Banner 468 x 60px

 

Thursday, September 26, 2013

தீங்கை விளைவிக்கும் புகைத்தல்

0 comments


Man-smoking-a-cigarette-006இன்று புகைத்தல் பழக்கம் சர்வசாதாரணமாகி சமூகத்தின் வயது வந்தவர்களையும் கடந்து பாடசாலை செல்லும் இளைஞர்கள் மத்தியிலும் அதிகமதிகம் இழையோடிக் காணப்படுவது கவலை தரும் அம்சமாகும். அதேநேரம், அதுவே ஒரு கலாசாரமாகவும் பருவ வயதை அடைகின்ற போது நாகரீகமாகவும் சமூகத்தின் முதுகெலும்புகளான இளைஞர் சமூகத்தின் நடத்தைகளுடன் இரண்டறக் கலந்திருப்பது சமூகத்தின் உயிர்த்துடிப்பை நசுக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த செயலாகும்.
சமூகத்தில் எழுப்பப்படும் எதிர்மறையான சுயகருத்துகளும் அப்பால் இவ்வாக்கம் இஸ்லாத்தின் நிழலில் புகைத்தல் தொடர்பாக விரிவாகப் பேசுகின்றது.
புகைத்தல் பழக்கம் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இடம்பெற்ற ஒன்றல்ல. பிற்பட்ட காலத்தில் அது தோன்றிய போது அதன் யதார்த்தத்தையும் தீங்குகளையும் அறிஞர்களால் உடன் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்றாலும் பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் புகைத்தல் உண்மையில் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாகவுள்ளது என்பதை உணர்ந்து ‘புகைத்தல் ஹராம்’ என்றே தீர்ப்பளித்துள்ளனர்.
“தீங்கிழைக்கக்கூடிய அனைத்தும் ஹராம்” என்பது இஸ்லாத்தின் அடிப்படை விதிகளுள் ஒன்றாகும். இவ்வகையில் புகையிலையும் கூட மனிதனது உடல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு கேடு விளைவிப்பதால் ஹராமானவற்றின் பட்டியலிலேயே உள்ளடக்கப்படுகின்றது. அல்குர்ஆன், சுன்னா, இஜ்மாஃ கியாஸ் முதலிய சட்ட மூலாதாரங்களினூடாக இது நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.no smokig-cancer-stop smoking-nethiram-cicarete-pukaiththal (13)
நீங்கள் உங்களை அழித்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் நன்மையே புரியுங்கள். நன்மை புரிபவர்களே அல்லாஹ் நேசிக்கின்றான். (பகரா-195)
இவ்வசனம் மனிதனுக்கு தீங்கின் பக்கம் இட்டுச் செல்லும் அனைத்தையும் தடை செய்வதாக அமைகின்றது. இவ்வகையில் மனிதனை தீங்கிற்கு உட்படுத்தும் புகைத்தல் உட்பட கண்ணாடி, கல், விஷம் போன்று எவற்றையெல்லாம் உட்கொள்வதால் தீங்கேற்படுமோ அவற்றையெல்லாம் உண்பது ஹராமாகும். அருவருக்கத்தக்கவற்றைத் தவிர எவற்றையெல்லாம் உட்கொள்வதன் மூலம் தீங்கேற்படாதோ அவற்றை உண்பது ஹலாலாகும் என இமாம் நவவீ ‘அர்ரவ்ழா நதிய்யா’ எனும் நூலில் விளக்குகின்றார்.
“நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் கருணையுடையவனாக இருக்கின்றான்.” (அந்நிஸா 29)
அதேநேரம் புகைத்தல் (தடுக்கப்பட்ட) ‘ஃபாஹிஷா’ என அல்குர்ஆன் குறிப்பிடும் மிக மோசமான அருவருக்கத்தக்க பாவங்களுள் ஒன்றாகும். மேலும் சிறந்தவற்றையே புசிக்குமாறும், அவையல்லாதவற்றைத் தவிர்ந்து கொள்ளுமாறும் வலியுறுத்தி பல வசனங்கள் திருமறையில் இடம் பெற்றுள்ளன.
“மக்களே! பூமியில் நீங்கள் ஹலாலான, சிறந்தவற்றையே உட்கொள்ளுங்கள்!” (பகரா)
“தூதர்களே! நல்லதையே புசித்து நற்காரியங்களைப் புரியுங்கள்!” (முஃமினூன்)
விசுவாசிகளே! நாம் உங்களுக்கு அளித்ததில் சிறந்தவற்றையே உண்ணுங்கள்!” (பகரா)
மேலும், மோசமானவை, அசிங்கமானவை பற்றியும் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான். “மோசமானவை அதிகமாக இருந்த போதிலும், நல்லதும், மோசமானதும் ஒரு போதும் நிகராகமாட்டாது. அறிவுள்ளவர்களே! ஜெயம் பெற அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்! (மாயிதா – 100)
எனவே சிறந்தவை எப்போதும் சிறந்தவைதாம். மோசமானவை என்றும் மோசமானவைதாம். இவை இரண்டும் ஒருபோதும் ஒன்றாயிருக்க முடியாது. சுத்தமான மனித வாழ்வுக்கு பயன்மிக்க சிறந்த விடயங்கள் அனைத்தும் ஹலால் எனவும் அழுக்கான தீங்கு பயக்கின்ற மோசமான அனைத்தும் ஹராம் எனவும் ஒரு சட்ட விதி குறிப்பிடுகின்றது.
மேற்குறித்த இவ்விதியானது உணவாகவும், பானமாகவும் கொள்ளப்படுகின்ற அனைத்துக்கும் பொருந்துவதாக அமையும். அதேநேரம், மேற்சொன்ன குர்ஆன் வசனத்தில் “மோசமானது” எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘கபீஸ்’ எனும் சொல் வெருக்கத்தக்க சுவையும் வாசனையும் கொண்ட அருவருக்கத்தக்க ஒன்றைக் குறிக்க அரபு மொழியில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் பின்புலத்தில் புகைத்தல் என்பது தீங்கிழைக்கின்ற அதேவேளை பிரயோசனமற்றதாகவும் உள்ளது. பிரயோசனமற்ற ஒன்றிலே செல்வத்தை வீண்விரயம் செய்வது ‘ஹராம்’ என்பது தெளிவானதே.dont-waste-your-money
“உண்ணுங்கள், பருகுங்கள். வீண்விரயம் செய்யாதீர்கள்.”
இவ்வசனத்தில் அல்லாஹ்த்தஆலா வீண்விரயம் செய்வதைத் தடுத்துள்ளான். இது ஹராமான விடயங்களுக்காக செலவு செய்வதையோ அநாவசியமாக செலவளிப்பதையோ, அளவு மீறி செலவளிப்பதையோ குறிக்கலாம். மற்றுமோர் இடத்தில்….
“நீங்கள் வீண்விரயம் செய்ய வேண்டாம்.” (இஸ்ராஃ – 26)
வீண்விரயம் என்பது பின்வருனவற்றை உணர்த்துகின்றது.
01. செல்வத்தை ஹராமான ஒன்றில் செலவு செய்தல்.
02. செல்வத்தை பிரயோசனமற்ற, அவசியமற்ற விடயங்களில் செலவு செய்தல்.
03. செல்வத்தை அளவுக்கதிகமாக விரயம் செய்தல். (ஆகுமான விடயங்களிலும் சரியே..)
மேலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற சீர்கேட்டை ஏற்படுத்துகின்ற அநியாயமான விடயங்களில் செலவு செய்வதை (வீண்விரயம் செய்தலை) ‘தப்தீர்’ எனும் பதம் குறிப்பதாக இமாம் கதாதா விவரிக்கின்றார். எனவே, இந்த விளக்கத்தினூடாகப் பார்ப்பினும், புகைத்தலுக்காகச் செலவு செய்வது வீண்விரயம் என்பது வெள்ளிடைமலை போன்றதாகும்.
“தனக்குத் தீங்கிழைப்பதோ, பிறருக்குத் தீங்கிழைப்பதோ கூடாது.” என நபி (ஸல்) அவர்கள் கூறியதை இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்க, இமாம் அஹ்மத், இப்னு மாஜா போன்றோர் பதிவு செய்துள்ளனர்.save_money
மேற்குறித்த நபிமொழி மூலம் தனக்கோ, பிறருக்கோ தீங்கிழைப்பதை இஸ்லாம் தடை செய்கின்றது என்பது புலனாகின்றது. சமூக சூழலில் பலர் இத்தகைய பாவச் செயலை செய்வதையும் அவதானிக்க முடிகின்றது. மட்டுமல்லாது வீட்டில் சிறுவர்கள் மத்தியில் புகைத்தலை மேற்கொள்வதால் சூழலியல் ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது.
அதேவேளை புகையிலை உடலியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாதிப்பை உண்டு பண்ணும் எனும் உண்மையை வைத்தியர்கள், துறைசார் அறிஞர்கள் வாயிலாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
“நபி (ஸல்) அவர்கள் ஆதாரமின்றி பேசுவதையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீண்விரயம் தடுத்துள்ளார்கள்” என அபூஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்க்ள. மற்றுமோர் அறிவிப்பில்… “தன் வாழ்நாளை எவ்வாறு கழித்தான். தன் உடம்பை எதில் அழித்தான். தன் செல்வத்தை எங்கிருந்து பெற்றான். ஆகிய நான்கு விடயங்கள் வினவப்படும் வரை ஓர் அடியானின் பாதங்கள் மறுமை நாளில் நகரமாட்டாது.” என குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆதாரம்: திர்மிதி)What are you Smoking_Image
இந் நபிமொழியின் அடிப்படையில் நான்கு விடயங்களுக்கு அவன் மறுமையில் பதில் சொல்ல வேண்டும்.
01 வாழ்நாள்:
புகைப்பிடிப்பவன் வாழ்நாட்களை வீணாக்கி அழித்துக் கொள்வதனால் இறைவனுக்கு மாறு செய்கிறான்.
02. அறிவு:
புகைப்பிடிப்பவன் புகைத்தலினால் ஏற்படும் விபரீதங்களையும் அது ஷரீஆவில் தடுக்கப்பட்ட ஒன்று என்பதையும் அறிந்த பின்னரும் அப்பழக்கத்திலே பிடிவாதமாயிருப்பானாயின் அவனுக்களிக்கப்பட்ட அறிவு அவனுக்கெதிராகவே மறுமையில் சாட்சி சொல்லும்.
03. செல்வம்:
புகைத்தலுக்காக பணம் ஒதுக்குவது, செல்வத்தைப் பிரயோசனமற்ற வகையில் வீண்விரயம் செய்வதாகும். செல்வமானது அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அமானிதம். அதனை அவன் திருப்தியுறும் வகையில், ஆகுமான விடயங்களில் செலவளித்தல் அவனது பொறுப்பாகும்.
04. உடல்:
மனித உடல், அதனுள் பொதிந்துள்ள பலம், சக்தி என்பன அவனது ஒவ்வொரு உறுப்பையும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்க பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட அமானிதங்களாகும். இதற்கு மாற்றமாக அவன் தனதுடலை நோய்களின் பாவங்களின் உறைவிடமாக ஆக்கிக்கொள்ளக் கூடாது. புகைத்தல் எனம் துறையினூடாக அவனது உடலினுள் ஷைத்தான் நுழைய ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.World-Anti-Tobacco-Day
“கேள்வி, பார்வை, உள்ளம் இவை ஒவ்வொன்றையும் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்” என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
“யார் வெங்காயம் அல்லது வெள்ளைப் பூண்டை உண்கிறாரோ அவர் பள்ளியினுள் நுழையாது வீட்டிலே இருந்து கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்)
இந்நபிமொழியினூடாக நபி (ஸல்) அவர்கள் வெங்காயம், வெள்ளைப் பூண்டை உண்டவர்களுக்கு முஸ்லிம்களின் அவை, பள்ளிவாசல் என்பவற்றிலிருந்து ஒதுங்கி இருக்குமாறு கட்டளையிட்டுள்ளார்கள். மேற்குறிப்பிட்டவை போலன்றி ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்ற அதேவேளை அசிங்கமான மிகவும் வெறுக்கத்தக்க வாசனையை வெளிப்படுத்தும் புகைத்தலுக்கு அடிமையானவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைவது என்பது கண்டிப்பாகத் தடுக்கப்பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நுஃமான் பின் பiர் (றழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.
“ஹலாலான விடயங்கள் தெளிவானவை. ஹராமான விடயங்கள் தெளிவானவை. இவற்றுக்கிடையே அனேகமானோர் புரிந்து கொள்ளாத சந்தேகத்திற்கிடமான விடயங்கள் உள்ளன.
யார் இவற்றைத் தவிர்ந்து கொள்கிறாரோ அவர்தன் மார்க்கத்தையும், மானத்தையும் பாதுகாத்துக் கொள்கிறார்.
யார் அவற்றில் விழுந்து விடுகிறாரோ அவர் ஹராத்தில் விழுந்து விடுகிறார்.” (குதுபுஸ் ஸித்தா)
தற்கொலை செய்து கொண்டோரைப் பற்றி கூற வந்த நபி (ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.
“உலகிலேயே ஒருவர் எதன் மூலம் தற்கொலை செய்து கொள்கிறானோ அதன் மூலம் மறுமையில் அவன் தண்டிக்கப்படுவான்.” (அஹ்மத்) எனவே நிக்கோடின் என்ற விஷத்தினால் தற்கொலை செய்பவனின் முடிவும் மறுமையில் பயங்கரமாக இருக்கும்.
அல் இஜ்மாஃ, அல் கியாஸ்
போதையூட்டுபவை, விறைப்பூட்டுபவை, அருவருக்கத்தக்கவை, நஞ்சு என்பவற்றோடு புகையிலை ஒப்பீடு செய்யப்படுகின்றது. அடிப்படையில் மேற்சொன்னவை அனைத்தும் ஹராமாக்கப்படக் காரணம் (இல்லத்), போதையூட்டல், ஆரோக்கியத்திற்கு கேடு விளைவித்தலாகும். இவ்வகையில் புகைத்தலும் இந்நியாயத்தைக் கொண்டிருப்பதால் ஹராமெனத் தீர்மானிக்கப்படுகின்றது.
ஷரீஆ விதிகள் (கவாஇத் பிக்ஹிய்யா)
பல்லாயிரக்கணக்கான சட்டங்களைப் பெறத்தக்க அல்குர்ஆன், ஸ¤ன்னாவின் அடியாகப் பெறப்பட்ட சில அடிப்படை ஷரீஆ விதிகள் இஸ்லாமிய சட்டவாக்க கலையிலே காணப்படுகின்றன. இவற்றின் மூலம் காலவோட்டத்தில் புதிதாகத் தோன்றுகின்ற பிரச்சினைகளுக்கு அவ்வப்போது தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வகையில் புகைத்தலை தடை செய்யும், ஹராமாக்கும் சில சட்ட விதிகள் பின்வருமாறு…bad-effect-of-smoking
01 தனக்கோ, பிறருக்கோ தீங்கிழைக்கக் கூடாது.
இதன் உப பிரிவுகளில் ஒன்றே. ‘தீங்கு தவிர்க்கப்பட வேண்டும்.’ என்பதாகும். இவ்விதி பற்றி அறிஞர் ‘முஸ்தபா ஸர்கா’ அவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள். ‘இவ்விதியானது ஷரீஆவின் தூண்களில் ஒன்று. இதற்கு ஏராளமாக குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் சான்றாக உள்ளன. தீங்கையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தடுத்து நிறுத்துவதற்கான அஸ்திவாரம் இதுவே. நலன்களை நிலை நிறுத்தவும் கேடுகளை கலைந்தெறியவும் உதவும் அடிப்படையும் இதுவே. நிகழ்வுகளுக்கு ஷரீஆ சட்ட விதிகளைப் பெறுவதில் சட்டவியல் விற்பன்னர்களின் அளவு கோலும் இதுவே.’
(அல் மத்கல் – பக். 02
02 பிரயோசனமளிப்பவை அடிப்படையில் ஆகுமானவையாகும்.
புகைத்தல் அடிப்படையில் பிரயோசனமளிக்காத அதேவேளை தீங்கையும் அழிவையும் ஏற்படுத்துவதனால் அது ஹராமானதாகும்.
03. நலன்களை நிலை நிறுத்துவதை விடக் கேடுகளை தடுப்பது முதன்மையானது.
புகைத்தல் ஆரோக்கியத்திற்கும் செல்வத்திற்கும் கேடு விளைவிப்பதோடு மக்களுக்குத் தீங்கையும் ஏற்படுத்துகின்றது. நலனும் கேடும் ஒரே நேரத்தில் எதிர்ப்படின், கேட்டினைத் தடுப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படும். ஏனெனில் ஷரீஆவானது விதிக்கப்பட்டவற்றை விட விலக்கப்பட்டவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் ‘நான் ஏவியவற்றை நீங்கள் முடிந்தளவு எடுத்து நடவுங்கள். தடுத்தவற்றை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள்.’ என்றார்கள்.
04. தீமைகளுக்கான வாயில்கள் அடைக்கப்பட வேண்டும்.
ஹராத்திற்கு இட்டுச் செல்பவையும் ஹராமானதாகவே ஷரீஆவில் கருதப்படுகின்றது. புகைத்தல் பலவீனத்தை 2|@னிrஜிகின்ற அதேவேளை மேற்சொன்ன விதியினடிப்படையில் புகைத்தலானது இன்னும் பல ஹராமான விடயங்களுக்கு இட்டுச் செல்வதால் ஹராமானதாகி விடுகின்றது.
05. ஹலால் ஹராம் என்பன ஒன்று சேர்ந்திருப்பின் ஹராமே முதன்மை பெறும்.
இமாம் ஜுவைனி அவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள்.
“ஒரு விடயத்தில் அதிகமான ஹலால், ஹராம் என்பன கலந்திருப்பின் அது ஹராமாகவே கருதப்படும்.” இவ்விதியினூடாகவும் புகைத்தல் ஹராம் என நிரூபிக்கப்படுகின்றது. புகைத்தலில் ஒரு சில நலன்கள் இருப்பதாக சிலர் வாதிட்டால் இவ்விதியினூடாக அவர்களது வாதம் முறியடிக்கப்படுகின்றது. உண்மையில் நவீன விஞ்ஞானம் நாளுக்கு நாள் புகைத்தலினால் விளையும் புதுப்புது பாதகங்களை கேடுகளை கண்டுபிடிக்கிறதே தவிற அதனால் ஏற்படும் சாதகங்களை முன்வைக்கவில்லை என்பது யதார்த்தம்.
எனவே மேலே விளக்கிய அடிப்படைகள் மற்றும் ஆதாரங்களின் ஊடாக புகைத்தல் ஹராமானது என்பது மிகவும் தெளிவாகிறது. இவற்றையும் மீறி ஒருவர் இப்பழக்கத்தில் தொடர்ந்திருப்பின் அவர் பிடிவாதக்காரராக அல்லது மனோ இச்சைக்கு அடிமைப்பட்டவராகவே நிச்சயம் இருப்பார் என்பதில் ஐயமில்லை.
அதேவேளை புகைத்தல் ஹராம் என்பது போல அதனை விற்பனை செய்வதும் ஹராமாகும். எனினும், சமகாலத்தில் முஸ்லிம் சமூகத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இத்தகைய செயலை அலட்சியமாக கருதி விடுகின்றனர். தாம் செய்யும் தொழிலில் இவை சேர்க்கப்படாத போது வியாபாரம் பின்னடைந்து விடுகின்றது என்ற வாதங்களை முன்வைப்போரும் உள்ளனர்.
யதார்த்தத்தில் அல்லாஹ்வின் அருளை புரிந்து கொள்ளாத இத்தகைய கொடுக்கல், வாங்கல்கள் ஒரு போதும் வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்தாது என்பது திண்ணம். பின்வருமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
“ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் சம்பாதித்தவற்றில் இருந்து நல்லவற்றையே செலவு செய்யுங்கள்….”
இன்று சமூகத்தின் ஹராம் அலட்சியமான நிலையில், சிலபோது புரிந்து கொள்ள முடியாத நிலையில் பரவலாக மனித செயற்பாடுகளுடன் கலந்து விடுகின்றது. இது குறித்து நபி (ஸல்) அவர்கள் “ஒரு காலம் வரும் அப்போது மனிதர்கள் ஹலால், ஹராம் பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்கள். அலட்சியமாக இருப்பார்கள்” என குறிப்பிட்டார்கள்.
அவ்வாறான சூழலில் நாம் அதீத கவனம், பாதுகாப்பு இல்லாத போது எமது மறுமை வாழ்க்கையும் பாலாகிவிடும் என்ற அச்சம் ஒவ்வொரு மனித உள்ளத்திலும் அணிவிக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளையும் பரவலடையச் செய்ய வேண்டும்.
தொகுப்பு:-
எஸ்.எம். இர்ஸாத் இஸ்லாஹி விரிவுரையாளர்,
சிறாஜிய்யா அரபுக் கல்லுரி, ஓட்டமாவடி.

0 comments:

Post a Comment