
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழிப்பட்டு அவர்களைப் பின்பற்றுவது பற்றி அல்லாஹ் அர்குர்ஆனில் சுமாராக நாற்பது இடங்களில் கூறுகிறான். எனவே, நபியவர்களை பின்பற்றினாலேயன்றி, அல்லாஹ்வின் அடியார்களுக்கு வெற்றியில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பு வைப்பது ஈமானின் சுவையைப் பெற்றுக்கொள்வதற்கு காரணமாக அமைகிறது. நபியவர்கள் கூறினார்கள், ‘எனது ஆத்மா எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளை ஆகியோரை விட அவர்களுக்கு மிக அன்புள்ளவராக ஆகும் வரை ஈமான் கொண்டவராக ஆகமாட்டார். (நூல்கள் : புகாரி, முஸ்லிம்)
நபிகளாரின் வாழ்க்கை ஒரு உபதேசமும், படிப்பினை தரக்கூடியதும், பின்பற்றத்தக்கதுமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் அழகிய முன்மாதிரி இருந்தாலேயன்றி எதையும் நாம் பின்பற்றக்கூடாது. இப்னுல் வழ்ழாஹ் கூறுகிறார்கள். “ஒரு மரத்தின் கீழ் நபியவர்கள் பைஅத் செய்யப்பட்டார்கள். அவரின் மரணத்திற்குப் பிறகு மக்கள் அங்கு சென்று தொழ ஆரம்பித்தார்கள். இதனால் பித்னா ஏற்படும் என பயந்த உமர் (ரழி) அவர்கள் அம்மரத்தை வெட்டி விடும்படி உத்தரவிட்டு அதனை வெட்டிவிட்டார்கள்” (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
ஹிராக் குகையைப் பற்றி இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது, “நபித்துவத்திற்கு முன் அக்குகையிலே நபியவர்கள் தியானித்திருந்தார்கள். அங்கேதான் முதன் முதலில் வஹியும் இறங்கியது. எனினும், அதன் பின்பு எப்போதாவது அதற்கென்று நபியோ, அவர்களின் தோழர்களோ ஏறியதுமில்லை, அதன் பக்கம் நெருங்கியதுமில்லை. நபித்துவத்திற்குப் பின் 10 வருடங்கள் மக்காவில் இருந்தார்கள். ஹிஜ்ரத்திற்குப் பின் பல தடவைகள் மக்காவுக்கு உம்றாவுக்காக சென்றுள்ளார்கள். மக்கா வெற்றியின் போது சுமாராக 20 நாட்களாக ஹிறாக் குகைக்கண்மையில் தங்கினார்கள். ஆனால், அக்குகையை தரிசிக்கவென நபியவர்களோ, மற்றும் ஏனைய முஃமின்களோ செல்லவில்லை” (நூல்: மஜ்மூஉல் பஃதாவா : 27 : 251)
அப்தில்லா இப்னு அம்ர் இப்னும் ஆஸ் (ரழ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். என்னைப்பற்றி ஏனையோருக்கு எத்தி வையுங்கள், (நான் சொல்லாததை சொன்னதாகவும், செய்யாததை செய்ததாகவும்) என் மீது பொய்யுரைப்பாரோ, அவர் தனக்கென நரகத்தில் ஓர் இருப்பிடத்தை ஆக்கிக் கொள்ளட்டும் என நபியவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி)
அல்பர்றா இப்னு ஆஸிப் (ரழ்) அவர்கள் கூறுகிறார்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்களிலேயே அழகிய முகம் உடையவர்களாகவும் அழகிய உருவ அமைப்பு உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் வெளிப்படையாகத் தெரியுமளவிற்கு உயரமானவர்களாகவும் இல்லை குட்டையானவர்களாகவும் இல்லை. (நூல் : புகாரி) மேலும் அவர்களே கூறுகிறார்கள்: நபியவர்கள் நடுத்தர உயரமுடையவர்களாகவும் (மேல் முதுகும் மார்பும் விசாலமான நிலையில்) இரண்டு புஜங்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலை முடி அவர்களின் காதுகளின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். அதை விட அழகான ஆடையை நான் கண்டதேயில்லை. (நூல் : புகாரி)
ஒருவர் அல்பர்றா இப்னு ஆஸிப் (ரழி) அவர்களிடம் நபியவர்களின் முகம் வாலைப் போன்று இருந்ததா? எனக்கேட்க இல்லை பூரண சந்திரனைப் போன்று இருந்தது எனப் பதிலளித்தார்கள். (நூல் : புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. மற்றும், நபியவர்களின் (உடல்) நறுமணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தையும் நான் நுகர்ந்ததில்லை என அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் : புகாரி, முஸ்லிம்) நபியவர்களின் பண்புகளில் ஒன்றுதான் வெட்கம், அபூஸயீதுல் குத்ரி (ரழி) அவர்கள் கூறுகிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தார்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால் அதனை அவர்களின் முகத்தில் தெரிந்து கொள்வோம். (நூல் : புகாரி)
இவைகள் நபியவர்களின் உருவ அமைப்பு, குணம் ஆகியவற்றின் பண்புகளின் சுருக்கமாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் உருவ அமைப்பு, மற்றும் குணத்தை பூரணமாகவே கொடுத்திருந்தான்.
உங்கள் குழந்தைச் செல்வங்களுக்கு நபியின் மீது வைக்கக்கூடிய அன்பைப் பற்றியும், நபியின் குடும்பத்தாரைப் பற்றியும், அல்குர்ஆனின் மாண்பைப் பற்றியும் நல்லொழுக்கமாக இம்மூன்றையும் கற்றுக் கொடுங்கள் என நபியவர் பணித்தார்கள். அந்த வகையில் தான் வாரா வாரம் நபிகளாரின் அழகிய முன்மாதிரிகளைச் சுமந்து “உஸ்வதுன் ஹஸனா” வெளிவரும்.
0 comments:
Post a Comment