
படித்தவர் முதல் பாமரர் வரை... மகளை கரையேற்ற கடனை வாங்கி தத்தளிக்கும் பெற்றோர்கள். பட்டு சேலைக்கு மட்டும் பல இலட்சம் செலவழிக்கும்இ நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தினர் வரை... அனைவருக்கும் பரிட்சயமான விஷயம்தான் வரதட்சணை.
ஒரு ஆணுக்கு திருமணம் பேச்சு துவங்கி விடுமானால், நல்ல பெண் கிடைத்தால் சொல்லுங்களேன் என்ற ரீதியில் தொடங்குகிறது இந்த பெண் பார்க்கும் படலம். நல்ல பெண் என்ற வார்த்தைக்கு ஒவ்வொரு தனிமனித அகராதியிலும் வேறுபட்ட பல அர்த்தங்கள்;. நல்ல பெண் என்பவள் தீன்வழி நடக்கும் குணமான பெண்ணா?... என்றால் நிச்சயமாக இல்லை.
இவர்களுக்கு ஒரே மகள் தான், தகப்பனாரும் வெளிநாட்டில் வேலை செய்கின்றார், எனவே கரக்கும் வரை கரக்கலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டுதான் களத்தில் இறங்குகின்றனர். தகுதி ஏற்றாப்போல விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதிக இலாபம் ஈட்டித்தர வீடு, நிலம் விற்க தரகர்கள் இருப்பது போல் மாப்பிள்ளை விற்கவும் தரகர்கள் இல்லாமலில்லை.
மாப்பிள்ளை வீட்டார் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அராஜகச் செயல்கள் சொல்லி மாளாது. சாம்பார் கொண்டு வந்தால்தான் பிரியாணியில் கை வைப்பேன் என்று மாப்பிள்ளையின் உணர்ச்சி வசப்பேச்சு ஆகியவற்றிற்கு பெண்ணைப் பெற்ற காரணத்தால் பொறுமையுடன் கேட்டதை கொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது. மொத்தத்தில் இஸ்லாம் கூறும் வாழ்க்கை ஒப்பந்தம் இங்கு கேலிக் கூத்தாகவும், சந்தைப் பொருளாகவும் மாறிவிட்டது.
அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கை (ஒப்பந்தம்) செய்துள்ளனர் (அல்குர்ஆன் 4:21)
அல்லாஹ் தனது திருமறையில் திருமணம் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமே என்பதாக குறிப்பிடுகிறான்.
வரதட்சணை என்ற பெயரில் இவர்கள் பணம் சம்பாதிக்க பிரயோகிக்கும் விய+கம் அலாதியானது. பணம் வேண்டாம் நகை மட்டும் போதும் உங்கள் பெண்ணுக்கு தானே போடுகிறீர்கள் என்ற ரீதியில் சிலரும், வரதட்சணை வாங்காத திருமணம் என்று விளம்பரபடுத்தி விலை உயர்ந்த சீர்வரிசைகளை மட்டும் திரைமறையில் பெற்றுக்கொள்வது சகஜமாகிவிட்டது.
இவர்கள் மேடையில் பெறப்படும் ரொக்கப் பணம் மட்டும் தான் வரதட்சணை என்றும் இதுவல்லாது தரப்படுகின்ற அனைத்தும் வரதட்சணையை சேராது என்றும் மேம்போக்கு வாதம் செய்கின்றனர். தனது கனவுகளை நினைவாக்கவும் தமது சொத்துக்களை விரிவடையச் செய்யவும் இவர்கள் பிரயோகிக்கும் ஆயுதம் தான் வரதட்சணை என்பது. மேடையில் வாங்கப்படும் ரொக்கப்பணம் மட்டும்தான் வரதட்சணை என்றால்?
o கை நீட்டி வாங்கும் கைக்கடிகாரமும், மாப்பிள்ளைக்கு என பெறப்படும் கழுத்துச் செயினும், மோதிரமும், வீடும், நிலமும் வரதட்சணை இல்லையா?
o நிச்சயதார்த்தம் என்ற பெயரில் பெரும்படை திரட்டி, உண்டு கூத்தாடி, பணச்சசுமயை பெண் வீட்டார் மீது சுமத்துவது வரதட்சணை இல்லையா?
o புகுந்த வீட்டிற்கு பெண்ணை அழைத்து வரும் போது கேட்கும், பஞ்சு மெத்தையும், பட்டுத் தலையணையும், ஓலை விசிரியிலிருந்து, பண்டு பாத்திரங்கள், அரிசி, பருப்பு, மசாலா சாமான்கள் வரை சுருட்டிக் கொண்டு வருவதற்கு பெயர் வரதட்சணை இல்லையா?
o பண்டிகை நாளுக்காக காத்திருந்து பாத்திரங்கள் நிரப்பி பண்டங்கள் கேட்பதற்கு பெயர் வரதட்சணை இல்லையா?
o தலைப் பெருநாள் சாக்கில் புத்தாடை கேட்பதும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை தூண்டி மடியை நிரப்பிக்கொள்தற்க்கும் பெயர் வரதட்சணை இல்லையா?
o கர்பிணி மனைவியின் கவலை மணம் பார்க்காமல் பிரசவச் செலவு முதல் குழந்தைக்கு பவுடர் சோப்பு வரை மாமனாரை தரச் சொல்லி நிற்பதற்கு பெயர் வரதட்சணை இல்லையா?
o பிரசவம் முடிந்து திரும்பி வரும் போது குழந்தைக்கு வெள்ளி அரைஞான் கயிறும், வெள்ளிக் கொலுசும்இ தங்க நகைகளும் கேட்பதற்கு என்ன பெயர்?
o மனிதர்களே, நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்! மேற்கண்டது மட்டும் வரதட்சணை சார்ந்தது அல்ல! இதுவல்லாது நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பணமாகவோ, பொருளாகவோ, நிலமாகவோ, சொத்தாகவோ, வாங்கப்படும் அனைத்தும் வரதட்சணையே!
o பெண்ணை பெற்ற ஓரே பாவத்திற்காக ஊர் வழக்கம் என்ற பெயரில் இவ்வளவு சுமையை பெண் வீட்டார்; மீது சுமத்துவது எவ்வளவு பெரிய கொடுமை. கருணை என்ற வார்த்தையே உங்கள் அகராதியில் இல்லையா?
o பணம் படைத்த பல மாடிக் கட்டிடத்திற்கு சொந்தக்காரர்களுக்கு வேண்டுமானால் இவை சாத்தியப்படலாம். அன்றாடப் பிழைப்புக்கு சைக்கிள் கடை நடத்தி வரும் நடுத்தர வர்கத்தினருக்கு?
o 30 வயது மூத்தமகள் வீற்றிருக்க சமீபத்தில் வயதுக்கு வந்த நான்காவது மகளின் எதிர்காலம் குறித்து கண்ணீர் சிந்தும் ஏழை முஸ்லிமின் நிலை உங்கள் மனக் கண்களுக்கு தெரியாதது ஏன்?!
o இவ்வாறு பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்படும் இந்த திருமணத்தில் கொடுக்க வேண்டிய அனைத்தையும் கொடுத்த பின்பும் இத்தோடு வாங்குவதை நிறுத்திக் கொள்வார்கள் என்பதில் என்ன நிச்சயம்!
o மேலும் கொடுக்க முடியாத பட்சத்தில் தன் இரத்தத்தை ஊட்டி வளர்த்த பெண் புகுந்த விட்டில் இந்த பணத்தாசை முதலைகளின் பிடியில் நிலைத்திருப்பாள் என்ற எதிர்காலப் புதிருக்கு விடையில்லை?!
ஸ்டவ் வெடிப்புக்கள் பெருகி வருவது எதைக் காட்டுகிறது! கவனக் குறைவினால் வெடித்த ஸடவ்கள் எத்தனை?! வசூலிக்க முடியாத வரதட்சணை பாக்கியால் வெடித்த ஸ்டவ்கள் எத்தனை?! என்று வினாக்கள் எழுந்தாலும் ஒன்று மட்டும் உறுதி. அதாவது வரதட்சணை பின்னணியிலும் ஸ்டவ்கள் வெடிக்கின்றன என்பதுதான்.
கல்நெஞ்சம் படைத்தவர்களே! பெற்ற கடனுக்காக கொடுத்து கொடுத்து ஓட்டாண்டியாகி ஓலைக் குடிசையில் ஒடுங்கிக் கிடக்கும் பாதிக்கப்பட்ட ஏழை, படைத்த இறைவனிடம் கையேந்தினால் உங்கள் நிலை எவ்வாறு இருக்கும்?. சிந்திக்க மாட்டீர்களா?!
பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். அவனுக்கும் அல்லாஹ்விற்கும் இடையே திரை இல்லை என்கிறது நபிமொழி.
0 comments:
Post a Comment