
ஆற்றலும் சக்தியும், பொருளாதார வசதியும் படைத்த ஒருவன் விவாகஞ் செய்யாது விட்டால் விபசாரத்தில் விழுந்து விடக்கூடிய அச்சம் தோன்றினால் அவன் விவாகஞ் செய்வது ‘வாஜிபு’ கடமையாகும்.
ஒரு பெண் விவாகஞ் செய்யாது தனிமையில் வாழும் போது கற்பைக் காக்க இயலாது போகும் எனும் அச்சம் தோன்றினாலும் அவள் விவாகஞ் செய்வது கடமையாகும்.
மேலே கூறப்பட்ட தகைமைகளைப் பெறாத ஆணும், திருமண ஊக்கமற்ற பெண்ணும், விவாகஞ் செய்வது சுன்னத்தாகாது. மக்றூஹ் என்பது சில அறிஞர்களின் கருத்தாகும்.
மன அமைதி, சந்ததி விருத்தி ஆகியவற்றை தனது முதல் மனைவியின் மூலம் அடைந்துகொள்ள முடியாத நிலையிலுள்ள ஒருவன் அவற்றை அடைந்து கொள்ளும் நோக்கில் ஏக காலத்தில் இரண்டு, மூன்று அல்லது நான்கு மனைவியரை மணம் முடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.
இவ்வாறு மண முடிக்கும் போது முன்னைய மனைவியரின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கப் பல நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதே கண்ணோட்டத்திலேயே ஒரு விதவையை மறுமணம் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.
கணவனும், மனைவியும்
விவாகத்தின் மூலம் இணையும் கணவன் மனைவியருக்கு அல்குர்ஆனும், அல் ஹதீஸ¤ம் பல கடமைகளை விதித்துள்ளன. அல்குர்ஆன் ‘உங்கள் மனைவியர் உங்களுக்கு ஆடையாவர், நீங்கள் அவர்கட்கு ஆடையாவீர்கள் (2 : 187) என்று கூறுகின்றது. பரஸ்பரம் மானத்தைக் காப்பதிலும் ஒத்தாசைகள் புரிவதிலும் இருவரும் சமமானவர்களே.
விவாகத்தின் மூலம் இருவரும் முழுமை அடைகின்றனர். இதை நபி (ஸல்) அவர்கள் ‘ஓர் அடியான் விவாகத்தின் மூலம் தனது தீனில் அரைவாசியை நிரப்புகின்றான். மீதியுள்ள அரைவாசிக்காக அவன் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும் (பைஹகீ)
கணவன் மனைவிக்குரிய பொதுவான கடமைகள் / கடமையுணர்வு
இருவரும் தாம் ஏற்றுள்ள பொறுப்பில் அல்லாஹ்வுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் என்ற உள்ளச்சத்துடன் அதன் புனிதத்தையும் மகத்துவத்தையும் உணர்ந்து தமது பங்கை நிறைவேற்றுவது கடமையாகும். குடும்பத்துக்காக உழைக்கும் போது ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைச் சகித்துக் கொள்ளல் சிறப்பானது.
ஆலோசனை, புரிந்துணர்வு
கணவன், மனைவி இருவரும் தமக்கேற்படும் குடும்பப் பிரச்சினைகளில் ஒருவரை ஒருவர் மதித்தும் புரிந்துணர்வுடன் ஆலோசனை கேட்கவும் வழங்கவும் வேண்டும்.
கணவனும் குடும்பத் தலைமையும்
குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை அல்லாஹ் ஆணிடமே கையளிக்கின்றான். மனம் தளராது நிலைகுலையாது உறுதியுடன் இருக்கும் பண்பு பெண்களை விட ஆண்களிடமே அதிகம் இருப்பதால் தலைமை ஆணிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இயற்கைக்குப் பொருத்தமானதே.
இதை பின்வரும் திருமறை வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. ‘பெண்களின் நிர்வாகிகளாக ஆண்களே இருக்கின்றனர் (4 : 34) ‘ஆயினும் ஆண்களுக்குப் பெண்கள் மீது ஓர் உயர்நிலை உண்டு (2 : 228) ‘அவர்கட்கு ஆடையும் ஆகாரமும் கிரமமாகக் கொடுத்து வருவது குழந்தையின் தகப்பன் மீது கடமையாகும். (2 : 233)
ஒருவன் செய்யும் செலவுகளில் சிறந்தது அவன் தனது குடும்பத்துக்குச் செய்யும் செலவே (முஸ்லிம்)
மனைவிக்குரிய அத்தியாவசியச் செலவுகளை அவளுடைய குடும்பத் தரத்துக்கேற்பச் செய்ய வேண்டும்.
விசுவாசிகளே பெண்களை அவர்களின் விருப்பமின்றி பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல (4 : 19)
எம். எம். ஆதம்பாவா
தொலைக்கல்வி சிரேஷ்ட போதனாசிரியர்
0 comments:
Post a Comment