Banner 468 x 60px

 

Sunday, March 3, 2013

சமூகத்தினதும் சமூகத் தலைமையினதும் முதிர்ச்சியும் விவேகமும

0 comments
editorial2012 இல் முஸ்லிம் சமூகத்தை உசுப்பேத்தும் பல முனைப்புகள் தொடராக இடம்பெற்று வந்தன. 2013 இல் அது மேலும் சூடுபிடித்திருக்கிறது. பலமுனை சவால்களை எதிர்கொள்ள வேண்டிய வரலாற்றுத் தேவையும் நிர்ப்பந்தமும் எழுந்துள்ளது.

இலங்கை முஸ்லிம் சமூகம் தனது வரலாற்றில் மிக நெருக்கடியானதும் சவால் நிறைந்ததுமான காலகட்ட மொன்றை வந்தடைந்துள்ளது. இந்த கால சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக பல வகையான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வேறுபட்ட கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தீவிர முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்கள் மூலம், அச்ச மனநிலை ஒன்றை ஏற்படுத்தும் தந்திரமும் முன்னெடுக்கப்பட்டது. முஸ்லிம்களை, பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, ஜிஹாத் பூச்சாண்டி காட்டும் பழைய தந்திரங்கள் அவ்வளவாக எடுபடவில்லை என்பது இந்த இனவாத சக்திகளுக்கு நன்கு தெரியும்.
ஆதலால், புதிய பாணியில் எதிர்ப்பிரச்சாரங்களை பரப்பத் தொடங்கியுள்ளனர். அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடும் தந்திரங்களை இவர்கள் கையில் எடுத்தனர். தொடர்ந்தும் அதனையே பிரச்சாரப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்குப் பின்னே தேசிய சக்திகள் மட்டுமல்லாது, சர்வதேச சக்திகளும் உள்ளன என்பது தெட்டத் தெளிவாகியுள்ளது.
வன்முறை வழிக்கு இழுக்கும் சண்டித்தனத்தை முஸ்லிம்கள் கையில் எடுக்க வேண்டும் என இந்த இனவாத சக்திகள் வரிந்து கட்டிக்கொண்டு செயற்படுகின்றன. இவ்வாறான உணர்ச்சிகரமான, மிகைப்படுத்தப்பட்ட செயற்கைச் சூழலை, நுணுக்கமாகவும் விவேகமாகவும் எதிர்கொள்ளும் பக்குவம் முஸ்லிம் சமூகத்திற்கு வந்திருக்கிறது என்பது மிக ஆறுதலான செய்தி.
அமைதியாக நின்று நிதானித்து செயற்படும் போக்கு சமூகத்தில் வளர்ந்து வருகிறது. எல்லா இடங்களிலும் இது குறித்து நன்கு அலசி ஆராயப்படுகிறது. பிரச்சினைக்கான காரணிகளை வெளியில் மட்டும் கண்டுகொள்ளாமல், நமது தரப்பில் உள்ள குறைபாடுகள் எவை என்று திரும்பிப் பார்க்கும் போக்கை எமது சமூகத்தில் அவதானிக்க முடிகிறது. இது எவ்வளவு பெரிய வளர்ச்சி நிலை!
குத்பாக்கள், கலந்துரையாடல்கள், ஊடகங்கள், இணையம், மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் என பல தளங்களிலும் அறிவூட்டப்படலும் சரியான திசையை நோக்கி வழிப்படுத்தலும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. பத்திரிகையாளர் மாநாடுகள், ஊடக நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் வளர்ச்சிப் போக்கு தென்படுகிறது. நாளுக்கு நாள் இதில் தேர்ச்சியும் அனுபவமும் முதிர்ச்சியும் வளர்ந்து வருவது மிக ஆரோக்கியமான ஒன்று.
அண்மையில் ஜம்இய்யதுல் உலமா எடுத்திருக்கும் இரு நகர்வுகள் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளன. குறிப்பாக ஹலால் சான்றிதழ் வழங்கும் விடயத்தில், அது முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்று வரையறை செய்து நடத்திய ஊடகவியலாளர் மாநாடு கவனத்திற்குரியது. முஸ்லிம்கள் தங்களது மார்க்கப் பெறுமானங்களை, முஸ்லிமல்லாதோரிடம் -குறிப்பாக சிங்களவர்கள் மீது- திணிக்கிறார்கள் என்ற குற்றச் சாட்டை மறுத்துரைக்கும் கவனமான நகர்வே இதுவாகும். நிலைப்பாட்டில் இது எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. உண்மையில், உபாய ரீதியான ஒரு முன் நகர்வே இதுவாகும்.
அதேபோல இப்போது, ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறிமுறையை அரசாங்கம் கையேற்க வேண்டும் என அது வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுவும் மிகவும் குறிப்பிடத்தக்க மூல உபாய நகர்வாகும். ஹலாலை ஒழிப்பதற்கான ஆண்டாக இவ்வாண்டை பொது பல சேனா பிரகடனப்படுத்தியிருந்தது. அத்துடன் ஹலால் சான்றிதழ் வழங்குவதை மார்ச் மாதத்தினுள் ஜம்இய்யதுல் உலமா வாபஸ் பெற வேண்டும் என சமீபத்தில் மஹரகமயில் இடம்பெற்ற கூட்டத்தில் அது கடும் தொனியில் கேட்டிருந்தது.
இவ்வாறான அச்சுறுத்தல் பாணியிலான அறிக்கைகளுக்கு அமைதியாகவும் விவேகமாகவும் அமைந்த பதிலே இதுவாகும். இங்கு ஹலால் வாபஸ் பெறப்படவில்லை. மாறாக அதன் சட்டவலு மேலும் உறுதிப்படுவது மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. அரசாங்கம் ஹலால் சான்றிதழ் வழங்குமாயின் அதன் சட்டபூர்வத் தன்மை வலுவடையும்.
இதற்கான பொறிமுறை எவ்வாறு அமையும் என்ற கேள்விக்கு, உடனடிப் பதில்கள் இல்லை. எனினும், அதற்கான பொறிமுறைகள் கவனமான உரையாடல்கள், கருத்துப் பகிர்வுகள் ஊடாகவே கண்டடையப்பட வேண்டும். இதில் சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனினும், தெளிவான வழிமுறைகள் வரையறை செய்யப்படாத நிலையில், அவசர அவசரமாக தீர்ப்புக் கூறுவது அல்லது முடிந்த முடிவைச் சொல்வது பொருத்தமற்றது.
நாடெங்கும் முஸ்லிம் சமூகம் இந்தப் பிரச்சினையை இறைவனின் முன்சாட்டியிருக்கிறது. எல்லா இடங்களிலும் பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன. நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி இதில் கிடைக்கும். எதிர்கால நகர்வுகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றபோது, சமூகத்தின் பல மட்டங்களிலும் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் மற்றும் துறைசார்ந்தோரின் ஆலோசனை என்பன நன்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இது சமூகத் தலைமைக்கு முன்னுள்ள அமானிதமும் கடமையுமாகும்.
முடிவுகள் நகர்கின்ற திசைகளைப் பார்க்கின்ற போது, தாமதமாகியேனும் பல ஆலோசனைகள் கவனத்திற் கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற திருப்தி ஏற்படுகிறது. எம்மிடம் குறைபாடுகள் இல்லை என்பதல்ல. அவை இருக்கவே செய்கின்றன. ஆனால், முன்னரை விடவும் ஒரு சமூகம் என்ற வகையில், நாம் பல தளங்களிலும் முன்னேறி வருகிறோம் என்பது தான் மகிழ்ச்சிக்குரியது.
யார் வென்றது, தோற்றது என்பதற்கப்பால், இந்த நாட்டின் சகவாழ்வும் சமூக நல்லிணக்கமுமே நமது தலையாய நோக்கமும் எதிர்பார்ப்பும் என்பது நன்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment