Banner 468 x 60px

 

Saturday, March 2, 2013

யதார்தத்தை புரிந்து வாழ வழி காட்டும் இஸ்லாம்

0 comments

உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் பல வகையான பொறுப்புக்களும் கடமைகளும் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளன. அவனை அல்லாஹுத்தஆலா மனம் போனபடி வாழ்ந்துவிட்டுச் செல்வதற்காகப் படைக்கவில்லை.
அல்குர்ஆனிலே அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகின்ற போது’ (நபியே) இன்னும் உமதிரட்சகன் மலக்குகளிடம் நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) படைக்கப் போகிறேன் எனக் கூறியதை (நினைவு கூர்வீராக) (அல்பகரா 30) இந்த வசனம் மனிதர்கள் இந்த உலகில் அல்லாஹ்வின் பிரதிநிதிகளாக பல பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள் என்பதை நினைவூட்டுகிறது. என்றாலும் மனிதர்கள் அல்லாஹ் தங்களுக்களித்த உயர் அந்தஸ்த்தை மறந்து வாழ்வதன் விளைவுதான் இன்று உலகில் இடம்பெறுகின்ற அராஜகங்களும், அசிங்கங்களுமாகும்.
இன்று மனிதர்கள் உலக விடயங்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு மோதுகின்ற நிலையை காண முடிகிறது. செல்வங்கள், ஆட்சி, அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஏனையவர்களை எதிரியாகக் கருதி கொலை, கொள்ளை, பழிக்குப் பழி வாங்கல் போன்ற மிருகத்தனமான விடயங்களில் ஈடுபடுகின்றமை மனிதன் இந்த உலகில் தான் வந்ததற்கான நோக்கத்தை மறந்து தோல்விக்கான பாதையில் பயணிக்கின்றான் என்பதனையே காட்டுகின்றது.
இஸ்லாம் மார்க்கமானது உலகத்தை வெறுத்து ஒதுங்கி வாழுமாறு ஒருபோதும் மனிதர்களுக்குக் கூறவில்லை. அவ்வாறே உலகத்தை தமது முழு நோக்கமாகக்கொண்டு வாழ்வதையும், விரும்பவில்லை.
இஸ்லாம் ஒரு நடுநிலையான கொள்கை எல்லா விடயங்களிலும் மனிதர்கள் நடுநிலையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்ற மார்க்கம். எனவேதான் அல்குர்ஆன் எங்களை பின்வருமாறு ஏவுகிறது. ‘தொழுகையை நிறைவேற்றிவிட்டால் (பள்ளியில் இருந்து புறப்பட்டு) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றியடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்’ (அல்ஜுமுஆ – 10)
அவன் தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே அதன் பல கோணங்களிலும் சென்று அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவைகளைப் புசியுங்கள்’ (அல்முல்க் 15)
அந்த வகையில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் முன்மாதிரியான ஒரு வாழ்வை இவ்வுலகில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமியத் தூதை மக்காவின் ஆரம்ப கால கட்டத்தில் குரைஷிகளுக்கு சொன்ன போது அவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். பின்னர் செல்வங்கள் பெண்கள் போன்றவைகளை தருவதாக நபி (ஸல்) அவர்களுக்கு ஆசையூட்டினார்கள்.
ஆனாலும் அற்பத்தனமான இந்த இன்பங்களின் பின்னால் நபி (ஸல்) அவர்கள் செல்லவில்லை ஏனெனில் இந்தக் குறுகிய கால இன்பங்கள் நிரந்தரமான இன்பத்தை சூறையாடக்கூடியன என்பதை நன்றாகவே அறிந்திருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் பாசறையில் வளர்ந்த ஸஹாபாக்களும் கூட உலக இன்பங்களுக்காக ஒருபோதும் விலை போகவில்லை. ஸயீத் இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் உமர் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் ஹீம்ஸ் பிரதேசத்தின் அளுனராக நியமிக்கப்பட்டார்கள். ஒருமுறை உமர் (ரழி) அவர்கள் அந்தப் பிரதேசத்துக்கு வந்து மக்களின் நிலை பற்றி விசாரிக்கிறார்கள்.
அப்போது எங்களது கலீபா மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறார்கள் என்ற செய்தியை அம்மக்கள் மூலமாக அறிந்து கொள்கிறார்கள். இதனைக் கேட்டு ஆச்சரியமடைந்த உமர் (ரழி) பணத் தொகையை ஸயீத் இன்னு ஆமிருக்கு வழங்கிய போது எனது இலட்சியமான மறுமையின் வெற்றியை குழப்புவதற்கு பெரியதொரு குழப்பவாதி எனது வீட்டில் நுளைந்து விட்டது எனக் கூறி முழுப் பணத்தையும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களது வாழ்க்கையை எங்களது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். செல்வங்கள் பெண்கள் அதிகாரங்கள் போன்றவற்றைக் கண்டால் நாம் பயப்படுகின்றோமா அல்லது அதனைப் பெற்றுக்கொள்வதற்காக எந்த மோசமான வேலைகளிலும் ஈடுபடத் துணிகிறோமா என்பதை சற்று சுயவிசாரணை செய்து பார்க்க வேண்டும்.
இவற்றில் இரண்டாவது நிலையில் நாம் இருப்பதைக் கண்டால் மிக விரைவாக இதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். அல்லாஹ் பின்வருமாறு எங்களை எச்சரிக்கின்றான். ‘இதில் அவர்களை நாம் சோதிப்போம் ஆகவே எவன் தன் இறைவனை நினைப்பதையே புறக்கணிக்கின்றானோ அவனைக் கடினமான வேதனையில் அவன் புகுத்தி விடுவான்’ (அல்ஜின் – 17)
இவ்வாறு மனிதர்கள் உலக இன்பங்களில் மூழ்குவதற்கான பிரதான காரணமாக அமைவது உலகம் பற்றிய யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளாமையாகும். இன்று எம்மில் பலர் மறுமை என்ற ஒன்று இருப்பதை மறந்து இந்த உலகில் கண்டபடி வாழ முற்படுகின்றனர்.
இது அவர்களின் அறியாமையையே சுட்டிக்காட்டுகின்றது- ஏனெனில் இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனும் தான் யார் நான் இங்கு வந்துள்ளேன் எனது பொறுப்புக்கள் என்ன போன்ற அடிப்படை வினாக்களுக்கான விடைகளை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும் இவைகளுக்கான விடைகளை ஒரு மனிதன் அறிந்துகொள்வானாயின் உலக இன்பங்களுக்குப் பின்னால் யாருமே அள்ளுண்டு செல்ல மாட்டார்கள். உலகின் யதார்த்தத்தைப் பற்றி அல்லாஹுத் தஆலா பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றான் ‘இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமேயன்றி வேறில்லை எனினும் இறை அச்சமுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது’ (அல் அன்ஆப் – 32)
‘இவ்வுலக வாழ்க்கையோ மறுமையுடன் (ஒப்பிட்டுப் பார்த்தால்) மிக்க அற்பமேயன்றி வேறில்லை’. (அபர்ரஃது – 26)
எனவே ஒவ்வொரு மனிதனும் உலகில் காணப்படுகின்ற இன்பங்கள் அற்பமானவை என்பதை உணர வேண்டும். இவைகளை எல்லாம் விட பல மடங்குகள் விசாலமான கற்பனை உடபண்ண முடியாத இன்பங்கள் சுவனத்தில் கிடைக்கும் என்ற ஆசையில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரக்கூடிய நல்லமல்களை இந்த உலக வாழ்வில் அதிகமதிகம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் என்ற அல்குர்ஆனியத் திருவசனத்தை அடிக்கடி ஞாபகப்படுத்தி தனது விடயங்களை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம்தான் நாம் நிரந்தரமான வெற்றிக் கனியைப் பறிக்க முடியும். ஆகவே இந்த உலகில் அமைதியிழக்காது நிதானத்தோடு அல்லாஹ் எமக்களித்தவற்றைப் பொருந்திக் கொண்டு வாழ்கின்ற கூட்டமாக எம்மை அங்கீகரிக்க இறைவனைப் பிரார்த்திப்போமாக


முஹம்மத் மிப்றாஹ் முஸ்தபா
ஜாமிஆ நளிமிய்யா, பேருவளை.

0 comments:

Post a Comment