Banner 468 x 60px

 

Wednesday, May 29, 2013

ஷூறா கவுன்ஸிலின் உருவாக்கத்திற்கு ஒன்றுபடும் முஸ்லிம் அமைப்புகள்

0 comments
கடந்த இரண்டாம் திகதி முதன் முறையாக முஸ்லிம் அமைப்புக்கள் தமது வேற்றுமைகளை மறந்துஇ இடைக் கால ஆலோசனை சபையொன்றை அமைப்பதற்கான அறிவித்தலை விடுப்பதற்காக வெள்ளவத்தை மியாமி வரவேற்பு மண்டபத்தில் சந்தித்துக் கொண்டன. முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வருகின்ற பிரதான சவால்களை எதிர் கொள்வதோடு, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் காத்திரமானதொரு பாத்திரத்தை வகிப்பதும் இச்சபையின் நோக்கமாகும்.
    
 முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்திற்கு பங்களிப்பதற்குப் பதிலாக, வெட்கக் கேடானதொரு சுமையாக சமூகத்திற்கு மாறியுள்ள நிலையில், இத்தகையதொரு தேவை தொடர்ந்தும் உணரப்பட்டு வந்தது. இத்தகையதொரு ஒழுங்கை உருவாக்கும் முயற்சிகள் கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. துரதிஷ்டவசமாக, அம்முயற்சிகள் வெற்றி அளிக்காமல் போனதன் பிரதிபலனை சமூகம் இன்று அனுபவிக்கின்றது.      
 
 முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான பிரசாரப் புயலில் சிக்கி சமூகம் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், நம்பிக்கை, நாணயமானதொரு குழுவினர் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை கையில் எடுக்க வேண்டிய தேவை சமூகத்தில் பெரிதும் உணரப்பட்டது. குறிப்பாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பாசிசக் குழுவொன்று, மைய நீரோட்ட சிங்கள சமூகத்தை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டும் விதத்தில் மேற்கொண்ட தீவிரப் பிரச்சாரங்கள் இத்தேவையைப் பெரிதும் உணரச் செய்தன.
   
 இதன் விளைவாக, சமூகத்தை இவ்விக்கட்டான கட்டத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கில், இடைக் கால ஆலோசனை கவுன்ஸில் உதயமாகிறது.
 
 உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு சக்திகளின் பலமான பின்புலத்தைக் கொண்ட இவ்வினவாத சக்திகளின் செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தின் சொந்த இருப்பையே கேள்விக் குறியாக்கியுள்ள நிலையில், அச்சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில் கவுன்ஸில் செயற்படும். இதன் நோக்கம் அமைப்பு மற்றும் இது தொடர்பான ஏனைய விபரங்களை ஏற்பாட்டாளர்கள் விளக்கினார்கள். இது தொடர்பான விபரங்கள் முன்வைக்கப்பட்டு கலந்து கொண்டவர்களின் கருத்துக்களும் கோரப்பட்டன. இது தொடர்பான விரிவான திறந்த கலந்துரையாடல் அடுத்த மாத ஆரம்பத்தில் இடம் பெறும். இதன் பிறகே இறுதி ஆலோசனைக் கவுன்ஸில் உருவாக்கப்பட இருக்கின்றது.
 
 அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, தரீகாக்கள் என பல்வேறு அமைப்புக்களோடு துறைசார் வல்லுனர்கள், புத்தி ஜீவிகள், வியாபாரிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
 
 எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், ஆலோசனை செய்வதற்கு இஸ்லாம் வழங்குகின்ற முக்கியத்துவத்தை தனது ஆரம்ப உரையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த அஷ்ஷெய்க் யூசுப் முப்தி விளக்கினார். ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முபாரக், ஷரீஆ கவுன்ஸில் தலைவர் மௌலவி ஹஸ்புல்லாஹ், ஷெய்க் முப்தி யூஸுப் ஹனீபா, பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எம். சித்தீக், இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீர் ஏ.எல்.எம். இப்றாஹீம், உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர், ஈரானுக்கான முன்னாள் தூதுவர் எம்.எம். ஸுஹைர், சவூதி அரேபியாவிற்கான முன்னாள் தூதுவர் ஜாவித் யூசுப், ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம், ஷெய்க் இஸ்மாஈல் (ஸலபி), மௌலவி ஏ.எல்.எம். ஹாஷிம் மற்றும் மன்ஸூர் தஹ்லான் எனப் பலரும் இதன் போது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
 
 இது காலத்திற்கு மிகவும் அவசியமானது என அனைவரும் ஒரே குரலில் இந்நகர்வை ஆதரித்தனர். ஷூறா சபை அமைப்பை அதன் இறுதி வடிவத்தில் உருவாக்குவதற்கு காலம் எடுக்கும் என்ற நிலையில், இடைக் கால ஷூறா சபையை அமைப்பதற்கு எடுத்த முடிவை அனைவரும் வரவேற்றனர்.
 
 அப்ரார் நிறுவனத் தலைவர் டாக்டர் முஸ்தபா அப்ரார் சமூகம் எதிர் கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளைக் குறிப்பிட்டு, இச்சபைக்கு முன்னால் இருக்கின்ற பணிகள் ஏராளம். எவ்வாறாயினும் சீனப் பலமொழி சொல்வது போன்று ஆயிரம் மைல் பயணம் முதல் காலடியின் ஆரம்பிப்பது போன்று ஏதோ ஓர் இடத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டினார். 
 
 வித்தியாசமான பின்னணி கொண்ட துறைசார்ந்தவர்கள் கடந்த ஜனவரியில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் குறித்துக் கலந்துரையாடியதில் இருந்துதான் இதற்கான பணிகள் ஆரம்பித்தன. அதன் பிறகு ஒன்றுக்கு பின் ஒன்றாக பல கூட்டங்கள் இடம் பெற்றன. இவ்வாறான பல கூட்டங்களுக்குப் பிறகு, இந்நிகழ்ச்சி நிரலை முன் கொண்டு செல்வதற்குப் பொறுத்தமான வித்தியாசமான துறைகளைச் சேர்ந்தஇ இருநூறு பேரின் பெயர்ப் பட்டியல்  மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டது.
 
  'பொது பல சேனாக்கள் எமது சமூகத்திற்குள்ளும் இருக்கின்றன' என ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீர் மௌலவி இப்றாஹீம் அவர்கள் குறிப்பிட்டது போன்ற நிலை சமூகத்தின் உள்ள நிலையில் சிறந்த மற்றும் தமது நலனை விட சமூகத்தின் நலனை முன்னிறுத்துகின்ற ஒரே சிந்தனை கொண்ட மனிதர்களை ஒன்று சேர்ப்பதற்கு மிகக் கவனமான தெரிவு முறை அவசியமாகிறது.
 
 இவ்விதம் பட்டியலைத் தயாரிப்பதற்கு அவர்கள் அவசரப்படவில்லை. பல குழுக்களாகப் பிரிந்து தனிநபர்கள், குழுக்கள், அமைப்புக்கள் எனப் பலரையும் தனித்தனியாகச் சந்தித்து இந்த விடயத்தை முன்வைத்தனர். இதற்குக் ஒட்டு மொத்த வரவேற்புக் கிடைத்தது. இதன் மூலம் தூண்டப்பட்டு இது தொடர்பிலான தகவல்களைத் திரட்டிய பிறகு தேசிய ஆலோசனை சபை ஒழுங்கை உருவாக்குவதற்கான இடைக் கால கமிட்டி ஒன்றை உருவாக்கினார்கள்.      
 
 எட்டு வித்தியாசமான மாதிரிகளை அடிப்படையாக வைத்து இடைக்கால ஷூறா கமிட்டி தனது ஆலோசனைகளை எடுத்தது. அவற்றை காலத்தின் தேவைக்கேற்ப சில ஒழுங்குகளை இஸ்லாமிய வரையறைக்குள் உருவாக்கியது. இதன் போது ஷரீஆ தொடர்பான எந்த அம்சத்தையும் சபை கலந்துரையாடவோ, முடிவுகளை எடுக்கவோ மாட்டாது என முடிவெடுக்கப்பட்டது. ஏற்கனவோ இருக்கின்ற நிறுவனங்களை விட கூடிய முக்கியத்துவத்தை இது பெறவோ, அவற்றின் இருப்புக்கு அச்சுறுத்தலையோ இது விடுக்காது. வித்தியாசமான பின்னணி கொண்ட இடைக் கால ஷூறா கமிட்டியில் இருப்பவர்கள்தான் ஷூறா கமிட்டிக்கு வருவார்கள் என்றும் இல்லை.   
  
 இச்சபை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பரந்து பட்ட பிரதிநிதித்துவத்தைக் கொண்டதாகவும், ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டதாகவும் சுதந்திரமானதாகவும் அங்கீகாரம் கொண்டதாகவும் அதிகாரம் மிக்கதாகவும் அனைவரையும் கட்டுப்படுத்தும் விதத்திலான தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடிய இயலுமையைக் கொண்டதாகவும் இருக்கும்.
    
 இதன் அங்கத்தவர்களாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் தம்மை வரித்துக் கொண்டவர்களாகவும், சமூகத்தின் அபிவிருத்திக்காக இதய சுத்தியோடு தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களாகவும், தமது நேரம், சக்தி என்பவற்றைச் செலவிடுவதற்குத் தயாரானவர்களாகவும் இருக்க வேண்டும். அத்தோடு ஒரு நிறுவனத்தின் தலைவராகவோ அல்லது அது அங்கீகரித்த உறுப்பினராகவோ அல்லது குறிப்பிட்டதொரு துறையில் தேசிய ரீதியில் அல்லது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒருவராகவும் தேசப்பற்றுள்ளவராகவும் தேசத்தின் அபிவிருத்தியில் பங்களிப்பு செய்வதற்குத் தயாரானாவராகவும் அரசியல் சாராதவராகவும் இருக்க வேண்டும் என இச்சபைக்கான அங்கத்தவர்களின் தகைமைகள் விதந்துரைக்கப்பட்டுள்ளன.    
 .

0 comments:

Post a Comment