ஆடை அணியாதவர்கள் உலகில் இருக்கிறார்களா என ஒரு வினா எழுப்பினால் “இல்லை” என்ற
பதிலைத்தான் அதிகமானவர்கள் உடனடியாகக் கூறுவார்கள். காரணம் ஆடை
அணியாதவர்கள் உலகில் இருக்கலாம் என்று கற்பனைகூடச் செய்ய எம்மவர்களால்
முடியாது. எனினும், உலகின்
சில பகுதிகளில் ஆடை அணியாமல் வாழும் ஒரு சிலர் இன்னும் இருக்கத்தான்
செய்கிறார்கள். அத்தகையவர்களை நாகரிகமடைந்தோர் என்று எவரும் கருதுவதில்லை.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். காரணம், ஒரு
மனிதனின் தோற்றம் அவரது ஆடையுடன் இணைந்ததாகவே மற்றொருவரின் உள்ளத்தில்
பதித்திருக்கும். வழமையாக அணியும் ஆடையை விடுத்து மற்றோர் ஆடையை ஒருவர்
அணிந்து வந்தால், என்ன இன்று வித்தியாசமாக இருக்கிறீர்களே என அறிமுகமானவர்கள் ஆச்சரியத்தோடு கேட்பார்கள். அது மட்டுமல்ல, ஒரு பயணம், விழா, வைபவம் என்றவுடனேயே எந்த ஆடையை அணிந்து செல்வது என்ற சிந்தனைதான் முதலில் வருகிறது.
இவ்வாறு மனிதனை விட்டுப் பிரிக்க முடியாத அங்கமாக மனித வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஒன்றே ஆடை.
ஆடை அணிகின்ற ஒவ்வொருவரும் தங்களது மதம் கூறுகின்ற வரையறைகளைப் பின்பற்றுகின்றார்களோ இல்லையோ, தமக்குள்
ஒரு வரையறையைப் பேணிக் கொள்கிறார்கள். அத்தகைய வரையறைகள் ஒரு பிரதேசத்தின்
அல்லது இனத்தின் கலாசாரம் சார்ந்ததாகவும் இருக்கலாம். ஆடைகளுக்கான
வரையறைகள் எந்தப் பின்னணி கொண்டவையாக இருந்தபோதிலும், ஆடை அணிவதற்கான நோக்கங்கள் பொதுவானவை என்றே கூற வேண்டும். அவையாவன.
01. மனிதனின் மானத்தையும் அந்தரங்கத்தையும் மறைத்தல்
02. கண்ணியமான ஒரு தோற்றத்தையும் ஆளுமையையும் வெளிப்படுத்தல்
03. பிற மனிதர்களின் நன்மதிப்பைப் பெறல்
இந்தப்
பொது நோக்கங்களை அடிப்படையாக வைத்து ஆடை பற்றி இன்று
கிளப்பப்பட்டிருக்கும் சர்ச்சைகளுக்கு ஒரு தெளிவைப் பெற்றுக் கொள்ள விழைவதே
இந்த ஆக்கமாகும்.
இனி நோக்கங்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
நோக்கம் 01: மானத்தையும் அந்தரங்கத்தையும் மறைத்தல்
இது
மனிதனின் இயல்போடு இணைந்த ஒரு நோக்கமாகும். ஒரு மிருகத்திடம் இந்த உணர்வு
இயல்பில் இல்லை. இந்த உணர்வு இல்லாமல் போகும்போது மனிதனும் மிருகமாகிறான்.
மனிதனிடம் காணப்படும் இந்த இயல்பான மான உணர்வுதான் வீட்டிலும் வீதியிலும் எந்நேரமும் அவனை ஆடையோடு வாழச் செய்கிறது. எனினும், இந்த
மான உணர்வைப் பாதுகாக்கும் முறையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக
விளங்கியிருக்கிறார்கள். அதிலும் ஆண்களின் மான உணர்வு பாதுகாக்கப்பட
வேண்டிய முறை வேறு பெண்களின் மான உணர்வு பாதுகாக்கப்பட வேண்டிய முறை வேறு
என்பது பற்றியும் பலர் அறியாதிருக்கிறார்கள்.
ஆடை
அணியும் நோக்கங்களில் அனைவரும் ஒன்றுபட்டாலும் அணியும் முறைகளில் வேறுபாடு
இருக்கவே செய்கிறது. ஆடை பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு ஆண், பெண்
இருபாலாரின் இயல்புகளையும் கருத்தில் கொண்டதாகவே காணப்படுகிறது.
ஆண்களினதும் பெண்களினதும் மான உணர்வுகளுக்கேற்பவே அவர்களுக்கான ஆடை
வரையறைகளும் இஸ்லாத்தில் வேறுபடுகின்றன.
பெண்களின் மான உணர்வு:
பெண்களின்
மான உணர்வு ஆண்களது மான உணர்வை விட உணர்ச்சிபூர்வமானது. ஓர் எளிய
உதாரணத்தை நோக்கினால் இலகுவாக இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.
ஓர் ஆணை ஒரு பெண் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் அந்தப் பார்வை ஆணை வெட்கத்துக்குள்ளாக்க மாட்டாது. மாறாக, அவனுக்குள்
வேறு உணர்வுகளைத் தோற்றுவிக்கும். இதற்கு நேரெதிராக தன்னை உற்றுநோக்கிய
வண்ணம் ஓர் ஆண் இருக்கிறான் என்பதை ஒரு பெண் உணர்ந்தால் மறு கணம் வேகமாகச்
சென்று அவள் மறைவிடுகிறாள். இயல்பான அவளது வெட்க உணர்வு அவளை அவ்வாறு
செய்யத் தூண்டுகிறது. அது மட்டுமல்ல, அவளது பௌதீகத் தோற்றமும் உடலமைப்பும்கூட இந்த உணர்வை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. காவியங்கள், கதைகள்
என்பன பெண்களை அணுவணுவாக வர்ணிப்பதற்கு காரணம் அவளது பௌதிகத் தோற்றமே.
பெண்ணின் ஒவ்வோர் அங்கமும் அவளது மான உணர்வைக் கூர்மையாக்குகின்றன என்பது
வெளிப்படையான ஒன்று.
ஆண்களின் மான உணர்வு:
ஆண்களைப்
பொறுத்தவரை மான உணர்வு வித்தியாசமானது. பெண்களின் மான உணர்வில் வெட்கம்
கலந்திருப்பதுபோல ஆண்களின் மான உணர்வில் கௌரவம் கலந்திருக்கிறது. ஒரு பெண்
ஆடை அணியும்போது முதலில் வெட்க உணர்வை மறைத்துக் கொள்கிறாள். ஆடை அணிந்த
பின்னரும்கூட மற்றொர்
ஆண் அவளை நோக்கும்போது அவள் தர்மசங்கடத்திற்கு உள்ளாகிறாள். இந்த உணர்வைப்
போக்குவதற்கு அவள் தனது உடலில் மேலும் சில பகுதிகளை மறைக்க
வேண்டியிருக்கும். வெட்க உணர்வையும் பிறரைப் பார்க்கின்றபோதும் பிறரால்
பார்க்கப்படுகின்றபோதும் ஏற்படுகின்ற சங்கடத்தையும் குறைப்பதற்கு அவள்
ஒன்றில் வீட்டினுள் இருக்க வேண்டும். அல்லது, வீட்டுக்கு வெளியே வருவதானால் அந்த உணர்வுகளைக் குறைக்குமளவு போதிய பொருத்தமான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.
ஒரு பெண்ணிடமிருக்கும் இயல்பான வெட்க உணர்வு, அதற்கு
மேலால் பிறர் பார்க்கின்றபோது ஏற்படுகின்ற தர்மசங்கடம் என்பவற்றை
மறைக்கும் ஆடையையே இஸ்லாம் அவளுக்கு அறிமுகம் செய்துள்ளது. ஒரு பெண் தனது
முகத்தையும் மணிக்கட்டுக்குக் கீழால் இரு கைகளையும் தவிர உடலின் அனைத்துப்
பகுதிகளையும் மறைக்கும்போது நாணம், அச்சம், தர்மசங்கடம் போன்றவற்றிலிருந்து அவள் பாதுகாப்புப் பெறுகிறாள். அதுமட்டுமல்ல, தனக்குள் ஒரு சௌகரியத்தையும் அவள் உணர்கிறாள். அத்தோடு, பிற ஆண்களைப் பார்க்காமல் தனது பார்வையையும் அவள் தாழ்த்திக் கொள்ளும்போது அவளது பாதுகாப்புணர்வு முழுமை பெறுகிறது.
முகத்தையும்
இரு கைகளையும் மூடாதிருக்கும்போது நாணம் தர்மசங்கடம் என்பவற்றிலிருந்து
ஒரு பெண் முழுமையாகப் பாதுகாப்புப் பெற முடியாது. எனவே, அவற்றையும்
முடிவிட வேண்டும் என்று கூறுபவர்களும் முஸ்லிம்கள் மத்தியில்
இருக்கிறார்கள். அந்தக் கருத்தை முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கா விட்டாலும்
அதனைக் கட்டாயமாகக் கருதவில்லை. மூட விரும்பும் பெண்களின் உரிமை என்றே அதனை
ஏனையோர் கருதுகின்றனர்.
முகம் மற்றும் மணிக்கட்டுகளுக்குக் கீழால் இரு கைகள் தவிர்ந்த உடலின் ஏனைய பகுதிகளை மறைக்கும்போது ஒரு பெண் வெட்கம், தர்ம சங்கடம் என்பவற்றிலிருந்து விலகி ஒரு சௌகரிய உணர்வைப் பெறுகிறாள் என்று பார்த்தோமல்லவா? அந்த சௌகரிய உணர்வு எல்லைமீறினால் ஓர் ஆணைப் போன்ற துணிவும் செயல்படும் தன்மையும் அவளிடம் வந்துவிடலாம். எனவே, அதனைத் தவிர்ப்பதற்கு முகத்தைத் திறந்திருப்பது நல்லது என்ற கருத்தும் முஸ்லிம்கள் மத்தியில் உண்டு.
எவ்வாறாயினும், ஒரு பெண்ணின் மான உணர்வோடு கலந்திருக்கும் வெட்கம், தர்ம
சங்கடம் என்பவை ஆணின் மான உணர்வில் இல்லை. ஒரு பெண் தனது மான உணர்வை
இழக்கும்போது வெட்கத்தால் கூனிக்குறுகிப் போகிறாள். ஆண் தனது மான உணர்வை
இழக்கும்போது இழிவுக்குள்ளாவதாக நினைக்கிறான். மான உணர்வை மறைக்கும்போது
கௌரவம் பாதுகாக்கப்படுவதாக ஆண் கருதுகிறான். ஆணின் ஆடைக் கலாசாரம் இந்தப்
பின்னணியிலேயே வளர்ந்து வந்திருக்கிறது.
இஸ்லாமும்
ஆணின் இயல்புக்கேற்ப அவனது மான உணர்வுகளுக்குப் பொருத்தமான ஆடை
வரையறைகளைத் தந்திருக்கிறது. தொப்புளின் மேற்பகுதி முதல் முழங்காலின்
கீழ்ப் பகுதி வரை ஓர் ஆண் தனது உடலின் அந்தரங்கத்தை அவசியம் மறைத்தாக
வேண்டும். ஏனைய பகுதிகளை மறைத்துக் கொள்வது அவனது கௌரவ உணர்வைப் பொறுத்தது.
இந்த அடிப்படையிலேயே சிலர் எப்போதும் Smart Dressஐ விரும்புகிறார்கள். சிலர் Casualஐத் தெரிவு செய்கிறார்கள். சிலர் ஜம்பரோடு சுற்றித் திரிகிறார்கள்.
ஆண்பெண் பாலாரிடையே இருக்கும் இத்தகைய வேறுபாடுகள் இயல்பானவை. எனினும், அதிசயம் என்னவென்றால், பெண்களைவிட
ஆண்களே தமது உடலின் அதிகமான பகுதிகளை மறைக்கிறார்கள். பெண்கள் தமது மான
உணர்வுகளை வலிந்து புறக்கணித்துவிட்டார்களோ தெரியவில்லை. அவர்கள்
ஆண்களைவிடக் குறைவாகவே உடலை மறைத்துக் கொள்கிறார்கள். மேலைத்தேய கலாசாரத்
தாக்கமும் இந்த நிலையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது.
எனினும், மேலைத்தேய
கலாசாரத்தின் தாக்கத்துக்கு உட்படாமல் ஆடைக் கலாசாரத்தைப் பேணுவதில்
முஸ்லிம் சமூகம் வெற்றி கண்டிருக்கிறது என்றே கூற வேண்டும். இதனை விரும்பாத
சிலர் முஸ்லிம் பெண்களும் மேலைத்தேயப் பாணியில் ஆடை அணிய வேண்டும் என்று
வலியுறுத்துகிறார்கள். முஸ்லிம் பெண்கள் தமது சொந்த வீடுகளில் அணியும்
ஆடைகள்கூட மேலைத்தேயப் பெண்கள் வீதியில் அணிந்து செல்லும் ஆடைகளைவிட
கௌரவமானவை. அவர்கள் சிலபோது இரவு ஆடையை அணிந்து கொண்டல்லவா வீதிக்கு வந்து
விடுகிறார்கள்!
இதனால்
மான உணர்வைப் பாதுகாக்கும் ஆடையின் முதல் நோக்கம் என்னவாகிறது என்பதை
உரியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அது மட்டுமல்ல, நாம்
இங்கு கலந்துரையாடும் உண்மைகளை அனுபவ ரீதியாக உணர்ந்து பார்க்க
விரும்பினால் ஒரு முஸ்லிம் பெண் அணிகின்ற ஆடையை வாழ்க்கையில் ஒரு முறையாவது
ஒவ்வொரு முஸ்லிமல்லாத பெண்ணும் தனது அறையிலாவது அணிந்து பார்க்க வேண்டும்.
அந்த அனுபவத்தை தமது ஆண்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும்.
மானத்தையும்
மான உணர்வையும் பாதுகாப்பதை விட மனிதனை ஏனைய உயிரினங்களில் இருந்து
வேறுபடுத்தும் சிறப்புக் காரணி வேறு எதுதான் இருக்க முடியும்? அறிவு இல்லாத நிலையில் மட்டும்தான் அதாவது ஒரு குழந்தையாக இருக்கும்போது மட்டும்தான் இந்த உணர்வு ஒரு மனிதனிடம் இல்லாதிருக்குமே தவிர, புத்தி பேதலித்தாலும் கூட இத்தகையதொரு நிலை ஒரு மனிதனுக்கு வருவதில்லை.
இதுவரை முதலாவது நோக்கம் பற்றிப் பார்த்தோம். இனி இரண்டாவது நோக்கம் பற்றி விளங்க முயற்சிப்போம்.
2ஆவது நோக்கம்: கண்ணியமான ஒரு தோற்றத்தையும் அழகையும் ஆளுமையையும் வெளிப்படுத்தல்
ஆண்களைப்
பொறுத்தவரை இந்த நோக்கத்தை நிறைவேற்றும் ஆடைகளைத் தெரிவு செய்வது
சிரமமல்ல. ஒரு நாட்டில் கௌரவமாகக் கருதப்படுகின்ற ஆடையை இஸ்லாமிய
வரையறைகளைப் பேணி அணிவதன் மூலம் ஆண்கள் இந்த நோக்கத்தை இலகுவாக
நிறைவேற்றலாம். நீண்ட காற்சட்டை, சேர்ட், சாரம், ஜுப்பா
போன்ற ஆடைகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். இஸ்லாம் ஆடைகளுக்கு
வடிவங்களைத் தரவில்லை. வரையறைகளையே தந்திருக்கின்றது. வரையறைகளை அறிந்து
ஆடைகளை வகைப்படுத்திக் கொண்டால் போதுமானது. ஆண்கள் தெரிவு செய்யும் இத்தகைய
ஆடைகள் அவர்களது கண்ணியத்தையும் அழகையும் ஆளுமையையும்
வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தால் அவை இஸ்லாமிய ஆடைகளே!
எனினும், பெண்கள் தமது அழகையும் ஆளுமையையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணியலாமா என்ற வினா இங்கு எழுகிறது.
இந்த வினாவுக்குப் பதிலளிக்க முன்பு ஓர் அல்குர்ஆன் வசனத்தைப் பார்த்து விடுவோம். 7:26 ஆவது வசனத்தில் ஆடை பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான்:
“ஆதமுடைய மக்களே! உங்களது மானத்தை மறைப்பதற்கும் உங்களுக்கு அலங்காரமாகவும் நாம் உங்களுக்கு ஆடையை அளித்துள்ளோம். எனினும், தக்வா (பயபக்தி) எனும் ஆடையே மேலானது இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றாகும். (இதன் மூலம்) அவர்கள் நல்லுணர்வு பெறுவார்களாக!”
இந்த வசனத்தில் நாம் இதுவரை பார்த்த இரண்டு நோக்கங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மானத்தை மறைத்தல், அழகையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்தல் என்பனவே அவை. ஆடையின் நோக்கங்களுள் ஒன்றான “அழகு” என்பதை அல்குர்ஆன் “ரீஷ்” என்ற அரபுச் சொல் மூலம் குறிப்பிடுகிறது. “ரீஷ்” என்பதன் பொருள் பறவையின் இறக்கையாகும். ஒரு பறவைக்கு அதன் இறக்கைகள் எவ்வாறு அழகைக் கொடுக்கின்றனவோ, அதுபோல் ஆடை மனிதனுக்கு அழகைக் கொடுக்கிறது என்பதையே இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த வசனம் “ஆதமுடைய மக்களே!” என
விழித்துப் பேசுவதனால் ஆண்களின் ஆடையழகு பற்றி மட்டும்தான் பேசுகிறது
என்று கூற முடியாது. ஆதமுடைய மக்களில் பெண்களும் அடங்குவர். எனவே, பெண்களின்
ஆடையும் அவர்களுக்கு அழகையும் கண்ணியத்தையும் கொடுக்கிறது என்ற
முடிவைத்தான் இந்த வசனத்திலிருந்து நாம் விளங்க முடியுமாக இருக்கிறது.
எனினும், இந்த வசனத்திற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
“தக்வா எனும் இறையச்ச ஆடையே மிகச் சிறந்தது.”
ஒரு பெண், இஸ்லாம் மறைக்குமாறு கூறும் அவயவங்களை எந்த ஆடையாலும் மறைத்துக்கொள்ளலாம். அத்தகைய ஆடையின் நிறம், வடிவம் என்பன இஸ்லாமிய வரையறைக்குட்பட்டதாக இருப்பினும் கூட அவள் மற்றுமோர் அம்சத்தைக் கருத்திற் கொள்ள வேண்டும். தனது ஆடை, தன்னை
ஒரு காட்சிப் பொருளாக ஆக்கிவிடாமலிருப்பதை அவள் உறுதி செய்ய வேண்டும்.
அதற்காகவே அல்லாஹ் மற்றுமோர் ஆடையின் அவசியத்தை இங்கு வலியுறுத்தியுள்ளான்.
அதுதான் இறையச்சம் எனும் ஆடையாகும்.
ஆக, இந்த வசனத்தில் நாம் இரண்டு விடயங்களை விளங்கிக் கொள்கிறோம்.
1. உடலின் அழகை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிய முடியாது. அதாவது, உடலுறுப்புகளின் அளவையும் பருமனையும் வெளிப்படுத்தும் இறுக்கமான ஆடைகளையோ, அல்லது உடலுறுப்புக்களை வெளியே காட்டுமளவு மெல்லிய ஆடைகளையோ அணிய முடியாது. எனினும், ஆடை
மனிதனுக்கு ஓர் அழகைக் கொடுக்கத்தான் செய்கிறது. அந்த அழகு பறவைக்கு
இறக்கைகள் போன்றதாகும். காகத்தின் இறக்கை போன்று அது கறுப்பாகவும்
இருக்கலாம். ஏனைய பறவைகளின் இறக்கை போன்று வேறு நிறத்திலும் இருக்கலாம்.
அதனை இப்படித்தான் என வடிவத்தாலோ நிறத்தாலோ வரையறை செய்யவில்லை குர்ஆன்.
2. உடலின்
அழகை மறைத்தவர்கள் ஆடையின் அழகால் பெருமிதம் அடையாமலும் ஆடைக்
கவர்ச்சிகளால் பிறரை அசௌகரியப்படுத்தாமலும் இருப்பதற்கு மற்றுமோர் ஆடை
இருக்கிறது. அந்த ஆடையை அணிந்து கொள்ளுமாறு அல்குர்ஆன் வலியுறுத்துகிறது.
அது உடலுக்கு அணிவிக்கப்படும் ஆடையல்ல உள்ளத்திற்கு அணிவிக்கப்பட வேண்டிய
இறையச்சம் எனும் ஆடையாகும். இறையச்சம் என்ற ஆடையை யார் உடுத்திக்
கொண்டார்கள் யார் உடுத்திக் கொள்ளவில்லை என்பது மனிதர்களாகிய எமக்குத்
தெரியாது. அந்த இரகசியத்தை ஆடை அணிந்தவரும் அல்லாஹ்வுமே அறிய முடியும்.
இந்த வகையில், ஆணாயினும் சரி, பெண்ணாயினும்
சரி ஒருவர் இஸ்லாமிய வரையறைக்கு மாற்றமில்லாத ஆடையை அணிந்தால் நாம் அதனை
அங்கீகரிப்பதே முறையாகும். குறைந்த பட்சம் அதனை விமர்சிக்காதவர்களாகவேனும்
நாம் இருக்க வேண்டும். காரணம், இன்று அதிகமானோர் இஸ்லாமிய ஆடை வரையறைகளைப் பேணிக் கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள்.
மானத்தை
மறைத்தல் என்ற நோக்கத்தோடு அழகாகவும் கண்ணியமாகவும் இருத்தல் என்ற
நோக்கத்தையும் அடையும் வகையில் ஒருவர் (ஆணாயினும் பெண்ணாயினும்) எப்படி ஆடை
அணிய வேண்டும் என்று இதுவரை பார்த்தோம்.
உலகில் அனைவரும் இந்த நோக்கங்களை அடைவதற்காகவே ஆடை அணிகிறார்கள். அவர்கள் இஸ்லாம் விதித்த வரையறைகளுக்கேற்ப அணிபவர்களாயினும் சரி, வேறு வகையில் அணிபவர்களாயினும் சரி. எனினும், ஒருவரிடம் இந்த நோக்கங்கள் இருந்தால் மட்டும் போதுமா? அல்லது இந்த நோக்கங்களை அவர் அணிந்திருக்கும் ஆடை உண்மையில் பிரதிபலிக்க வேண்டுமா? அந்தப் பிரதிபலிப்பை எப்படித் தீர்மானிப்பது? இந்த வினாக்களுக்கு விடை தருகிறது ஆடை அணிவதன் மூன்றாவது நோக்கம்.
மூன்றாவது நோக்கம்: பிற மனிதர்களின் நன்மதிப்பைப் பெறல்
ஒருவர்
அணியும் ஆடை அவருக்கு நன்மதிப்பையும் கொடுக்கலாம். அவப் பெயரையும்
கொடுக்கலாம். அவர் எந்த நோக்கத்தோடு அந்த ஆடையை அணிந்திருந்தாலும் சரி.
அதிலும் விஷேடமாகப் பெண்கள் அணியும் ஆடை ஒன்றில் அவர்களுக்கு
கண்ணியத்தையும் நன்மதிப்பையும் பெற்றுக் கொடுக்கிறது அல்லது அவர்களை நோக்கி
மற்றவர்களின் பிழையான உணர்வுகளைத் தூண்டுகிறது.
ஆண்கள்
அணியும் ஆடையும் அவ்வாறே. ஆண்களின் ஆடைகள் பெண்களின் ஆடைகள் போன்று
ஒப்பீட்டளவில் பிழையான உணர்வுகளைத் தூண்டா விட்டாலும் குறித்த பிரச்சினை
முற்றாக இல்லை என்று கூறுவதற்கில்லை. அதே நேரம் பிறரின் நன்மதிப்பைப்
பெற்றுக் கொடுப்பதிலும் அல்லது பிறரின் ஏளனப் பார்வைக்கு ஒருவரை
ஆளாக்குவதிலும் ஆண்கள் அணியும் ஆடைகளுக்கும் பெரும் பங்குண்டு. ஆண்கள்
அணியும் சில ஆடைகள் ஆண்களுக்கேயுரிய கௌரவமானதொரு தோற்றத்தைப்
பிரதிபலிப்பனவாக இருக்கின்றன மற்றும் சில ஆடைகள் ஆண்களின் தகுதிக்கு எந்த
வகையிலும் பொருத்தமற்றவையாக இருக்கின்றன. அதே போன்று சில ஆண்களுக்கு சில
ஆடைகளும் வேறு சிலருக்கு இன்னும் சில ஆடைகளும் பொருத்தமாக இருக்கின்றன.
நன்மதிப்பையும் அதிகரிக்கச் செய்கின்றன.
“நன்மதிப்பு” என்பது
ஆடை அணிபவரின் எதிர்பார்ப்பினால் கிடைப்பதல்ல. அவர் அணிந்திருக்கும்
ஆடைக்கு சமூகத்தில் என்ன மதிப்பு இருக்கிறது என்பதைப் பொறுத்ததே
“நன்மதிப்பு“ ஆகும்.
நபி
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னைக் காண வந்த தூதுக்குழுக்களை
சந்திப்பதற்கென தனியானதும் பெறுமதிமிக்கதுமான ஆடையை வைத்திருந்தார்கள் என
அண்ணலாரின் வரலாறு கூறுகிறது. இது ஆடையின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற
நன்மதிப்பு எனும் நோக்தத்தைத் தெளிவுபடுத்தும் ஒரு சான்றாகும்.
அறிமுகமில்லாத
ஒருவர்கூட நெருங்கிப் பழகும் வகையில் மற்றவர் அணிந்திருக்கும் ஆடை
சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதும் இந்த நோக்கத்தின்பாற்பட்டதே. அந்த
அசௌகரியத்தைக் கருத்திற் கொண்டுதான் தூதுவர்களை சந்திப்பதற்காக நபியவர்கள்
தனியான, ஆடையை
வைத்திருந்தார்கள் போலும். ஆண்கள் ஆண்களுடனும் பெண்கள் பெண்களுடனும்
சௌகரியமாகப் பழகுவதற்கு அவர்கள் அணியும் ஆடையின் நன்மதிப்பும் ஒரு
காரணமாகும்.
இந்த
வகையில் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் அணியும் ஆடைகள் நீண்ட காலமாக
ஏனையோரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தன என்றே கூற வேண்டும். இந்த நாட்டிற்கு
முஸ்லிம்கள் நேற்றுத்தான் வந்து அறிமுகமாகி, இந்த
நாட்டுக்குத் தெரியாத ஒரு புது வகை ஆடையை அவர்கள் அணியவில்லை இந்த வகையில்
முஸ்லிம்களின் ஆடை பற்றி கிளப்பப்படும் சர்ச்சைகள் மிகைப்படுத்தப்பட்டவை
என்றே கூற வேண்டும். அவற்றில் உண்மை இல்லை.
அதேநேரம், முஸ்லிம்களும் இது பற்றி சிந்திக்க வேண்டும். எமது நாட்டின் 90 ஆன சகோதர சமூகங்களைச் சேர்ந்த மக்களின் நன்மதிப்பை நாங்களும் புறக்கணிக்க முடியாது. அவர்கள் எங்களை மதிப்பதற்கு எமது நற்குணங்கள், பண்பாடுகள், நடத்தைகளுக்குப்
பங்கிருப்பது போல எமது ஆடைகளுக்கும் ஒரு பங்குண்டு என்பதை நாம்
மறுப்பதற்கில்லை. இந்த வகையில் ஆண்களோ பெண்களோ முஸ்லிம்கள் அணியும் ஆடை
பற்றிய முஸ்லிம் அல்லாதவர்களின் நடுநிலையான விமர்சனங்களை தெரிந்து
கொள்வதும் இஸ்லாமிய வரையறைகளுக்கு முரண்படாத வகையில் எமது ஆடைக்
கலாசாரத்தில் நாம் எத்தகைய ஒழுங்கைப் பின்பற்றலாம் என்று தீர்மானிப்பதும்
எமது கடமையாகும்.
இந்த அணுகுமுறையைத்தான் நாம் “ஹலால்” விவகாரத்திலும் கையாண்டிருக்கிறோம். உண்மையில் ஹலாலை நாம் விட்டுக் கொடுக்கவில்லை “ஹலால்” விவகாரத்தில் அவர்களது சில விமர்சனங்களை நாம் கருத்தில் எடுத்துக் கொண்டோம், அவ்வளவுதான்.
இலங்கையில்
முஸ்லிம்பௌத்த கலந்துரையாடல் நீண்ட காலமாக இல்லாதிருந்தமையும் இன்றைய
சர்ச்சைகள் பூதாகரமாவதற்கு ஒரு காரணமாகும். அத்தகைய கலந்துரையாடலின்
பின்னணியோடு எமது இஸ்லாமிய நடைமுறைகள் வளர்ச்சியடைந்திருந்தால் இன்று அவை
எமக்கெதிராகக் கிளப்பப்படும் சர்ச்சைகளாக மாறியிருக்க மாட்டா. இருப்பினும், காலம்
கடந்து விடவில்லை. இப்போது அந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகியிருப்பதாகக்
கருதி அதில் பங்கெடுக்க நாம் தயாரக வேண்டும். அர்த்தமுள்ள, மிகைப்படுத்தப்படாத
அவர்களது விமர்சனங்களுக்குக் காது கொடுப்பதன் மூலம் இந்தக் கலந்துரையாடலை
நாம் ஆரம்பித்து வைக்கலாம். அது எமது அடுத்த பரம்பரைக்கு இந்நாட்டில் நாம்
செய்யும் மகத்தான பங்களிப்பாகும். இனங்களுக்கிடையிலான சமூக உறவைப்
பேணுவதற்கும் அது இன்றியமையாததாகும்.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
0 comments:
Post a Comment