
மனித சிந்தனையின் படிமுறையான வளர்ச்சியை நாம் நோக்கும்போது ஒவ்வொரு காலப் பிரிவிலும், அதனை நெறிப்படுத்துவதில் அவ்வக் காலப் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய தத்துவங்கள், கருத்துகள், அறிவு மரபுகள் முக்கிய பங்கை வகித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த வகையில், எமது சமகாலப் பிரிவில் அறிவியலின் தாக்கம் மனிதனின் சிந்தனையிலும் உளப்பாங்கிலும் கண்ணோட் டத்திலும், சுருங்கக்கூறின், வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மிக ஆழமான பாதிப்பையும் தாக்கத்தினையும்
ஏற்படுத்தியுள்ளதை
நாம் உணர முடிகின்றது. இதன் காரணமாக குர்ஆனை நவீன அறிவியல் நோக்கில்
ஆராயும் மரபு இன்று தோற்றமெடுத்துள்ளது. குர்ஆனின் கருத்துகள் நவீன
அறிவியல் உண்மைகளோடு இணைந்து காணப்படுவதையும், இன்றைய பல நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை அல்குர்ஆன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே முன்னறிவிப்புச் செய்துள்ளதையும், குர்ஆனின்
பல கருத்துகளை நவீன அறிவியல் உண்மைகள் உறுதிப்படுத்து வதையும் விளக்கும்
பல முயற்சிகள் இன்று மேற்கொள்ளப்படுவதை நாம் காணமுடிகிறது. இத்துறையில்
விசேட கவனம் செலுத்தும் ஆய்வாளர் பலர் இன்று காணப்படுகின்றனர். பேராசிரியர்
மொரிஸ் புகைல் (MOURICE BUCAILLE), கலாநிதி ஸக்லுல் அந் நஜ்ஜார், ஷெய்கு ஸிந்தானி போன்றோர் இத்துறையில் முக்கியமானவர்களாவர்.
மக்காவிலுள்ள
ராபிததுல் ஆலமில் இஸ்லாமி நிறுவனம் குர்ஆனின் அறிவியல் அற்புதங்கள்
(அல்-இஃஜாஸுல் இல்மீ) பற்றி ஆராய்வதற்கென்றே ஒரு தனித்துறையை அமைத்து
ஷெய்கு ஸிந்தானீ அவர்களை அதன் பணிப்பாளராக நியமித்துள்ளது. ராபிததுல்
ஆலமில் இஸ்லாமீ இஸ்லாமாபாத்திலுள்ள சர்வதேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தோடு
இணைந்து இஸ்லாமா பாத்தில் ‘குர்ஆனின் அறிவியல் அற்புதங்கள்’ (Scientific Miracles of Quran) என்ற தொனிப் பொருளில் 1987ம்
ஆண்டு ஒரு சர்வதேசிய மாநாட்டையே நடாத்தியது. இன்று இஸ்லாமிய உலகில்
வெளிவரும் சஞ்சிகைகளில் குர்ஆனின் அறிவியல் விளக்கங்கள் பற்றிய பல ஆய்வுக்
கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இந்தியாவில் அலிகாரிலிருந்து
வெளியிடப்படும் ((Mass Journal of Islamic Science)
இஸ்லாமிய அறிவியலுக்கான சஞ்சிகை) என்ற வெளியீடு அறிவியலை இஸ்லாமிய
நோக்கில் அணுகி ஆராயும் கட்டுரைகளையே முழுக்க முழுக்க உள்ளடக்கியதாக
உள்ளது. நவீன சிந்தனை யின் ஒரு முக்கிய அங்கமான அறிவியல் சிந்தனையின்
அறைகூவல்களைச் சமாளித்து, குர்ஆனின்
தெய்வீகத் தன்மையை விளக்கும் வகையில் அதன் கருத்துக்கள் எவ்வாறு இணைந்து
செல்கின்றன என்ற உண்மையினை விளக்கும் முயற்சிகளாகவே இவை அமைகின்றன.
மனித
வரலாற்றில் மிகச் சிறப்பான அறிவியல் பாரம்பரியத்தைப் பெற்ற முஸ்லிம்கள்
நவீன அறிவியல் யுகத்தில் இத்தகைய காத்திரமான ஒரு முயற்சியில் ஈடுபடுதல்
வரவேற்கத்தக்கதேயாகும். ஆனால், இது
மிக அவதானத்துடனும் நுட்பமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு
முயற்சியாகும். குர்ஆனின் திருவசனங்களில் பொதிந்துள்ள அறிவியல் சார்ந்த
விளக்கங்களை ஆராயும் நோக்கோடு மேற்கொள்ளப்படும் இம்முயற்சி, அது
அருளப்பட்டதன் அடிப்படை நோக்கிலிருந்து மனிதனின் கவனத்தையும்
அவதானத்தையும் திசை திருப்பிவிடும் ஒரு முயற்சியாக அமைதல் கூடாது. அதே
நேரத்தில் குர்ஆனின் அடிப்படை நோக்கத்திற்கு வலுவூட்டும் ஒரு முயற்சியாக
இது மேற்கொள்ளப்படுமாயின், இஸ்லாமிய சிந்தனையின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் எமது சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மகத்தான பங்களிப்பாகவே அது அமையும்.
குர்ஆன்
அனைத்து அறிவுரைகளினதும் மூலமாக உள்ளது என்ற கருத்து அண்மைக் காலத்தில்
தோன்றியதன்று. இஸ்லாமிய அறிஞர்கள் பலர் மிக ஆரம்ப காலத்திலிருந்தே
இக்கருத்தைக் கொண்டிருந்தனர். இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் தங்களது ‘இஹ்யா உலுமுத்தீன்’என்னும் பெருநூலில் ‘முன்னைய சந்ததிகளினதும் பின்னைய சந்ததிகளினதும் அறிவைப் பெற விரும்புவோர் குர்ஆனைப் பற்றிச் சிந்திக்கட்டும்’ என்ற இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் குறிப்பிடும் அழகிய கருத்துக்கள் பற்றி விளக்கும்போது, குர்ஆனுடன் தொடர்புடைய கண்ணியமும் மகத்துவமும் மிக்க கலைகள் அனைத்தும் அல்லாஹ்வின் ‘அஸ்மா’என்னும் திருநாமங்களிலும், ‘ஸிபாத்’ என்னும் அவனது பண்புகளிலும் அடங்கியுள்ளன எனக் குறிப்பிடுகின்றார்கள். இஹ்யா உலூமுத்தீனைத் தொடர்ந்து அவர்கள் எழுதிய ‘ஜவாஹிருல் குர்ஆன்’என்னும் நூலில், குர்ஆனிலிருந்து சன்மார்க்கக் கலைகளான (அல்-உலூமுத் தீனிய்யா) தப்ஸீர், பிக்ஹ், தஸவ்வுப், கலாம் போன்ற கலைகள் ஏனைய கலைகளும், (ஸாஇருல் உலூம்) என அவர்கள் அழைக்கும் மருத்துவம், வானவியல் போன்ற கலைகளும்; எவ்வாறு பெறப்படுகின்றன என்பதனை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்கள். (இஹ்யா உலூமுத்தீன், பாகம் 1, பக்:286-293, ஜவாஹிருல் குர்ஆன்: 2040)
சன்மார்க்கக் கலைகள், ஏனைய கலை களின் அடிப்படைகள் அனைத்தும் இறைவனின் சமுத்திரங்களில்; ஒன்றான ‘அவனது செயல்கள்’(அப்ஆல்)
என்னும் சமுத்திரத்திலிருந்து பெறப்பட்டவையாகும். குர்ஆன் என்பது கரைகாண
முடியாத ஒரு சமுத்திரம் போன்றது. இறைவனின் செயல்கள் என்ற சமுத்திரத்தின்
ஓர் அம்சமே நோய்களும் அவற்றின் நிவாரணமு மாகும் எனக் குறிப்பிடும் இமாம்; கஸ்ஸாலி (றஹ்) அவர்கள், நோயைக் குணப்படுத்தும் இறைவனின் செயல் எவ்வாறு மருத்துவக் கலைக்கு ஆதாரமாக அமைகின்றது என்பதைப் பின்வருமாறு விளக்குகின்றார்கள்:
‘நான் நோயுற்றிருந்தால் அவனே என்னைச் சுகப்படுத்துகிறான்’(அஷ்-ஷுஅரா :30) என்ற
இப்ராஹீம் (அலை) அவர்களின் வார்த்தை களை அல்லாஹ் குர்ஆனில்
குறிப்பிடுகின்றான். மருத்துவக் கலையைப் பூரணமாகக் கற்ற ஒருவனாலேயே நோயைப்
பற்றியும், அதனை குணப்படுத்தும் இறைவனின் செயல் பற்றியும் அறிய முடியும். ஏனெனில், மருத்துவம் என்பது நோயின் அறிகுறிகள், அதனைச் சுகப்படுத்தும் முறைகள், வழிகள்
ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு கலையாகும். இங்கு இறைவனின் ஒரு
செயல்பாட்டின் அடியாக மருத்துவக்கலை தோற்றம் பெறுகின்றது.
இது போன்றே சூரியனும் சந்திரனும் ஒரு வரையறைக்குட்பட்டு இயங்குதல், இவற்றின் பல்வேறு மாற்றப் படிவங்களை நிர்ணயித்தல்; என்பன
இறைவனின் செயல்பாட்டின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன என்பதை குர்ஆன்
குறிப்பிடுகின்றது. சூரிய- சந்திரனின் இயக்கமும் சுழற்சியும், அவற்றின் கிரகணங்கள், இரவு - பகல் மாறி மாறி வரும் இயற்கையின் நிகழ்வு ஆகியன பற்றிய யதார்த்த பூர்வமான அறிவை வானம், பூமி ஆகியவற்றின் அமைப்பு, இயக்கம் பற்றி அறிந்த ஒருவராலேயே புரிந்துகொள்ள முடியும்.
இந்த
அடிப்படையிலேயே வானவியல் கலை தோற்றமெடுக்கின்றது என இமாம் கஸ்ஸாலி (றஹ்)
அவர்கள் கூறுகின்றார்கள். இதனைத் தொடர்ந்து தங்களது ஜவாஹிருல் குர்ஆனில்
அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:
‘எனவே குர்ஆனைப் பற்றிச் சிந்திப் பாயாக. அதன் அற்புதமான கருத்துகளைத் தேடிப் படிப்பாயாக. அப்போது அதில் முன்னைய சந்ததிகளினதும், பிந்திய சந்ததிகளினதும் அறிவுகள் பொதிந்திருப்பதையும், அக்கலைகளின் தோற்றத்தினையும் நீ காணமுடியும்’
இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதி (மரணம் ஹி.917) அவர்கள் தங்களது ‘இத்கான் பீ உலூமில் குர்ஆன்’என்னும் நூலில் குர்ஆன் அனைத்து கலைகளையும் உள்ளடக்கியுள்ளது என்ற கருத்தை முன்வைக்கின்றார்.
இந்த
மரபினடியாகத் தோன்றிய சிந்தனைப் பாங்கு இஸ்லாமிய வரலாற்றின் தொடர்ந்து
வந்த காலப் பிரிவு முழுவதிலும் காணப்படுகின்றது. இதன் தர்க்கரீதியான ஒரு
வளர்ச்சியாகவே குர்ஆனின் அறிவியல் பரிமாணம் பற்றிய ஆய்வு அமைகின்றது.
குர்ஆனின் அறிவியல் பரிமாணம் பற்றி அப்துர்ரஹ்மான் அல்-கவாகிபீ (மரணம் 1902) அவரது நூலான ‘தபஉல் இஸ்திப்ஆத்’என்னும் நூலில் கூறும் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். அவர் கூறுகின்றார்:
‘சமீப நூற்றாண்டுகளில் அறிவியலானது பல உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் இக் கண்டுபிடிப்புகள் அவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்க, ஐரோப்பிய
அறிவியல் ஆய்வாளர்களின் சாதனைகளாகவே கொள்ளப்படுகின்றன. ஆனால் அல் குர்ஆனை
மிக அவதானத்துடன் ஆராய்வோர் இந்த அறிவியல் உண்மைகள் அனைத்தும், தெளிவாகவோ
அல்லது மறைமுகமாகவோ பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே குர்ஆனில்
குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டு கொள்வர். எனவே இந்த அறிவியல் கண்டுபிடிப்
புகள் குர்ஆனின் அற்புதத் தன்மையையும், அது மறைவான அறிவுகள் அனைத்தையும் பொதிந்த மகத்தான இறைவனின் வார்த்தைகள் என்பதையும் உணர்த்துகின்றன.’
ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்கள், குர்ஆனில்
அனைத்துக் கலைகளினதும் அடிப்படைகள் காணப்படுகின்றன என நிறுவ
முற்பட்டதானது குர்ஆன் திருவசனங்களின் அனைத்து அறிவையும் பொதிந்த வியாபகத்
தன்மையையும் பூரணத்துவத்தையும் விளக்குவதற்கே யாகும். ஆனால் நவீன
அறிஞர்கள் குர்ஆனின் அறிவியல் சார்ந்த விளக்கங்களுக்கே அழுத்தம்
கொடுக்கின்றனர். உதாரணமாக ஷெய்கு தன்தாவி அவர்கள் தங்களது திருக்குர்ஆன்
விரிவுரையில், இயற்கை
விஞ்ஞானத்தின் பௌதீக உலகம் சார்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்துகளை
குர்ஆனின் வெளிச்சத்தில் விளக்க முற்படுகின்றார். அப்துர்ரஸ்ஸாக் நவ்பல்
என்னும் அறிஞர் ‘அல் குர்ஆன் வல் இல்முல் ஹதீஸ்’(அல்குர்ஆனும்
நவீன அறிவியலும்) என்னும் நூலில் இதே அணுகு முறையைக் கடைப்பிடித்துள்ளார்.
இத்துறையில் அண்மைக் காலப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட காத்திரமான ஒரு
முயற்சியாக மொரிஸ் புகைல் அவர்களின் ‘பையிளும் குர்ஆனும் அறிவியலும்’ என்னும் நூல் கருதப்படுகின்றது.
‘இதுவரை விளக்க முடியாதிருந்த குர்ஆனின் சில வசனங்களை விளக்குவதற்கு நவீன அறிவியல் துணைபுரிகின்றது’ என புகைல் குறிப்பிடுகின்றார்.
Modern
scientific knowledge allows us to understand certain verses of the
Quran which until now, it has been impossible to interpret.
( M.Bucaille, The Bible, The quran and science:p251.)
இத்துறையில் கலாநிதி கீத் மூரின் (Quran and Embryology) என்னும்
நூலும் குறிப்பிடத்தக்கது. ஒரு பெண்ணின் கர்ப்பப் பையில் விந்தானது
பல்வேறு படித்தரங்களில் மாற்றமும் வளர்ச்சியும் அடைந்து ஒரு பூரண
வளர்ச்சியடைந்த குழந்தையின் அமைப்பைப் பெறுவதைக் குர்ஆன் ஸூரா அல்
முஃமினூனின் 12-16 திருவசனங்களில் குறிப்பிடுகின்றது.
‘மனிதனை
நாம் களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம். பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான
இடத்தில் செலுத்தப்பட்ட விந்தாக (நுத்ப்) ஆக்கினோம். பிறகு அந்த விந்தினை
இரத்தக் கட்டியின் (அலக்) வடிவில் அமைத்தோம். பின்னர் அந்த இரத்தக்
கட்டியைச் சதைக் கட்டியாய் (முள்க்) ஆக்கினோம். பிறகு அவ்வெலும்புகளைச்
சதையால் போர்த்தினோம். பிறகு அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச்
செய்தோம். பெரும் அருட்பேறுடைய அல்லாஹ் படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான
படைப்பாளன்.’(அல்முஃமினூன்: 12-16)
இந்தத் திருவசனத்தில் குறிப்பிடப்படும் ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் அடையும் படிமுறையான வளர்ச்சி பற்றிய விளக்கம், மருத்துவக்
கலையின் ஒரு பகுதியான நுஅடிசலழடழபல யின் நவீன கருத்துகளுக்கு முற்றிலும்
இணைந்து காணப்படுவதாக கலாநிதி கீத் மூர் குறிப்பிடுகின்றார். நவீன
அறிவியலானது மிகத் துல்லியமான உபகரணங்களின் துணை கொண்டு கண்டுபிடித்த
தாயின் கருவறைக்குள் நிகழும் இந்த அற்புத வளர்ச்சிப் படிவங்களை பதினான்கு
நூற்றாண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு நுட்பமாக அல்குர்ஆன் விளக்கியிருக்கும்
பான்மையானது அது மனித சிந்தனையின் விளைவன்றி ஒரு தெய்வீக வெளிப்பாடே
என்பதை சந்தேகமின்றி நிறுவுவதாக கலாநிதி கீத் மூர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ள உண்மைகளின் வெளிச்சத்தில் குர்ஆனை நோக்கி, அதனை
விளக்க முனைகின்ற இம் முயற்சிகள் இஃஜாஸுல் குர்ஆன் என்னும் குர்ஆனின்
அற்புதம் பற்றி விளக்கும் பாரம்பரிய குர்ஆனியக் கலையின் நவீன வளர்ச்சியாகவே
கொள்ளப்படல் வேண்டும். இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்ப காலகட்டங்களிலும், அதனைத் தொடர்ந்தும் குர்ஆனின் அற்புதத்தை அதன் மொழிநடை, சொற்பிரயோகங்கள், இலக்கிய
வளம் ஆகியவற்றின் அடிப்படையில் விளக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இம் முயற்சியின் அடியாகவே இஃஜாஸுல் குர்ஆன் என்னும் கலை தோன்றியது.
குர்ஆனில் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட நிகழ்வுகள் பிற்காலத்தில் வரலாற்று
நிகழ்வுகளால் உண்மையாக்கப்பட்டதை அடிப்படையாக வைத்தும் குர்ஆனின் அற்புதத்
தன்மை விளக்கப்பட்டது. ரோமர்களின் தோல்வி பற்றி குர்ஆன் குறிப்பிடும்
முன்னறிவிப்பு, பிர்அவ்னின்
உடலைப் பாதுகாப்பதாக அது குறிப்பிடும் கருத்து என்பன பிற்கால வரலாற்று
நிகழ்வு களால் உறுதிப்படுத்தப்பட்டன. இத்தகைய ஒரு முயற்சியே அறிவியல்
வளர்ச்சியடைந்த காலப் பிரிவில் மேற்கொள்ளப்படும் குர்ஆனின் திருவசனங்கள்
சிலவற்றை அறிவியல் நோக்கில் அணுகி ஆராயும் முயற்சியாகும். இஃஜாஸுல்
குர்ஆனின் தர்க்கரீதியான ஒரு வளர்ச்சியாக இதனை நாம் கொள்ளலாம்.
ஆனால்
இது குர்ஆனின் அடிப்படை நோக்கிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும்
ஒரு முயற்சியாக அமையாத வகையில் மேற்கொள்ளப்படல் வேண்டும். குர்ஆன் ஓர்
அறிவியல் கலைக்களஞ்சியமன்று. அது மனித சமுதாயத்துக்கு அல்லாஹ்வின் இறுதி
வழிகாட்டுதலைப் பொதிந்துள்ள மாமறையாகும். எனவே, மனித அறிவு மற்றும் சிந்தனையின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றமடையும் அறிவியலின் கோட்பாடுகள், கருதுகோள்களுக்கு ஏற்ப குர்ஆனை ஆராயும் இம்முயற்சி மிக நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
குர்ஆன் இயற்கை பற்றியும், அதன் அற்புதங்கள், அதில் காணப்படும் ஒழுங்கு, சீரமைப்பு
பற்றியும் பல திருவசனங்களில் குறிப்பிடுகின்றது. இவ்வாறு குர்ஆன்
இயற்கையின் படைப்புகள் பற்றிக் குறிப்பிடுவதன் நோக்கம் மக்களுக்கு அறிவியல்
உண்மைகளைப் போதிப்பதன்று. இறைவனின் மகத்துவம், மாட்சிமை பற்றி மக்களுக்கு உணர்த்துவதே அதன் அடிப்படை நோக்கமாகும். இந்த வகையில் மனிதனின் சிந்தனையின் பிரயோகம், பகுப்பாய்வு, அவதானம், பரிசீலனை, பரிசோதனை என்பவற்றினடியாகக் கண்டுபிடிக்கப்படும் அறிவியல் உண்மைகள், குர்ஆனின் திருவசனங்களில் பொதிந்துள்ள கருத்துகளையும்;, முன்னறிவிப்புகளையும் உறுதிப்படுத்தி, பிரபஞ்சத்தில் பரந்து காணப்படும் அல்லாஹ்வின் மகத்தான அத்தாட்சிகளை உணரச் செய்து, அவனது மாட்சிமை, வல்லமை, அறிவுஞானத்தை
உணரச் செய்கின்றன. அறிவியலுக்கும் குர்ஆனுக்கும் இடையில் காணப்படும்
தொடர்பினை அல் அஸ்மராகீ அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார்கள்:
‘இந்த
புனித வேதநூலானது அறிவியல் பற்றிய பாட நூலில் காணப்படுவது போன்று எல்லா
அறிவியல் கலைகளையும் பற்றிய விரிவான அல்லது சுருக்கமான விளக்கங்களைக்
கொண்டுள்ளது என நான் கூறமாட்டேன். ஆனால் நான் கூற விரும்புவதெல்லாம்
மனிதனின் பௌதீக, ஆத்மீக வளர்ச்சிக்கு அவசியமான எந்த அம்சங்கள் பற்றி, எந்த
அளவிற்கு அறிவதற்கான அவசியம் அவனுக்கு உள்ளதோ அந்த அளவிற்கு அவனுக்குத்
துணைபுரியக்கூடிய பொதுவான அடிப்படைகளை இந்நூல் தன்னகத்தே பொதிந் துள்ளது
என்பதாகும். எனவே, அறிவியலோடு
தொடர்புடைய பல்வேறு கலைகளில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் அவர்களது காலப்
பிரிவில் அறியப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துதல்
அவர்களது கடமையாகும். ஆனால் அறிவியல் உண்மை களின் வெளிச்சத்தில் குர்ஆன்
திருவசனங்களுக்கு விளக்கம் கொடுக்க முனையும்போது வலிந்து பொருள்கொள்ள
முயற்சித்தல் கூடாது. குர்ஆனின் திருவசனம் ஒன்றின் வெளிப்படையான கருத்து
உறுதியாக நிலைநாட்டப்பட்ட ஓர் அறிவியல் உண்மைக்கு இணங்கியதாகக்
காணப்பட்டால் அந்த திருவசனத்தைக் குறிப்பிட்ட அறிவியல் உண்மையின்
அடிப்படையில் விளக்க முற்படுவதே பொருத்தமாகும். (முஹம்மத் அம்மாரா, இஸ்லாம் வல்-களாயல் அஸ்ர்- பக்கம:;:25)
எனவே, குர்ஆன் ஓர் அறிவியல் நூலன்று. ஆனால் இயற்கையின் படைப்பினங்களில் அல்லாஹ்வின் மாட்சிமையும், மகத்துவமும், படைப்பற்புதமும், சிருஷ்டி
ஆற்றலும் பிரதிபலிக்கும் தன்மை பற்றிக் குறிப்பிடும் திருவசனங்களில் மனித
இனத்திற்கு மகத்தான படிப்பினைகள் உள்ளன. அதன் தார்ப்;பரியத்தை
அறிவியல் வளர்ச்சியின் வெளிச்சத்தில் விளக்குவதே குர்ஆனை அறிவியல்
நோக்கில் அணுகி ஆராய்வதன் அடிப்படை நோக்கமாக அமைதல் வேண்டும். இவ்வாறு
மனிதன் அவனது அறிவின் வெளிச்சத்தில், அறிவியல் வளர்ச்சியின் ஒளியில், குர்ஆனின் திருவசனங்களின் பின்னணியில் இயற்கையின் சிருஷ்டி அற்புதங்களையும் சீரமைப்பையும் விளக்க முற்படும் இம் முயற்சியானது, பிரமாண்டமான, எல்லையற்றுப் பரந்திருக்கின்ற பிரபஞ்சத்திலும், அதில் புதைந்துள்ள இயற்கையின் இரகசியங்களிலும் ஒரு மகத்தான நோக்கமும் இலட்சியமும் உள்ளது என்ற உணர்வை அவனில் தோற்றுவிக்கும்.
‘நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள் எத்தகையோரென்றால், நின்ற நிலையிலும், இருப்பிலும், தங்கள் விலாப் புறங்களில் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைத்து, வானங்கள், பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்தித்து, ஷஎங்கள் இரட்சகனே! நீ இவற்றை வீணுக்காகப் படைக்கவில்லைளூ நீ மிகத் தூயவன். நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை நீ இரட்சிப்பாயாக!’ (எனக் கூறுவார்கள்) (ஆல இம்ரான் 190-191)
அல் குர்ஆனின் போதனைகளின் தூண்டுத லால் இயற்கையின் படைப்பினங்களில் அவதானத்தைச் செலுத்தி, படைப்புகளில் காணப்படும் சீரமைப்பையும் ஒழுங்கையும் அடிப்படையாக வைத்து, இயற்கையைப்
பிணைத்திருக்கும் இயற்கை விதிகளைக் கண்டறிந்த முஸ்லிம் அறிவியல்
அறிஞர்கள் பெருமைக்குரிய ஓர் அறிவியல் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பினர்.
வானவியல், புவியியல், பௌதீகம், ரசாயனம், மருத்துவம், தாவரவியல் போன்ற அனைத்துத் துறைகளுக்கும் முஸ்லிம் அறிவியல் மேதைகள் பங்களிப்புச் செய்தனர். முஸ்லிம்கள் கிரேக்க, பாரசீக, இந்திய அறிவியல் பாரம்பரியங்களை ஆழமாகக் கற்று, அவற்றில் காணப்படும் குறைகள், பலவீனங்களை இனம் கண்டு, தமது ஆய்வுகளின் அடிப்படையில் புதிய அம்சங்களை இணைத்து, அதற்கே உரிய சிறப்பில்புகளைக் கொண்ட இஸ்லாமிய அறிவியல் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பினர்.
கிரேக்க அறிவியலானது, அனுமானங்கள், ஊகங்களின்
அடிப்படையிலேயே கட்டியெழுப்பப் பட்டது. அவர்களின் அறிவியல் கோட்பாட்டு
ரீதியான அறிவியலாகவே விளங்கியது. அறிவியலில் பரிசோதனை முறையை முஸ்லிம்களே
அறிமுகப்படுத்தினர். இந்தப் பரிசோதனையின் அடிப்படையில் அமைந்த இஸ்லாமிய
அறிவியலானது அறிவியல் வளர்ச்சியில் மிகப் புரட்சிகரமான விளைவை
ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் அறிவியல் பாரம்பரியம் முஸ்லிம் ஸ்பெயினின்
கொர்டோவா, டொலடோ, வெலன்ஸியா
மூலமாக ஐரோப்பாவினைச் சென்றடைந்து ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குக் காரணமாக
அமைந்தது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சியினடியாகவே மேற்குலகில் அறிவியல்
வளர்ச்சி ஏற்பட்டது. இந்த அறிவியல் வளர்ச்சியின் அடித்தளத்திலேயே நவீன
அறிவியல் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இதனை ரொபர்ட் பிரியோல்ட் Muslim: The Founrders of Science எனும் நூலில் பின்வருமாறு குறப்பிடுகின்றார்:
‘கி.பி. 15ஆம் நூற்றாண்டிலன்றி, இஸ்லாமியப்
பண்பாட்டின் அறிவியலின் தூண்டுதல் காரணமாகவே ஐரோப்பிய மறுமலர்ச்சி
நிகழ்ந்தது. இத்தாலியை மையமாகக் கொண்டு நிகழ்ந்த அறிவியல் வளர்ச்சியே
ஐரோப்பிய எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது எனக் கூறப்படுவது வரலாற்று
ரீதியாக ஏற்புடையதன்று .உண்மையில் முஸ்லிம் ஸ்பெயினின் பண்பாட்டுத்
தலைநகரான கொர்டோவாவே ஐரோப்பிய மறுமலர்ச்சியின் வளர்ச்சித் தொட்டிலாகும்.’
0 comments:
Post a Comment