Banner 468 x 60px

 

Friday, March 1, 2013

உள்ளத்தை நிருவகித்தல்

0 comments
Reading-Quranஉள்ளம் அமைதியடைந்த நிலையில் தான் ஒரு மனிதன் அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்பது அல்குர்ஆனும், அஸ்ஸூன்னாவும் வலியுறுத்திச் சொல்லும் ஒரு அம்சமாகும்.

இந்த ‘உள்ளத்தை நிருவகித்தல்’ என்ற கட்டுரையினூடாக மனித உள்ளத்தை எவ்வாறு புரிந்து கொள்வது என்பது பற்றி உரையாட முற்படுகிறேன். உள்ளத்தின் இயல்புகள் எத்தகையது? உள்ளம் எவற்றை உள்ளடக்கியிருக்கின்றது? உள்ளத்தை அமைதியான ஒரு இடமாக மாற்றிக் கொள்வத தென்றால் எத்தகைய ஒரு பாதையில் பயணிக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடைகாண முற்படுகிறேன்.
இத்தகைய கேள்விகளுக்கு விடைகாணும்போது மாத்திரமே ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரை உள அமைதி பற்றிச் சிந்திக்கலாம். அவ்வாறில்லாமல், வெறுமனே உள்ளத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கலந்துரையாடுவதினூடாக மாத்திரம் உள அமைதியை அடைந்து விட முடியாது.
உள்ளத்தின் இயல்பும் கட்டமைப்பும்:
நாம் உள்ளத்தின் அமைதி நிலையைப் பற்றிய மிகச் சரியான விளக்கமொன்றை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், முதலாவதாக உள்ளத்தின் இயல்பை பற்றியும், அதன் கட்டமைப்பைப் பற்றியும் மிகச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். உள்ளம் என்றால் என்ன? என்ற விடயம் பற்றி அல்குர்ஆனோ அல்லது நபியவர்களின் ஸூன்னாவோ தெளிவான வரைவிலக்கணங்களை சொல்லாவிட்டாலும், அதன் இயல்புகள் மற்றும் கட்டமைப்பு பற்றித் தெளிவாக அவை பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளத்தின் இயல்பைப் பொறுத்தவரைக்கும், அல்குர்ஆன் கீழ்வரும் ஒரு வசனத்தினூடாக தெளிவாக அதனை அடையாளப்படுத்திக் காட்டுகின்றது.
"மனித உள்ளத்தின் மீதும், அதனை வடிவமைத்தவன் மீதும் சத்தியமாக! அதற்கு அவன் பாவங்களையும், நன்மைகளையும் அறிந்து கொள்ளும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறான். அதனை யார் தூய்மைப்படுத்திப் பாதுகாக்கிறாரோ, அவர் வெற்றி பெற்று விட்டார். யார் அதனை கவனிக்காது விட்டுவிடுகிறாரோ அவர் தோல்வியடைந்து விட்டார்." (அஷ்ஷம்ஸ் : 7,10)
மேற்குறிப்பிட்ட வசனம் மனித உள்ளத்தைப் பற்றியும், அதன் இயல்பைப் பற்றியும் ஏராளமான அடிப்படை அம்சங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
* மனித உள்ளம் அல்லாஹ்வால் வடிவமைக்கப்பட்டது.
* மனித உள்ளம் மிக முக்கியமான இரு இயல்புகளைக் கொண்டது.
* மனித உள்ளத்திற்கு நன்மை எது? தீமை எது? என்று அறியும் ஆற்றலை அல்லாஹ் நிலையாக அதில் பதித்திருக்கிறான்.
* உள்ளம் எதனையும் தானாக தீர்மானம் எடுக்கும் இயல்பை அல்லாஹ் கொடுக்கவில்லை. நாம் அதற்கு கொடுக்கும் வழி காட்டலுக்கு ஏற்பவே அது தீர்மானங்களை எடுக்கும். நன்மை பயக்கும் வழிகாட்டல்களைக் கொடுத்தால் நல்ல அம்சங்கள் பால் உள்ளம் வழிநாடாத்தப் படும். மாற்றமாக தீமையான வழிகாட்டல்களைப் பெற்றால் மோசமான அம்சங்கள் பால் வழி நாடாத்தப்படும்.
* எனவே, மனித உள்ளத்தை விரும்பயவாறு நிர்வகிக்கும் அதிகாரம் அல்லாஹ்வால் மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
* மனிதன் தனது உள்ளத்தை எவ்வாறு நிர்வகிக்கிறான் என்பதனைப் பொறுத்தே அவனுடைய வெற்றியும், தோல்வியும் தீர்மானிக்கப்படும்.
மேற்கூறப்பட்ட வசனம், மனித உள்ளத்தின் இயல்பையும், அதன் மீது மனிதனுக்குள்ள பொறுப்புக்களையும மிகச் சுருக்கமாக குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் தனது உள்ளத்தை செம்மைப் படுத்துவதற்கு முன் மேற்குறிப்பிட்ட அம்சங்களை விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மனிதன் தனது உள்ளத்தை தூய்மைப்படுத்துவதற்கு முன்னர் உள்ளம் தன்னுடைய வெற்றியை தீர்மானிக்கும் சக்தியை பெற்றது, அதனை மிகச் சரியாக வழிநடாத்த வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியை உணர வேண்டும். இன்னும் உள்ளம் தன்னுடைய நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அம்சம் என்ற தெளிவும் அவனுக்கு அவசியமாகிறது.
உள்ளத்தின் கட்டமைப்பு:
ஒரு முஸ்லிம் தனது உள்ளத்தை பக்குவப்படுத்தி பாதுகாப்பதற்கு எந்தளவு உள்ளத்தின் இயல்பையும் அதன் மீது தனக்குள்ள பொறுப்பையும் உணர்வது அவசியமோ, அதனை விட உள்ளத்தின் கட்டமைப்பையும் அது உள்ளடக்கியுள்ள அம்சங்களையும் அறிந்து கொள்வது அவசியமாகும். மனித உள்ளம் மூன்று முக்கியமான பகுதிகளை கொண்டிருக்கிறது.
1) சிந்தனைகள்
2) ஆசைகள்
3) நோய்கள்
ஒரு முஸ்லிம் தன்னுடைய உள்ளத்தை அமைதிப் பூங்காவாக மாற்றிக் கொள்ளவேண்டும் என்றால், இந்த 3 விடயங்கள் தொடர்பாகவும் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இம் மூன்று அம்சங்களையும் இஸ்லாத்தின் வழி காட்டல்களுக்கு ஏற்ப சீர்செய்து கொண்டால், மிக இலகுவாக எமது உள்ளங்கள் அமைதி அடையும்.
இங்கு, உளப்பரிசுத்தம், அல்லது உளத்தூய்மை பற்றி சிந்திக்கும் பலர் ஏன் அதனை சுவைப்பதற்கு அசாத்தியப்படுகிறார்கள்? என்ற கேள்விக்கு விடை காண்பது இன்றியமையாததாகும்.
எம்மில் பலர் இஸ்லாம் உள்ளத்திற்கு எந்தளவு முக்கியத்துவத்தை கொடுக்கின்றது என்பது தொடர்பாக ஏராளமான அல்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் உள்ளத்தை பக்குவப்படுத்தி பாதுகாப்பதற்கு தவறி விடுகிறார்கள். இதற்குரிய பிரதான காரணமாக மனிதர்களது உள்ளங்களை அல்லாஹ் எவ்வாறு படைத்திருக்கிறான்? அதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் என்ன? அதனை பிழையாக வழிநாடாத்தும் காரணிகளிலிருந்து எவ்வாறு எம்மை காத்துக் கொள்வது என்பது தொடர்பாக விளக்கத்தைப் பெறாமையே.
ஆனால், பெரும்பாலானவர்கள் உள்ளத்தை பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றால் நிறைய நல்லமல்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். உண்மைதான், உள்ளம் நிறைய நல்லமல்கள் செய்வதினூடாக பரிசுத்தமடைகிறது. ஆனால் நல்லமல்களுக்கு செல்வதற்கு முன் உள்ளத்தில் ஒரு முக்கியமான செயற்பாடு (Process) நடக்க வேண்டும். அதன் விளைவாக அமல்கள் பிறக்க வேண்டும்.
அந்த செயற்பாடு என்ன? என்பதே இந்த கட்டுரைத் தொடரில் கலந்துரையாடும் அம்சமாகும். உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்தல் என்பது மனிதன் தனது வாழ் நாளில் செய்யும் மிகப் பெரிய பணி. ஒரு மனிதனுக்கு உலகத்தையே மிக இலகுவாக சிலவேளை நிர்வகிக்கலாம். ஆனால் இஸ்லாம் உள்ளத்தை எவ்வாறு அறிமுகப்படுத்துகிறது என்று புரியாதபோது உலகத்தை நிருவகிக்கும் அதே மனிதன் தனது உள்ளத்தை நிருவகிப்பதில் இடறி விழுந்து விடுவான். இதுதான் யதார்த்தம்.
உள்ளத்தை நிருவாகம் செய்தல் என்ற விடயம் மனிதர்கள் இன்று மறந்திருக்கும் ஒரு அம்சம். ஆனால் அல்லாஹ் தனது இறுதித் தூதரை அனுப்பியதன் நோக்கங்களில் முதன்மையான நோக்கம் உள்ளத்தை நிருவாகம் செய்கின்ற மனிதர்களாக உலக மக்களை மாற்றுவது. இதனை இவ்வாறு அல்லாஹ் அல்குர்ஆனிலே இவ்வாறு குறிப்பிடுகிறான்.
"அவன் தான் தனது தூதரை உம்மிகளுக்கு மத்தியிலிருந்து அனுப்பினான். அவர் அவர்களுக்கு அவனுடைய வேதத்தை ஓதிக்காட்டி, உள்ளங்களை பரிசுத்தப்படுத்தி, அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் கற்பிப்பார்."
மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் வசனம் நபியவர்களின் பணிகளில் ஒன்று சிறந்த உள்ளங்களை உருவாக்குவது, அல்லது தனது உள்ளத்தை அழகான முறையில் நிர்வாகம் செய்கின்ற மனிதர்களை உருவாக்குவது என்று அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. எனவே, உள்ளங்களை நிருவகித்தல் உலகில் ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய மிகப் பெரிய நிர்வாகம். வாழ்க்கை பூராகவும் ஒரு முஸ்லிம் அதனை நிருவாகம் செய்ய வேண்டும்.
எனவே இன்ஷா அல்லாஹ் உள்ளத்தை நிர்வகித்தலில் தொடர்புபடுகின்ற முக்கியமான 3 விடயங்களான சிந்தனைகள், ஆசைகள், நோய்கள் போன்ற  விடயங்களைப் பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் நோக்குவோம்.

0 comments:

Post a Comment