Banner 468 x 60px

 

Thursday, March 21, 2013

உண்மையை வெளிப்படையாகப் பேச முடியாத அரசியல் கோழைத்தனம்!

0 comments
hand-writingமுஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு என்ன நடந்தது? நெருக்கடியான, இக்கட்டாண தருணங்களில் கூட இவர்கள் காணாமல் போவது ஏன்? எத்தனையோ பேர் உள்ளும் புறமும் அங்கலாய்த்து, பொரிந்து தள்ளியும் இவர்கள் இன்னும் வெளியே வராமல் இருப்பது ஏன்?

இவ்வாறான கேள்விகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. ஆனால், அதற்கு முறையான பதில்கள் இல்லை. தேர்தல் காலங்களில் வீர வசனங்கள் பேசிய பலரது குரல்கள், சத்தும் சுரத்தும் இல்லாமல் அடங்கிப் போயிருக்கிறது.
இதற்கு என்ன காரணம்? உண்மையை வெளிப்படையாகப் பேச முடியாத கோழைத்தனம் என்பதைத் தவிர, இதற்கு என்ன வேறுபதில் இருக்கிறது? நாசூக்காக எதையும் செய்ய வேண்டும் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
இன்னும் சிலரோ சிலர் தொலைக்காட்சிக்கு முன்னே தோன்றி முழு சமூகத்திற்கு அரசியல் வகுப்பெடுக்கிறார்கள். வேறு சிலருக்குப் பேசுவதையும் அறிக்கை விடுவதையும் தவிர வேறு எதுவும் தெரியாது.
காவி உடைப் பயங்கரவாதம் என்று அதிரடி வசனங்களை தேர்தல் காலத்தில் அவிழ்த்துவிட்ட குரல்கள், பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக பீத்திய குரல்கள், உரிமைக் குரல்கள், அபிவிருத்திதான் ஆதாரம் என்று குரல் எழுப்பிய கோஷங்கள் எல்லாமே இப்போது எங்கு போயின?
நெருக்கடியான சந்தர்ப்பத்திலேயே மக்களுக்கு வழிகாட்டலும் தலைமைத்துவமும் தீர்வும் தேவைப்படுகிறது. பிரச்சினை இல்லாத இயல்பான நாட்களில் இவர்களை மக்களுக்கு ஞாபகம் வருவது கூட இல்லை.
ஆபத்தில் உதவாத நண்பர்கள் போலவே இந்தத் அரசியல் தலைவர்களும் ஆகிவிட்டார்கள். தலைவர்களாக தலை நிமிர்ந்து படங்காட்டியவர்கள், இப்போது தலை கொடுக்க தயங்குகிறார்கள். எல்லோரும் தங்களது வசதியான உலகங்களுக்குள் ஆமைகள் போல் அடங்கிப்போய்விட்டார்கள்.
ஆனாலும், இவர்களை விட்டுவிடுவது எந்த வகையிலும் சரியல்ல. மக்களின் வாக்குகளைப் பெற்று மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப் பட்ட இவர்களை, வகை சொல்லுபவர்களாக  பதில் கூறுபவர்களாக ஆக்கியே தீரவேண்டும்.
தீர்க்கமான பதில்களையும் காலப் பொருத்தமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு இவர்களுக்கு பலமான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். மக்கள் மன்றத்தின் முன் இவர்களைக் கொண்டுவந்தே தீரவேண்டும்.
அதிகார சக்திகளுக்கு முன் ஆணித்தரமாகவும் சமயோசிதமாகவும் பேசத் தயங்குகின்ற இவர்களுக்கு, அதைச் செய்வதற்கான திராணியைக் கொடுத்தே ஆகவேண்டும்.
எல்லாப் பிரச்சினையோடு சேர்த்து இதுவும் ஒரு பிரச்சினைதான். எனினும், இந்தப் பிரச்சினையை தீர்த்தேயாக வேண்டும். தாம் தப்பிவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் இவர்களை, இந்த எரியும் பிரச்சினையுள் சம்பந்தப்படுத்தியே ஆகவேண்டும்.

0 comments:

Post a Comment