Banner 468 x 60px

 

Tuesday, September 10, 2013

நாடு எங்கே போகிறது?

0 comments


blood-with-penமனித உரிமைகள் மனித நேயத்தின் விகசிப்பாக அமைவது போலவே, ஆதிக்க சக்திகளின் - குறிப்பாக அமெரிக்காவினதும் மேற்கு சக்திகளினதும்- கருவியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகை உள்நாட்டில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கு அதிகம் ஊன்றிக் கவனிக்க வேண்டிய மனித உரிமை மீறல்கள் பல உள்ளன என்பது வெளிப்படை உண்மையாகும்.

அதேவேளை, இலங்கையை ஊன்றிப் பிடிப்பது போல, வேறுபல நாடுகளை இவர்கள் இதே அழுத்தத்தில் பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டில் பல உண்மைகள் உள்ளன.

ஆனால், இந்த நியாயத்தை வைத்துக் கொண்டு இங்கு நடக்கின்ற பாரிய தவறுகளை வெளிப்படுத்தக்கூடாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அதிகார சக்திகளை காப்பாற்றுவதற்கே இவ்வாறான வாதங்கள் துணை போகின்றன.

உள்நாட்டில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை எங்கு போய் தீர்ப்பது? ஜே.வி.பி காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அப்போதைய அரசின் அராஜகத்தை எதிர்த்து சர்வதேச மனித உரிமை சக்திகளை நாடிச் சென்றார்.

ஆனால், இன்று அதே செயலை வேறு சிலர் செய்கின்றனர். அதிகார பீடத்தில் முன்னாள் மனித உரிமைப் போராளி இருக்கிறார். இங்கு ஆட்கள் மாறுகிறார்கள். நிலைப்பாடுகளும் மாறுகின்றன. ஆனால், பிரச்சினையின் வடிவம் ஒன்றாகவே இருக்கிறது.

நாம் மற்றவர்களைப் பற்றி அங்கலாய்ப்பதற்கு முன், நமக்குள்ளே தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. இங்கு தீர்க்க முடியாத நிலை இருக்கிறது என்று நம்புவதால்தான் பலரும் வெளிநோக்கி கைகளை நீட்டுகின்றனர். இந்த யதார்த்தத்தை அரசு நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இது இவ்வாறிருக்க, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இலங்கை முஸ்லிம் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாய் கூறியுள்ளார். இது தமது கவனத்திற்குரிய ஒரு விடயமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர், இங்கு முஸ்லிம் தீவிரவாத அச்சுறுத்தல் கிடையாது என அவர்தான் கூறியிருந்தார். இப்போது, இந்த அச்சுறுத்தல் வெளிநாட்டு அனுசரணையுடன் வளர்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இவ்வளவு விரைவாக ஒரு புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றி அவர் பேசுவது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. போதாததற்கு, பொது பல சேனாவும் இதனால் அளவுக்கு மீறிய உற்சாகமடைந்துள்ளது.

இந்த அரசியல் காலநிலை திருப்திகரமானதாய் இல்லை. அதுவும் தேர்தல் நிகழ்கின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறான கூற்றுகள் வந்திருப்பது கவனிக்கத்தக்கது. தேர்தல் என்றால் இவ்வாறான கருத்துக்கள் அடக்கி வாசிக்கப்படுவதுதான் பொது வழக்கு.

நாம் இந்த நாட்டில் வாழ்வதற்காக பல விதத்திலும் பெருமைப்படுகிறோம். நமது பன்மைத்துவமும் பல்வகைத் தன்மையும் விட்டுக் கொடுப்பும் சகிப்புணர்வும் மற்றவர்களை மதிக்கும் பண்பும் வெறும் அரசியல் இலாபங்களுக்காக பலியிடப்பட முடியாதவை என்ற கருத்தை இங்கு அழுத்தமாக முன்வைப்பது அவசியமாகும்.

நூற்றாண்டுகளாக பல அர்ப்பணிப்புகளுக்கும் தீவிர உழைப்புகளுக்கும் மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட எமது மகத்தான ஐக்கியத்தையும் கூட்டு வாழ்க்கையையும் பரஸ்பர புரிந்துணர்வையும், அற்ப அரசியல் ஆதாயங்களே காலா காலமாய் சிதைத்து வந்திருக்கின்றன.

அதிகாரத்தில் இருப்போர் இந்த யதார்த்தங்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். இவற்றை அலட்சியப்படுத்தினால், நமது வரலாற்று ஓட்டத்தில் புதிய பல தீர்ப்பதற்குக் கடினமான பிரச்சினைகளையே -கறை படிந்த பக்கங்களையே- அறுவடை செய்ய வேண்டி வரும்.

நமக்கு அரசியல்வாதிகளை விடவும் அரசியல் ஞானிகள் அதிகம் தேவைப்படுகின்றனர்.
meelparvai

0 comments:

Post a Comment