதானித்து வரும் ஒருவன் என்ற வகையில் ஆரம்பத்தில் எனது சிங்கள நண்பர்களைப் போல் உங்கள் மீது எனக்கும் ஒரு நல்லபிப்பிராயம் இருக்க வில்லை. சிலவேளைகளில்  நான் உங்களை மதித்து அவர்களிடம் கருத்துக்களைக் கூறினால் கூட அவர்கள் உங்களோடு என்னையும் சேர்த்து 'பிஸ்ஸு என்று பல முறை ஏசியுள்ளார்கள்!
இருந்த போதும், இப்போது அவர்களுக்கு எதுவும் தெரியாமலேயே இக்கோரிக்கையை உங்களிடம் முன்வைக்கின்றேன். உங்களோடு சேரவேண்டாம் என்று எவர் எதிர்த்தாலும் தடுத்தாலும்  உங்களோடு சேர்ந்துதான் ஆகவேண்டும். 'நாறிப் போகும்' இந்த நாட்டில் உங்களோடு இணைந்து நல்லதை செய்வேண்டும் என்று இன்று திடீரென எடுத்த முடிவின் பேரிலேயே இக்கோரிக்கையை உங்களிடம் முன்வைக்கின்றேன்.
2013.03.10 வெளியான 'மாலபே மாநாடு' சம்பந்தமான உங்களது செய்தியாலேயே நான் இத்திடீர் முடிவிற்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இருந்த போதும் இதற்கு முன்பும் உங்களது சகோதர பௌத்த குருமார்களோடு இணைந்து கொழும்பில் பேரணிகளில் கலந்து கொண்ட பல அனுபவம் உண்டு. 2006 ஆம் ஆண்டு புகையிலை மற்றும் மதுபானத்திற்;கெதிராக பௌத்த குருமார்கள் வீதியில் இறங்கிநின்றபோது கிழக்கு மாகாணத்திலிருந்து தன்னந்தனியாக வந்து கலந்து கொண்ட சிறப்பு அனுபவமும் எனக்குண்டு.
அதற்கு முன்பும் 'பார்கக்கூடாத' படங்களை, இறக்கமதி செய்வதற்கு எதிராக செய்த ஆர்ப்பாட்டத்திலும் நான் கலந்து கொண்டிருக்கின்றேன். இத்தகைய உங்களுக்குத் தேவையான அனுபவங்களை தகைமையாகக் கொண்ட என்னையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
புனித குர்ஆனும் நபிகள் பெருமானாரின் 'ஸுன்னா' என்னும் வழிமுறையும் 'ஹராமாக்கிக் கொண்ட ஒன்றை பௌத்த குருமார்களும் 'ஹராமாக்கி' கொண்டு பேரணியயை ஏற்பாடு செய்ததனாலேயே அப்போது அதில் நானும் ஆர்மாக கலந்து கொண்டேன்.
ஆனால், இப்போது முஸ்லிம்களோடு மட்டுமல்ல பெரும்பாலான சிங்கள சகோதரர்களோடும் முரண்பட்டு நின்று, நீங்கள் செயற்பட்டுவரும் நிலையில் உங்களோடு இணைந்து செயற்பட விரும்பியதற்குக் காரணம் மேலே நான் கூறிய உங்களது செய்தியில் உங்களது வழமையான கருத்துக்களோடு 'பௌத்த மதத்தின் தர்மங்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கபட்டதே பொது பல சேனா அமைப்பென்றும் மாறாக அது ஒரு மதவாதம் இனவாதம் அல்லது கட்சி சார்ந்த அமைப்பு அல்ல என்றும்'   அழுத்தமாக தெரிவித்துள்ளீர்கள்.
இக்கருத்துதான் உங்களோடு இணைய வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. எவர் எதிர்த்தாலும்; தடுத்தாலும் இக்கருத்தானது எனக்கும் உங்களுக்கும் ஒரு உறவுப் பாலத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள்  உங்களுக்கு 'ஹலால'; வேண்டாம் என்று கூறினீர்கள் அதனை முஸ்லிம் சமூகம் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனால், முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் வாழும் காலமெல்லாம் அவர்களுக்கு 'ஹலால்'; என்பது வேண்டும். இது இச் சமூகத்தின் அவசிய தேவை. சொல்லப் போனால் இதனை முஸ்லிம்களது உயிர் நாடி என்று கூட கூறலாம். இதனை இன்று நீங்கள் முடக்கியுள்ளீர்கள். இது பௌத்த தர்மத்தின் படி அநியாயமான செயலாகும்.
இருந்தபோதும் உங்களோடு எங்கடவர்களும் இணைந்து 'ஹலால்' விடயத்தில் தீர்மானம் எட்டப்பட்டதனால் அத்தீர்மானத்தை எங்களுக்கு எதிராக இருந்த போதும் நபிகள் பெருமானாரின் வாழ்வில் இடம்பெற்ற 'ஹுதைபியா' உடன்படிக்கையும் அதன் பின்னைய விளைவுகளும் என் மனதில் ஆழப்பதிந்துள்ளதனால் அதனைப் பற்றி மேலும் இப்போதைக்கு எதுவும் கூறாது உங்களோடு சேர்ந்து நிற்பதில் உறுதியாக இருக்கின்றேன்.
நீங்கள் உயிர் கொலையை நிறுத்துவதில் அல்லது இறைச்சி வகைகளை சாப்பிடுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு எடுத்துவரும் அக்கறையை நான் மதிக்கின்றேன்.
இருந்தபோதும் இவ்விடத்தில் பௌத்த சமய ரீதியில் பார்க்கின்றபோது உயிர் கொலை சம்பந்தமான ஒரு உண்மை ஒளிந்திருக்கின்றது. அதனை எவரும் கூறுவதாக இல்லை. இவ்வுண்மையை நீங்கள் உரத்துக் கூறவேண்டும்.
புத்தபெருமான் உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் சமமாகவே பார்த்தார்.சமமாகவே மதித்தார்.அனைத்து உயிர் பலிகளையும் வெறுத்தார்.
ஆனால், நீங்கள் மாடுகளிலும் ஆடுகளிலும் காட்டும் அக்கறையை ஏனைய உயிர்களில் காட்டுவதற்கு மறுக்கின்றீர்கள்.
இலங்கையில் நாளொன்றுக்குஅறுக்கப்படும் பன்றிகளைப்பற்றியோ, வாழ்க்கை முழுதும் நடமாடுவதற்குக்கூட எவ்வித சுதந்திரமும் வழங்காது சிறைப்படுத்தி பெருமளவில் கொல்லப்படுகின்ற கோழிகளைப்பற்றியோ, எண்ணிக்கையே இல்லாமல் குஞ்சுகள் என்று கூட ஈவிரக்கமில்லாமல் கொன்றொழிக்கப்படுகின்ற மீன்களைப்பற்றியோ இன்னும் இவைபோன்ற  வேறு உயிர்கள் பற்றியோ உங்களில் எவரும் வாய் திறந்ததாக எனக்குத் தெரிய வில்லை.
எனவே,பௌத்த மதத்தின் தர்மங்களை பாதுகாப்பதே உங்கள் உயரிய நோக்கம் என்பதால் இது சம்பந்தமாக இனி நல்லதொரு தெளிவை ஏற்படுத்துவதற்கு நீங்கள் முனைவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் மீதும் மிகுந்த ஆதரவு வைக்கின்றேன்.
புத்த தர்மத்தில் ஹறாமாக்கப்பட்ட(தடுக்கப்பட்ட) பல பெரும்பாவங்கள் நமது பௌத்த நாட்டில் நிலைகொண்டுள்ளன. உதாரணத்திற்கு சிலவற்றை கூறி அவற்றை இல்லாமற் செய்வதில் உங்களோடு கைகோர்த்து நிற்பதற்கு ஆசைப்படுகின்றேன்.
எல்லா தீச் செயல்களுக்கும் தலையானதாக போதை வஸ்துப்பாவனை விளங்குகின்றது. புத்த தருமத்தின் படி போதைவஸ்தைப்பாவிப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் போதைப் பொருட்களை மதுபானங்கள் என்றும் அபாயகரமான போதைப் பொருட்கள் என்றும்  இரண்டாகப் பிரித்து ஒன்றுக்கு அனுமதி வழங்கி மற்றதை தடைசெய்துள்ளது.
புத்தபெருமான் தடைசெய்த மதுபானத்தை நாட்டிலுள்ள பெரும்பாலும் அனைத்து நகரங்களிலும் இரவு பகலாக விற்பனை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் கேவலமான நிலைமை இந்த பௌத்த நாட்டில் மேலோங்கிக் காணப்படுகிறது. பௌத்த தர்மத்திற்கு எதிரான இந்நிலைமை பற்றி பௌத்த தர்மத்தை காப்பதற்கு புறப்பட்டுள்ள நீங்கள் மதுபானமில்லாத பௌத்த நாட்டை உருவாக்குவதற்கு முன்வருவீர்களாயின் உங்களது போராட்டத்தில் முன்னணியில் நின்று செயற்படுவதற்கு என்னையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
பௌத்த தர்மத்தின்படி தடைசெய்யப்பட்ட விபச்சாரம் இன்று சாதராணமாக அரங்கேறி வருகின்றது. நகரங்கள் தோறும் விபச்சார விடுதிகள் இரகசியமாகவும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உல்லாச விடுதிகளில் பரகசியமாகவும் (புத்த தர்மத்திற்கு விரோதமான இக்கேடு கெட்ட செயல்) இடம்பெற்று வருகின்றது.
நகரத்திலும் தூரத்துக் கிராமங்களிலுமுள்ள சிறுவர்களும்  சில பாடசாலை மாணவர்களும்  கூட முழு சமூகத்திற்கும் கேடான இச்செயலின் வாடிக்கையாளாராக உள்ளனர். சில பணமுதலைகளின் தசைப்பசிக்கு ஆட்பட்டு எதிர்காலத்தை ச10னியமாக்கிக் கொள்ளும் இவ்வகுதியினரை காப்பதற்கும் அரசாங்கத்தினால்  அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளை கண்காணிப்பதற்கும் உத்தியோக பற்றற்ற பொலிஸாராக உங்களினால்  செயற்படமுடியுமாக இருந்தால் அதில் முழுமூச்சாக உதவுவதற்கு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புத்ததர்மத்தின் போதனைக்கு மாறாக களியாட்ட விடுதிகளுக்கும் சூதாட்ட விடுதிகளுக்கும் சுதந்திரமாக இயங்குவதற்கு இந்த பௌத்த நாட்டில் வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை மீளப்பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுப்பதற்கு  நீங்கள் முயற்சியெடுக்க வேண்டும்.
இன்று நமது பௌத்த நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகமும் பாலியல் வன்முறைகளும் பெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றது. இதற்கு உதவும் வகையில் பெருமளவான இணையத்தளங்களும் வேறு ஊடகங்களும் எவ்வித தடங்களும் இல்லாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றை கைபேசிகளில் பார்க்கவும் பரிமாறவும் முடியுமாக இருக்கின்றது. இதனால் இளம் சமூதாயமும் இளம் குடும்பங்களும் மோசமாகப் பாதிப்படைந்து வருகின்றன. எனவே,இத்தகைய இணையத்தளங்களை பார்வையிடமுடியாதவாறு தடுப்பதில் அக்கறையற்றிருக்கும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது புத்ததர்மத்தை காப்பதற்குவந்த உங்களது பொறுப்பாகும்.இப்பொறுப்பிலும் உங்களோடு ஒன்றினைய என்னையும் சேருங்கள்.
நமது பௌத்த நாட்டில் வயது வந்த பெண்கள் பாலியல் பொருட்களோ என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் அணியும் ஆடைகள் உருவெடுத்துள்ளன.
பாலியல் கவர்ச்சிகளை தூண்டத்தக்கவாறு அரைகுறையான ஆடையை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் அணிவதற்கும் கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்தினால் பாலியல் வன்முறைகளை ஓரளவு குறைக்கமுடியும் என்பது எனது உறுதியான கருத்து.
நான் ஓரு முறை (2005 ஆம் ஆண்டளவில்) கந்தளாய் பிரதேசத்தில் என்னோடு நண்பர் போல் பழகும் எனது வயதொத்த பௌத்த குருவோடு பேசிக் கொண்டிருந்தபோது மாணவர்கள் அணியும் ஆடை சம்பந்தமாக அவர் தனது மனவுணர்வை இவ்வாறு தெரிவித்தார்.
'தஹம் பாசலுக்கு' (பௌத்த நெறிப் பாடசாலைக்கு);   பௌத்த மாணவர்கள் அணிந்து வருகின்ற ஆடைகளைப்பார்க்கும் போது ஒரு வகையான மனவுணர்வும் பின்பு அவர்களை பொது பாடசாலையில் காணுகின்ற போது வேறு வகையான மனவுணர்வு ஏற்படுவதாகவும் கூறினார்.
பொதுப் பாடசாலைகளில் மாணவர்கள் அணியும் ஆடைகள் பௌத்த கலாசாரத்திற்கு உட்பட்டதல்ல என்றும் அவர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நான் முஸ்லிம் மாணவர்களை அவர்களது ஆடையுடன் பார்க்கின்றபோது அது உங்களுக்கு எத்தகைய மனவுணர்வை தோற்றுவிக்கின்றது என்று கேட்டதும் அது தஹம் பாசலுக்கு வரும் மாணவர்களைப் பார்க்கின்ற போது ஏற்படும் மனவுணர்விற்கு சமமாக அமைவதாக தெரிவித்தார்.
அவருடனான விரிவான கலந்துரையாடலை நீங்கள் கிரகிக்கும் வகையில் மிகவும் சுருக்கமாக தந்துள்ளேன்.
இங்கு உடை விடயத்தில் எவ்வளவோ செய்யவேண்டியிருக்க பௌத்த மதப் போதனைக்கு எதிராக நீங்கள் செயற்படமாட்டீர்கள் என்று நான் நன்புகின்றேன்.
இன்று இந்த பௌத்த நாட்டில் நாளொன்றுக்கு அறுக்கப்படும் மாடுகளை ஒத்த எண்ணிக்கையில் அல்லது அதையும் தாண்டிவிட்ட எண்ணிக்கையில் சட்டவிரோத கருச்சிதைவுகள் இடம்பெற்று வருகின்றது. புத்தமத போதனைக்கு எதிரான நாகரீகமற்ற இம்மனிதப் படுகொலைகள் சம்பந்தமாக நீங்கள் இன்னும் ஒரு வார்த்தைதானும் பேசாமல் இருப்பது எனக்குப் புதுமையாக இருக்கின்றது. இங்கு நீங்கள் உங்களது கவனத்தை செலுத்துவீர்களெனில் உங்களுக்கு நானும் ஒத்துழைக்க விரும்புகின்றேன்.
நீங்கள் பௌத்தர்களின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக பௌத்த அபிவிருத்தி வங்கியொன்றை அமைப்பதில் எடுக்கும் ஆர்வத்தை வரவேற்கின்றேன்.
இன்று நாட்டு மக்கள் அனைவரையும் வட்டி வாட்டி வதைக்கின்றது. இவர்களின் மீட்சிக்காக நீங்கள் பௌத்த தர்மத்தின் போதனைக்கிணங்க வங்கியொன்றை அமைப்பது மெச்சத்தக்கவிடயமேயாகும். ஏனெனில் அத்தகைய வங்கியில் வட்டி முறையை முன்னெடுத்துச் செல்ல முடியாது.
இவ்வாறாக ஏராளமான விடயங்களில் உங்களோடு முழு மூச்சாக இணைந்து செயற்படுவதற்கு நான் ஆர்வமாக இருக்கின்றேன். இப்போது உங்களது அழைப்பிற்காக  காத்திருக்கின்றேன்.
இறுதியாக ஒரு வசனம் உங்களுக்கு,
என்னை உங்களது பொது பல சேனா அமைப்பில் சேர்ப்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ நீங்கள் முடிவெடுப்பீர்களாயின் முதலில் புத்த தர்ம போதனைகளை மீளவும் மீட்டிப்பார்த்து அத்தர்ம போதனைகளின் படியே நீங்கள் முழுமையாக இசைந்து அசைவதாகவும் உங்களோடு இணைந்து வாழத்துடிக்கும் ஒரு இனத்திற்கெதிராக நீங்கள் செய்வனவெல்லாம் அப்போதனைப்படியே நீங்கள் செய்வதாகவும் உங்களில் எவருக்காவது மனசாட்சி சேசுமாக இருந்தால் அவர் மட்டும் என்னோடு பேசுங்கள்!
நன்றி!

0 comments:

Post a Comment