Banner 468 x 60px

 

Tuesday, March 5, 2013

உங்களின் நாட்டில் நாம் வாழ்வதுமல்ல, எங்கள் நாட்டில் நாங்கள் வாழ்கிறோம்

0 comments
Muees(முயிஸ் வஹாப்தீன்)
பொதுபல சேனா என்ற அமைப்பு சர்வதேச சதிகார வலைப்பின்னல் சக்திகளின் திட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் ஜீவாதார உரிமைகளிலும், தார்மீகக் கடமைகளிலும், ஆண்டாண்டு காலமாக அந்நயொன்னியமாக வாழ்ந்துவரும் இரு சகோதர இனங்களின் புரிந்துணர்வைச் சிதைக்கும் விதத்தில் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பது பல்லின மக்கள் வாழும் எமது ''இலங்கை'' நாட்டுக்கு ஒரு ஆரோக்கியமான நிகழ்வாக அமையமாட்டாது.

வெறும் இனவாத உணர்ச்சிகளைக் கொப்பளிக்கின்ற, இனச் சுத்திகரிப்பொன்றை இலக்காகக் கொண்டு செல்லும் இவ்வாறான இயக்கங்களின் வளர்ச்சி நிச்சயம் ஒரு நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி நிற்கிறது.
சர்வதேச மட்டத்தில் அழுத்தங்கள் நிறைந்த, தன்னைச் சுற்றிப் பல வலைகளும், பொறிகளும் விரிக்கப்பட்டிருப்பதை நன்கு உணர்ந்த அரசாங்கம், ஒன்று இனவாத ஊசி பாய்ச்சப்பட்ட பொது பலசேனா அமைப்பின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், பொருட்படுத்தாத, அனுகுமுறையானது தனக்குத் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் செயலாகும். இதனால் இலங்கை முஸ்லிம்கள் மிகுந்த வியப்பும், வேதனையுமடைகின்றனர்.
நோர்வே, இஸ்ரேல் நாடுகளின் நரித்தந்திரோபாயத்தால் முன்னேறிய நாடுகள் வரலாற்றில் இல்லை. இவர்கள் கால் வைத்த நாடுகளிலெல்லாம் இன்று பூதாகரமான பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. அண்மையில் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இஸ்ரேல் உறவு என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. தகாத உறவால், முறை தவறிப் பிறந்த இந்த ''பொதுபல சேனா'' என்ற அமைப்பை அரசு வேடிக்கைப் பார்ப்பதானது 'தன் விரல்களால் தன் கண்ணையே குத்துக் கொள்வது'' போன்றதாகும்.
அரபுலகில் இலங்கைக்குள்ள செல்வாக்கு என்ன என்பதை கடந்த ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் நன்றாகவே அறிந்துகொண்ட அமெரிக்க ஆதரவு நாடுகளின் சர்வதேச அரசியல் திரு விளையாடலாகக் கூட இருக்கலாம்.
30 வருடகால கோரப் பிடியிலிருந்து போராடிப் பெற்ற யுத்த வெற்றியை அர்த்தப்படுத்த வேண்டிய நிலையிலிருக்கும் ஒரு அரசாங்கம், தொடர் அழுத்தங்களை முறியடித்து முன்னேறி வர வேண்டிய நிலையில், தன்னிலை மறந்து, பல இனத்தவரின் அரசு என்ற நிலை துறந்து, தந்திர வலையில் சிக்கியுள்ளது என்பதைக் காணும் போது, கடந்த ஜெனீவா மாநாடு வரை அரசின் வெற்றிக்காக உழைத்தவன் என்ற வகையில் மனவேதனை அடைகிறேன். எது எப்படியிருப்பினும், பொதுபல சேனாவின் வளர்ச்சி, இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சி என்பது மட்டும் தெளிவாகின்றது. அரச எதிர்ப்பு நாடுகளும், அமைப்புகளும் எதிர்பார்த்தை அடைந்து கொண்டார்கள், அரசு தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது.
சுதந்திரத்தோடு எம்மிடம் வழங்கிச் சென்ற "ஜனநாயகம்'' என்ற பெயரிலான அரசியல் கலாச்சாரம், கல்வி முறை, அடிமட்டத்தில் தூவிவிடப்பட்ட இனக்குரோத விஷம், போன்ற ஆங்கிலத் தயாரிப்புக்களை மட்டும் நுகர்ந்து வளர்த்த ''மூலை'' அதனால் எடுக்கப்படும், முடிவும் திரும்பத் திரும்ப ஒன்றுதான். திரும்ப திரும்ப அதே இடத்தில் வட்டமிடுகிறோம். மேலெழுந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம்.
யுத்தக் குற்றவாளியாக அரசைக் காட்டும் முயற்சிகளில் தமிழர்கள் தம்மை அர்ப்பணித்து சர்வதேச சதிக்காரக் கும்பல்களுடன் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இன்னமும் இவர்களை நம்புகிறார்கள். ஆனால், வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசனைக் காட்ட சர்வதேச கும்பல்களின் தயவால் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போனதைப் பற்றி அவர்கள் இன்னமும் சிந்திக்கவில்லை.
மற்றொரு கோணத்தில் பௌத்த தீவிரவாதிகளை இணைத்து ''பௌத்த நாடு'' என்ற உணர்வை ஊற்றி வளர்த்து வருகிறது இந்த சர்வதேச சதிக்கார கும்பல். எல்லாக் கோணத்திலும், இந்நாட்டைக் குட்டிச் சுவராக்கும் செயற்பாடுகளைத் தொடர்கிறது. தான் ஒரு பௌத்த காவலன் என்ற கீரிடத்தை அணிந்துகொள்ள பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளும் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். இது ஒரு முட்கீரிடமா? அல்லது பொற்கிரீடமா? என்பதை அறிய இன்னும் காலம் தேவை.
ஒரு அரசியல்வாதி என்ற அடிப்படையில் ''பௌத்த வாக்கு வங்கி'' என்பது அவரைப் பொறுத்தமட்டில் செல்வாக்குச் செலுத்தும் காரணியாக அமைந்துள்ளது.
அவர் எந்த அடிப்படையில் தனது வாக்கு வங்கிக் கணிப்பைச் செய்தாலும், ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் பொதுபல சேனா அமைப்பை தடை செய்ய வேண்டும்.
ஒரு நாட்டில் இனவாதத்தை வெளிப்படையாகக் கக்கும் ஒரு அமைப்புடன் அரச தலைவருடன் வட்டமேசை மாநாடு நட்ததுவதென்பது கேளிக்குரியது.
இவ்வாறான ஒரு அரசியல் கலாசாரத்தை இந்நாட்டில் ஏற்படுத்துவது எமது எதிர்கால சந்ததியினருக்குச் செய்யும் துரோகமாகும். மற்ற மதங்களை இழிவுபடுத்துவதையோ, மதிப்பளிக்காமிலிருப்பதையோ நிச்சயம் பௌத்த தர்மம் போதிக்கவில்லை.
பௌத்தத்தின் காவலர்கள் புத்த பெருமானின் போதனைகளை பின்பற்ற வேண்டுமே தவிர ஹிட்லர், போன்றோரின் நடைமுறைகளைப் பின்பற்ற முடியாது.
பௌத்தர்கள் எனத் தீவிரவாதத்தைப் போதிப்பவர்கள், புத்த பெருமானின் பௌத்த தர்மத்தைப் பின்பற்ற வேண்டும். பௌத்த மதத்தை சரியாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த மதங்களின் உரிமைகளை மறுக்கின்றவன் ஒரு பௌத்தனாக இருக்க முடியாது. ஒரு தூய பௌத்தன், அடுத்த மதங்களையும், மக்களையும் நன்றாகவே மதிப்பான்.
இது எங்களின் நாடு. உங்களின் நாட்டில் நாம் வாழ்வதுமல்ல, எங்கள் நாட்டில் நீங்கள் வாழ்வதுமல்ல. எங்கள் நாட்டில் நாங்கள் வாழ்கிறோம். ஓர் இனம் பெரும்பான்மையாக ஒரு நாட்டில் வாழ்வதால் அந்நாடு அவர்களின் நாடு எனக் கொள்ள முடியாது. மீண்மோரு கறுப்பு யுகத்துக்கு எமது திருநாட்டை அழைத்துச் செல்லும் மடமையான செயலுக்கு இடமளிக்க வேண்டாம். எமக்கு எமது நாடு வேண்டும். பல இன, மொழி பேசும் மக்கள் வாழும் ஒரு நாட்டில் சகலரும் ஒற்றுமையாக வாழும் ஒரு முன்மாதிரியான சேதத்தைக் கட்டியெழுப்புவோம்.
சிங்களம், தமிழ், முஸ்லிம் எனத் தனித்துச் செல்வதால் எம்மால் எதையும் சாதித்துவிட முடியாது. எமக்கு முன்னாலுள்ள பாரிய சவால்களை வென்றுவிட முடியாது. கருத்து வேறுபாடுகளை, ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் மூலம் புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும். நம்பிக்கை, தூர நோக்கு, தூய எண்ணம் இவற்றின் 5லம் ஒரு சிறந்த நாடொன்றைக் கட்டியெழுப்ப முடியும்.
தூய எண்ணமும், துணிச்சலுமிக்க சிங்கள, தமிழ், முஸ்லிம் புத்திஜீவிகளைக் கொண்ட ஒரு அணி உருவாக்கப்பட வேண்டும். ''நாடு முதன்மையானது'' எனச் சிந்திக்கும் சிலரால் கூட இப்பாரிய பணியை முன்னெடுக்க முடியும். அழுத்தங்களுக்கும் அபால் அடிபணியாத வகையில் திட்டங்களை முன்னெடுத்தால் வெற்றி நிச்சயம். தூய எண்ணமும், துணிகரமான திட்டங்களும் என்றும் வெற்றிபெறும்.
இன, மத, மொழி பேதங்களை உருவாக்கி அரசியல் பிழைப்பு நடாத்தும் கலாச்சாரத்தை மேற்கு நாடுகள் மீக நீண்ட காலத்துக்கு முன்னரே கைவிட்டுவி;டடன. ஆனால், எமது நாடுகளில் இன்னமும் இக்கலாச்சாரம் சீர்கேடு தணியவில்லை. ஆனால் வளர்ந்த அந்நாடுகள் இந்நாடுகளில் ஊக்குவிப்பதை நிறுத்தவில்லை.
இனவாதமும், தீவிரவாதமும் எமது நாடுகளிலுள்ள வரையில் தான் அவர்களின் நாடுகளும் வளர்ந்த நாடுகள் பட்டியலிலும் என்றும் இருக்கும் என்பதை எங்களைவிட அவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். 3ஆம் உலகு இல்லையேல் முதலாம் உலகும் இல்லை.
முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?
இஸ்லாத்தில் தலைமைத்துவம் மிக முக்கியமானது. ஒரு தலைவரை உருவாக்குவதைவிட, ஒரு சூரா சபை (கூட்டுத் தலைமை) உருவாக்கப்பட வேண்டும். அச்சபை முஸ்லிம்களின் நலன் விடயத்தில் தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றும் விதத்தில் அதன் அமைப்பையும், ஒழுங்கையும், நிர்ணயம் செய்ய வேண்டும். அரசியல், இயக்க, பணபல சக்திகளுக்கு அடிபணியாத, அஞ்சாத, அல்லாவுக்கு மட்டும் பயப்படக்கூடிய ஒரு பொதுச் சபையாக திகழ வேண்டும்.
இன்று வலுவிழந்து, வழிகாட்டலின்றி, செய்வதறியாது, மக்கள் தலைவராக இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இவர்கள் வழிகாட்ட வேண்டும். நெறிப்படுத்தி, சிறந்த அரசியல் பிரதிநிதிகளை பெறுவதற்கான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க முனைய வேண்டும். முஸ்லிம்களின் வாக்குகளைக் கபளீகரம் செய்யவிடக்கூடாது. குறைந்தபட்சம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கான ஒரு நெறிமுறை வகுக்கப்பட வேண்டும்.
அரசியல் சாக்கடையென்றும், அது ஒரு சாராருக்குத்தான் என ஒதுங்கியிருப்பதன் விளைவை இன்று நாம் அனுபவிக்கிறோம். முதுகெலும்புள்ள அரசியல் தலைமை உருவாக்கப்பட வேண்டும். இது அவசரத் தேவை. முஸ்லிம்களுக்கொரு தனி ஊடகம் உருவாக்கப்பட வேண்டும். இன்று இது இல்லாத குறையை வாராந்தக் குத்பாக்கள் மூலம் நிவர்த்தி செய்யலாம். வெறும் ''பயான்'' (உபன்னியாசம்) என்ற அடிப்படையில் அமைந்துள்ள அதிகமான மிம்பர் மேடைகளை முஸ்லிம்களின் அன்றாட வாழ்வின் விடயங்களை அறிவிக்கும் மகா நாடுகளாக மாற்றலாம். வாராந்த ஊடக மேடைகளாக்கலாம்.
இன்று முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் தீவிரவாதச் செயல்களை சர்வதேச சமுகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும். முஸ்லிம் ராஜதந்திரிகளின் வழிகாட்டல்களில் ''ஒரு ராஜதந்திர நகர்வு'' ஒன்றை மிகவும் கச்சிதமாகத் திட்டமிட்டு செய்ய வேண்டும். குறிப்பாக முஸ்லிம் நாடுகள், சில மனித உரிமை அமைப்புக்கள், உட்பட ஜெனீவா மனித உரிமைக் காப்பாகம் வரை எமது போராட்டங்கள் கொண்டுசெல்ல வேண்டும்.
அண்மைக்கால சம்பவங்களைத் தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான UNP, JVP, இடதுசாரி கட்சிகள் ஆதரவு சக்திகளின் குரல் மேலோங்கியுள்ளது. ஒரு தூர நோக்குடன் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமெனில், இவர்களுடன் இணைவதில் எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போதவில்லை. மாறாக தம்மை அவர்கள் சந்தைப்படுத்திக் கொள்வார்கள். இவர்களின் ஆதரவு, பங்களிப்பு, ஆலோசனைகள், இத்தருணத்தை எம்மை மேலும் சிக்கலுக்குள்ளாக்கிவிடும். ஐ.தே.க. அண்மையில் ஹலால் சான்றிதழ் சம்பந்தமான உத்தியோகபூர்வ நிலைப்பாடு இங்கு ஈன்று நோக்கப்பட வேண்டியது.
மீண்டும் மீண்டும் இவ்வாறான கட்சிகளுடனும், அரச சார்பற்ற நிறுவனங்களுடனும், புகலிடம் கேட்காது, தூரதிருஷ்டியுடன் ஒரு ''சக்தி மிக்க சமுதாயம்'' உருவாக்க முன்வர வேண்டும்.
''அவனும் வேண்டாம், இவனும் வேண்டாம்'' என்ற நிலைப்பாட்டில் முன்னேறுவதே இக்காலத்தைப் பொறுத்த வரை சாலப் பொருத்தமாக அமையும்.
இந்நாட்டில் எமக்கிருக்கின்ற உரிமை பற்றி பேசித் தீர்த்துவிட்டோம். எனில், எமது தார்மீகக் கடமையான இஸ்லாத்தை எம் நாட்டில் வாழும் சகோதர இனத்தவர்களிடம் சொல்லும் பணிபற்றி நாம் சிந்திக்கத் தவறிவிட்டோம். சிங்கள, தமிழ் நண்பர்களிடம் எமது இஸ்லாம் பற்றி தெளிவுபடுத்த எந்தளவு தூரம் நாம் சென்றிருக்கிறோம்?
நிறுவன ரீதியான எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? போன்ற விடங்களை முன்னிறுத்தி முஸ்லிம் நிறுவனங்களும், இயக்கங்களும், விசேட பிரிவுகளை உருவாக்கி, பயிற்சிகளை வழங்கி இப்பெரும் பணியைத் தொடர வேண்டும். பல நூற்றாண்டு காலமாக சிங்கள, தமிழ், முஸலிம் இனத்தவர்கள் வாழ்கிறார்கள் என்கிறோம். ஆனால் ''ஹலால்'' என்ற விடயம் கூட அவர்களில் பலருக்குத் தெரியாது என்றால் அதற்கு நாங்கள் தான் பொறுப்புக் கூற வேண்டும். கண்ணை மூடிடக் கொண்டு ''ஹலால்'' பொருட்களை உண்டு மட்டும் இருக்கும் சமுதாயம் அல்ல நாம். ''ஹலால்' என்றாலென்ன? ஏன் சாப்பிடுகிறோம்? இதனால் ஏற்படும் அனுகூலங்களை முழு மனித சமுதாயமும் பெறவைக்க வேண்டியவர்கள் தாம் நாங்கள் என்பதை மறுக்க முடியாது.
''ஹலால்'' பொருட்களை மட்டுமே நுகர்வது, கட்டாயக் கடமை. அதேபோன்ற இன்னொரு கடமைதான் சகோதர இனத்தவர்களுக்கு இஸ்லாத்தைச் சொல்லும் புனிதப் பணி. இப்புனிதப் பணியைத் தொடர்வோம்.

0 comments:

Post a Comment