
இறை தூதர்கள் மீது நம்பிக்கை கொள்தலை அடுத்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஐந்தாவதாக நம்பும்படி போதித்தது மறுமையாகும். மறுமை சம்பந்தமாக எந்த எந்த விஷயங்களின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியமோ அந்த விஷயங்களாவன.
1) ஒரு நாள் அல்லாஹ் முழு உலகையும் படைப்பினங்களையும் அழித்து விடுவான். அந்த நாளின் பெயர் ‘கியாமத்’ஆகும்.
2) பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அனைவரும் அல்லாஹ்வுக்கு முன் ஆஜராவார்கள். அதற்கு மஹ்ஷர் என்று பெயர். (அதுவே இறுதித் தீர்ப்பு நாள் ஆகும்.)
3) எல்லா மக்களும் தமது உலக வாழ்வில் எதை எதைச் செய்தார்களோ அவை முழுமையும் கொண்ட செயல் பட்டியல் இறைவனின் நீதிமன்றத்தில் சமர்ப்பணமாகும்.
4) அல்லாஹ் ஒவ்வொருவருடைய நல்ல, கெட்ட செயல்களையும் நிறுத்துப் பார்ப்பான். யாருடைய நற்செயல் இறைவனின் துலாக் கோலில் தீச்செயலைக் காட்டிலும் பாரமானதாயிருக்குமோ அவரை அல்லாஹ் மன்னித்து விடுவான். யாருடைய தீச் செயலின் தட்டுத் தாழுமோ அவருக்குத் தண்டனை அளிப்பான்.
5) யார் மன்னிப்புப் பெறு கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யாருக்குத் தண்டனை வழங்கப்படுகிறதோ அவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள்.
மறுமை சம்பந்தமாக உலகில் மூன்று விதக் கொள்கைகள் இருக்கின்றன. மனிதன் மரணித்த பின் அழிந்து போகின்றான். அதன் பின்னர் மறுவாழ்வு இல்லை என்று ஒரு கூட்டத்தினர் கூறுகின்றனர். மறுமை வாழ்வு உண்டென நம்பும் கொள்கை மெய்மையற்றது என்றும் மறுமை வாழ்வு என்பது இல்லாதது என் றும் இக்கூட்டத்தினர் வாதாடுகின்றார்கள்.
இது ஒரு நாத்திகரின் கருத்தாகும். ஆனால், இவ்வாதம் அறிவியலுக்கு எதிரானதாகும் (Unscientific). ஆயினும் இவர்கள் இவ்விடயத்தை அறிவியல் முறையில் அணுகுகிறவர்கள் என்றும் மேல்நாட்டு அறிவியல் தங்களுக்குத் துணைபுரிவதென்றும் கூறிக் கொள்கிறார்கள்.
இரண்டாவது கூட்டத்தினர், மனிதன் தன்னுடைய கருமங்களின் பலனை அனுபவிப்பதற்காக அடிக்கடி இதே உலகில் ஜென்மம் எடுக்கின்றான் எனவும் அவனுடைய கருமங்கள் தீயவையாயிருப்பின் மறுஜென்மத்தில் மிருகமாகவோ, நாய் பூனையாகவோ பிறப்பான், மரமாக வளர்வான் அல்லது கீழ்த்தரமான மனித உருவில் வருவான் என்றும் கருமங்கள் நல்லவையாயிருப்பின் மிகவும் உயர்ந்த நிலையை அடைவான் என்றும் கூறுகின்றனர். இந்த எண்ணம் சில மதங்களில் காணப்படுகின்றது.
மூன்றாவது கூட்டத்தினர், இறுதித் தீர்ப்பு நாளாகிய கியாமத், மஹ்ஷர், இறை நீதிமன்றத்தில் ஆஜராதல், தண்டனை, வெகுமதி மீது நம்பிக்கை கொள்கின்றனர். இறை தூதர்கள் அனைவரும் ஒன்றுபட்ட கொள்கை இதுதான்.
இந்த வகையில் மறுமை பற்றிய நம்பிக்கையின் தாக்கத்தினையும் அதன் முக்கியத்துவத்தையும் அறிவது அவசியம். மறுமை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஒரு விசுவாசியின் முழு வாழ்வும் அமைந்துள்ளது.
தான் இம்மையில் புரிகின்ற நற்செயல்களுக்கு நிறைவான சன்மானமும் தீச்செயல்களுக்கு முழுமையான தண்டனையும் மறுமையில் கிடைக்கும் என உறுதியாக நம்புவதால் நன்மையான அம்சங்களில் போட்டி போடக் கூடியவனாக மாறுகின்றான். தீமையான விடயங்களை விட்டும் தவிர்ந்து கொள்கிறான்.
இந்நம்பிக்கை இல்லாதவன் நன்மையான செயல்களில் பற்று வைக்க மாட்டான். தீய செயல்களைச் செய்ய அஞ்சவும் மாட்டான். வாழ்க்கை மரணத்துடன் முற்றுப் பெறுகின்றது என நம்பும் மனிதன் அவனது குறைந்த ஆயுளுக்குள் எல்லா விதமான இன்பங்களையும் அனுபவித்து விட வேண்டும் என்ற வெறியோடு செயற்களத்தில் குதித்து விடுவதைக் காணலாம்.
தான் விசாரிக்கப்படும் சந்தர்ப்பமொன்று ஏற்படாது என்ற நம்பிக்கையில் செயற்படும் இத்தகைய மனிதன், எத்தகைய தீயசெயலையும் தயங்காமல் செய்து விடுவான். அவனது சகல காரியங்களிலும் சுயநலமே மேலோங்கியிருக்கும்.
இந்த மறுமை நம்பிக்கை இல்லாது ஒரு குழுவினர் செயற்படும்போது, சத்தியம், நீதி, நேர்மை போன்ற அனைத்தும் செயலிழந்து போகின்றன. இவற்றை வைத்து நோக்கும்போது இஸ்லாம் அறிமுகப்படுத்தும் மறுமை பற்றிய கோட்பாடு எவ்வளவு முக்கியம் பெறுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஒருவருக்குத் தெரியாத ஒரு விடயம் பற்றி அவரிடம் கேட்கப்படும்போது, அவர் அதை அறியாவிட்டால், எவ்விடயம் தனக்குத் தெரியாது என்று கூற முடியுமே தவிர, அவ்விடயம் இல்லை என கூற முடியாது. இது போலவே அல்லாஹ்விடமிருந்து வஹி மூலம் அறிவிக்கப்பட்ட மறுமையை மனிதன் தன் கண்களால் காண முடியாது என்பதற்காக அதனை மறுத்து விட முடியாது.
எல்லா விடயங்களும் புலனுணர்வுக்குக் கட்டுப்பட வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. அவ்வாறே, குறைபாடு கொண்ட மனிதப் புலனுணர்வுகள் எல்லா அம்சங்களையும் கிரகிக்கும் ஆற்றல் படைத்தவை என்று கூறவும் முடியாது.
இந்நிலையில் ஒரு விடயத்தை நம்புவதற்கு தொடுகை, பார்வை என்பவற்றோடு நம்பத் தகுந்த ஒருவரின் வாயிலாக குறித்த விடயத்தின் உண்மைத் தன்மை ஊர்ஜிதப்படுத்தப்படுகின்றது. நம்பத்தகுந்தவரான நபியவர்கள் கூறியுள்ள மறுமையும் அவ்வாறே அமைகின்றது.
உடல், ஆன்மா ஆகிய இரு அம்சங்களால் மனிதன் பிணைக்கப்பட்டுள்ளான். இம்மனிதன் மரணித்த பின் அவனது உடல் மண்ணோடு கலந்து விடுகின்றது. ஆனால், அவனது ஆன்மாவின் முடிவு என்ன என்பது கேள்விக்குறியாகவே அமைகின்றது. இவ்வாறு ஆன்மாவானது சூட்சுமமாக மறைந்து விடுவது மறுமை என்ற உண்மை சாத்தியம் என்பதை உணர்த்துகின்றது.
பிரபஞ்சத்தின் பிரமாண்ட தன்மையை அதில் நிறைந்துள்ள மர்மங்களும் நுட்பங்களும் அவைகளுக்குப் பின்னால் ஒரு பெரும் சக்தியும் ஓர் அர்த்தமுள்ள இலட்சியமும் இருப்பதை உணர்த்துகின்றன. அந்த இலட்சியமே மறுமையாகும். எது எவ்வாறிருப்பினும், ஒரு விசுவாசி (முஃமின்) தன் அறிவையும் புலனுணர்வுகளையும் மாத்திரதே நம்பியிருக்கும் சடவாதியல்ல. அதற்கப்பால் ‘வஹி’மூலம் அவனுக்கு வழங்கப்பட்டுள்ள அம்சங்களையும் அவன் நம்புகின்றான். இந்த வகையிலேயே அவனது மறுமை பற்றிய நம்பிக்கையும் அமைகின்றது.
"அது (அல்குர்ஆன்) தக்வா (இறையச்சம்) உள்ளவர்களுக்கே நேர்வழிகாட்டும். அவர்கள் புலன்களுக்கு அப்பாற்பட்ட மறைவான அம்சங்களை நம்பக் கூடியவர்கள். (2:2-3)
0 comments:
Post a Comment