Banner 468 x 60px

 

Monday, August 5, 2013

மஹியங்களை பள்ளிவாசலும், மறைந்திருக்கும் மர்மங்களும்..!

0 comments


(பதுளையிலிருந்து மொஹமட் பாயிஸ்)
மஹியங்கனையில் முஸ்லிம் பள்ளிவாசலோ அல்லது சமய மதத்தளமொன்றோ இல்லை அங்கு எனது சொந்தக்கட்டிடமொன்றில் எனது குடும்பத்தினர்கள் வழிப்பாடுகளில் ஈடுப்பட்டவர்களே தவிர பள்ளிவாசல் இல்லை என சீனிமுஹமது ஹாஜியார் ஒப்பமிட்டு பத்திரிகைகளில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே நாம் சீனி ஹாஜியாரை தொலைபேசி மூலம் தொடர்புக் கொள்ள நாள் முழுவதும் முயற்சித்தப் போதும் அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டு இருந்தது விடாமுயற்சியால் இரவு மீண்டும் தொலைபேசி தொடர்பை மேற்கொண்டப்போது அவர் வாகன மொன்றில் பயணித்துக் கொண்டு இருப்பதாகவும், தொலை பேசி அழைப்புக்கு பதில் அளிக்கமுடியாது எனவும் தெரிவத்தார். அதனுடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதனையடுத்து மகியங்கனை முஸ்லிம்கள் தொழுதுவந்த இடத்திற்கு முன்னின்று செயற்பட்டவரும், சீனிமுஹம்மது அவருடன் குறித்த விடயங்கள் தொடர்பில் இணைந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்படும் சுலைமான் ஹாஜியாருடன் தொலைபேசி தொடர்பை மேற்கொண்டேன். அதன்போது அவர் தெரிவித்த விடயங்கள் மஹியங்கனை பள்ளிவாசல் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம் மீடியாக்களேயாகும். ஊடகங்கள் யாரும் மஹியங்கனைக்கு பிரச்சினைப்படும் போது வரப்போவதில்லை. நீங்கள் எல்லாம் செய்த வேலைகளினாலேயே இந்த நிலை ஏற்பட்டது. 
மஹியங்கனையில் பள்ளிவாசல் உண்டா? என கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர் மஹியங்கனையில் முஸ்லிம் பள்ளிவாசல் என்று ஒன்று இல்லை அப்படி யார் சொன்னது. இதைப் பற்றி பேச விரும்பவில்லை. எல்லாமே நீங்கள் மீடியாக்கள் செய்த வேலைத்தான் என்றார். 
சரி தற்போது நடந்தவை நடந்து முடிந்து விட்டது. முன்னால் ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட காணியில் மீண்டுமொரு பள்ளிவாசலை அமைக்கலாமே என கேட்ட போது தற்போது அதில் இராணுவத்தை சேர்ந்த ஒருவர் கட்டிடம் ஒன்றை அமைத்து அதனை சொந்தமாக்கி கொண்டுள்ளார். அதில் எதையும் செய்ய முடியாது. ஆம் அப்படியென்றால் மஹியங்கனை புண்ணிய பூமிக்கு வெளியே முஸ்லிம்கள் கூடுதலாக நடமாடும் பிரதேசம் ஒன்றில் பள்ளிவாயில் ஒன்றை அமைக்க முயற்சி செய்யலாமே. என்று கேட்டப்போது இங்குள்ள காணிகள் எமது தாய் தந்தையருக்கு சொந்தமானதல்ல என தெரிவித்தார். அத்துடன் அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டது. 
எல்லா விடயங்களும் அரங்கேறி விட்டன. அனைத்தும் நீரில் கரைத்த சீனியை போன்றது. இரவு காத்த கிளிளை போன்றும் ஆகியுள்ளது. இருப்பினும் இங்கு ஓரிரு நாட்கள் தொழுகை நடாத்தப்படவில்லை. சுமார் 21 வருட காலங்கள் தொழுகை நடைப்பெற்றுள்ளது. அதிலும் அண்மை காலத்தில் இடம்பெற்ற தேர்தல் ஒன்றின் போது மர்ஹும் நியாஸ் மௌலவி அவர்கள் மஹியங்கனைக்கு வருகை தந்த போது அவரை கொண்டு தேர்தல் களத்தில் குறித்த அமைச்சர் மற்றும் அதன் பொறுப்பாளர்கள் ஒப்புதலின் பேரில் முதலாவது ஜும்மா தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. அன்றே ஒரு தூர நோக்கோடு இந்த பிரச்சினையை நோக்கியிருந்தால் இந்த நிலை இங்கு ஏற்பட்டிருக்காது. ஐவேளை தொழுகையை மாத்திரம் அங்கு நிறைவேற்றி வந்திருந்தால் நிலைமை வேறாகியிருக்கலாம். இதற்கு அப்பால் பள்ளிவாசலுக்கு அண்மித்த கட்டிடத்தையும் இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் அன்பளிப்புகளால் சுமார் 80 இலட்சம் ரூபா செலவில் (தெரிவிக்கப்படுகிறது) பள்ளிவாசலுக்கு என்று ஏன் வாங்கப்பட்டது. 
அதுமாத்திரமல்ல தற்போது தொழுகை நடாத்தப்பட்டு வரும் இடமும் நவீன வசதிகளுடன் புணர்நிர்மாணிக்கப்பட்டது ஏன். அன்று தொட்டே பள்ளிவாசலை வகுப் சபையில் பதிவு செய்யுமாறு பல தரப்பினரும் கூறிய போதும் அதற்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று எவ்வித அக்கரையும் இல்லாமல் நிர்வாக சபையினர் செயப்பட்டமை இந்த நிலைமையை உள்நோக்காக கொண்டா பள்ளிவாசல் பெயரில் பிரதேச சபையில் நீர் கட்டண  பற்றுச்சீட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஏன் பள்ளிவாசல் பெயரில் பற்றுசீட்டு வழங்கப்படவேண்டும். பள்ளிவாசல் என்ற தோரணையில் இவர்களின் உள்நோக்கங்களை நிறைவேற்றி கொள்ள வேண்டியா இவைகள் மேற்கொள்ளப்பட்டது. பள்ளிவாசல் மூடப்படுவதற்கு முன்னைய வாரத்தில் ஹராம் ஆக்கப்பட்ட மிருகத்தின் உடற்பாகங்கள் வீசப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்ட போது அவைகளை உடனடியாக அங்கிருந்து ஊடகங்களுக்கு தெரிவித்து விடயத்தை பூதாகரமாக்கியவர்கள் யார்? 
அதனையடுத்து பள்ளிவாசல் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹகீமுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு புகைப்படங்கள் பத்திரிகையில் வெளியானது. அப்படியென்றால் பள்ளிவாசல் என்ற விடயமாக ஏன் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும். பள்ளிவாசல் பூட்டப்பட்ட பிறகு பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நடைபெறாதென்று அதன் கதவில் அறிவித்தல் தொங்க விடப்பட்டது ஏன். இந்த நிலையில் அங்கிருந்து ஊடகங்களுக்கு உடனுக்குடன் பள்ளிவாசல் பெயரை பயன்படுத்தி செய்திகளை கொடுத்தவர்கள் யார்? பள்ளிவாசல் மூடியவுடனேயே சம்பந்தப்பட்ட மாகாண சபை அமைச்சருடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடாத்தி சாதகமான நிலையை ஏற்படுத்தியிருக்கலாம். அவைகள் ஒன்றும் செய்யாமல் அனைத்தையுமே உலகறிய செய்தவர்கள் பள்ளிவாசல் ஒன்று இல்லை என்ற அளவிற்கு வங்ரோத்து நிலையை அடைந்திருப்பதற்கான பின்நோக்கம் எது என்பது தெளிவில்லை. இதற்கு அரசியல் காரணங்களும், அல்லது தனது சொந்த சுயநலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இறை இல்லமாம் அல்லாஹ்வின் பள்ளிவாசலை காட்டி கொடுத்து விட்டார்களா? முஸ்லிம்களின் வரலாற்றில் எப்பொழுதும் கோலைகளாக இருந்ததில்லை. என்பது எமது முன்னோர்களின் வரலாறுகள் சான்று பகர்கின்றன. போராட்டங்களும் தியாகங்களுமே வெற்றிகளுக்கு வழிவகுத்துள்ளது. ஸகாத் எனும் தூயக்கடமை சரியாக மேற்கொண்டால் எமது உடமைகளும் சொத்துக்களும் பாதுகாக்கப்படும் என்று இறைவன் கூறியிருப்பது இவர்களுக்கு தெரியவில்லையா. அனைத்தும் இடம்பெற்று முடிந்து விட்டது. மஹியங்கனை ஊடாக பயணிக்கும் முஸ்லிம்களும் பல்வேறு தேவைகளுக்காக அங்கு வரும் முஸ்லிம்களும் இன்று தனது கடமைகளை நிறைவேற்ற முடியாத துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கு இவர்கள் இறைவனிடம் பொறுப்பு சொல்லி ஆக வேண்டும்.
பள்ளிவாசல் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட நிதிகள் மற்றும் ஏனைய சொத்துகள் இலங்கையில் உள்ள பொது பைத்துல் மஹல் ஒன்றுக்கு அவை வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கென்று வாங்கப்பட்ட கட்டிடத்தை அநாவசிய கட்டிடமாக கருதி அதிகார தரப்பினர் அகற்ற முன்பதாக அதனை விற்று அதன் நிதியை முஸ்லிம் தர்ம நிதிக்கு ஒப்படைக்கப் பட வேண்டும். இவ்வாறான முறையற்ற பதிவில்லாத எமது மதத்தளங்களை பராமறிப்பவர்கள் அவைகளை தமது சொந்த சொத்தாக பயன்படுத்தாது உடனடியாக அவைகள் வக்பு செய்யப்பட வேண்டும். இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு பங்கரகம்மன முஸ்லிம் பெண் உயிர் தியாகம் இன்றும் வரலாற்றில் பேசப்படுவது முஸ்லிம்களுக்கு புகழ் சேர்த்த ஒரு விடயமாகும்.
ஆனால் அதே வரிசையில் மஹியங்கனை பள்ளிவாசல் இந்த நாட்டு முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு கறுப்பு யுகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது என்றால் மிகையாகாது. இனிமேலும் இந்நாட்டு முஸ்லிம்கள் கோழைகளாக வாளாது தலை நிமிர்ந்து தனது சொத்துக்களுக்காகவும், தனது வியாபாரத்திற்காகவும் உலகளாவிய இன்பங்களுக்காகவும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தாரை வார்க்க கூடாது. மஹியங்கனை பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினை என்பது எமது வரலாற்றின் ஒரு ஏடாக இன்று அமைந்துவிட்டது.
Read more...

Thursday, August 1, 2013

இஃதிகாப் - ஷரீஆவின் பின்னணியில் ஒரு பார்வை

0 comments


Ihthiqaf(அஷ்ஷெய்க் - முஹம்மத் பகீஹுத்தீன்)

இஸ்லாமிய சட்ட பரிபாஷையில் இஃதிகாப் என்பது பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் தூய்மையான எண்ணத்துடன் இறைவழிபாடுகளில் ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தனித்திருத்தல் என்ற பொருள்படும். இது ஒரு சுன்னாத்தான அமலாகும்.

இஃதிகாபின் சிறப்புக்களைக் கூறும் சில ஹதீஸ்கள்:

1) ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

2) நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி)

3) நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

4) (நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

இஃதிகாபின் வகைகள்

இஃதிகாப் இரண்டு வகைப்படும்.

1) வாஜிப்: யார் இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை வைக்கின்றாரோ அவர் மீது இஃதிகாப் வாஜிபாகும். உமர் (ரழி) அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு நாள் இரவு முழுவதும் இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை வைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவியது போது 'உனது நேர்ச்சையை நிறைவேற்று' என்று கூறினார்கள். (ஆதாரம் புகாரி.)

2) சுன்னதான இஃதிகாப்: ஒருவர் பள்ளிவாசலில் நன்மையை நாடி, இறை திருப்தியை வேண்டி, அல்லாஹ்வை நெருங்குவதற்காக தனித்திருந்து வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவது ஸுன்னதான இஃதிகாப் ஆகும். மேற்கூறிய அனைத்து ஹதீஸ்களும் இதற்கு ஆதராரமாகும்.  
இஃதிகாப் இருப்பதற்கான காலம்

இஃதிகாப் இருப்பதற்கென்று குறிப்பிட்ட காலம் கிடையாது. எப்போதும் இருக்கலாம். எவ்வளவு நேரமும் இருக்கலாம். ஆனால் இஃதிகாப் இருப்பதை நேர்ச்சை மூலம் தனக்கு கடமையாக்கிக் கொண்டவர் குறிப்பிட்ட அந்தக் காலப் பகுதியில் இஃதிகாப் இருப்பது கட்டாயமாகும்.

சுன்னத்தான இஃதிகாப் இருப்பவர்களுக்கு கால வரையரை கிடையாது. இஃதிகாப் இருக்கும் நிய்யத்தோடு கொஞ்சம் நேரம் பள்ளிவாசலில் தங்கியிருந்தாலும் அது நிறைவேறும். அவ்வாறே ஒரு நாள் இஃதிகாப் இருப்பதாக நிய்யத் வைத்து இருந்து விட்டு, இடையில் முறித்துக் கொள்ளவும் முடியும்.

எப்போது ஆரம்பிப்பது:

இஃதிகாப் இருப்பதற்கு நேரம் காலம் கிடையாது என ஏற்கனவே பார்த்தோம். ஒருவர் ஒரு நாள் இஃதிகாப் இருப்பதாக நிய்யத் வைத்தால் அவர் மஃரிப் நேரத்துடன் ஆரம்பித்து மறுநாள் மஃரிப் நேரம் வரை இருக்கவேண்டும் என்பதே அதிகமான இஸ்லாமிய அறிஞர்களது கருத்தாகும். பஜ்ர் நேரம் உதயமாக முன்னர் அவர் பள்ளிக்குள் நுழைந்து விட்டால் அதுவும் ஒரு நாளாக கணிக்கப்பட முடியும் என வேறுசில அறிஞர்கள் கருதுகின்றனர். 'நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருப்பதற்கு நாடினால் பஜ்ர் தொழுகையை முடித்தவுடன் தனக்குரிய பிரத்தியேகமான இடத்தில் ஒதுங்கிவிடுவார்கள்' என்ற ஹதீஸ் இதற்கு ஆதராமாக இருப்பதுடன், இஃதிகாப் இருப்பவர்கள் பஜ்ருக்கு பின்; தனியான இடமொன்றை ஒதுக்கி அதில் தரிப்பதும் நபிவழி என்பதை காட்டுகின்றது.

இஃதிகாபின் றுகூன்கள் (கடமைகள்)

1) நிய்யத்: எல்லா செயல்களும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன என்ற ஹதீஸ் நிய்யத் கட்டாயம் என்பதை வலியுறுத்துகின்றுது. எனவே அல்லாஹ்விற்காக இந்தப் பள்ளியில் இஃதிகாப் இருக்கிறேன் என்ற எண்ணம் மனதில் இருப்பது கட்டாயமாகும். நிய்யத் என்பது உள்ளத்தால் செய்யும் அமல் என்பதில் கருத்துவேறுபாடு கிடையாது. எனவே நிய்யத்துக்குரிய இடம் உள்ளமாகும்.

2) இரண்டாவது கடமை மேற்கூறிய நிய்யத்துடன் பள்ளிவாசலில் தரித்திருத்தல்.

இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசல்கள்

இஃதிகாப் இருப்பதற்கு பொருத்தமான இடம் பள்ளிவாசலே என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது. 'இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து இஃதிகாபில் இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்' (ஸுரா பகரா: 187)

இமாம் அபூ ஹனீபா, இமாம் அஹ்மத் போன்றோரின் கருத்துப் படி ஐவேளை தொழுகை நடைபெறுகின்ற எந்த பள்ளிவாசலிலும் இஃதிகாப் இருக்கலாம். இமாம் ஷாபிஈ, இமாம் மாலிகி போன்றோரின் கருத்துப் படி எந்த பள்ளிவாசலிலும் இஃதிகாப் இருக்கலாம். அங்கே ஐவேளை தொழுகை நடைபெற வேண்டும்; என்ற நிபந்தனை கிடையாது. ஆனால், ஜும்மா நடைபெறும் பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பது சிறந்தது எனக் கூறியுள்ளனர்.

நோன்பும் இஃதிகாபும்

நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாப் இருக்கலாம் என்பது தெளிவு. ஆனால் நோன்பு காலத்தில் இஃதிகாப் இருப்பது பொதுவாக சிறந்த அமலாகும். ரமழான் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருப்பது மிகச் சிறப்புக்குரியதாகும். நபி (ஸல்) அவர்கள் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருப்பதற்கு கூடிய கரிசனை காட்டியுள்ளதோடு அதனை தூண்டியுமுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்பின்றி இஃதிகாப் இருந்ததில்லை என ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் ரமழான் அல்லாத ஏனைய மாதங்களிலும் நோன்புடன் இஃதிகாப் இருப்பது விரும்பத்தக்கது என்பதையே உணர்த்துகிறது. எனவே ரமழான் அல்லாத மாதங்களில் இஃதிகாப் இருப்பவர் விரும்பினால் நோன்பு பிடிக்கலாம், விரும்பினால் நோன்பின்றி இஃதிகாப் இருக்கலாம்.

இஃதிகாப் ஏன்:

லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வதற்காக
தனித்திருந்து அல்லாஹ்வை நெருங்குவதற்காக
உள்ளத்தை தூய்மைப்படுத்துவதற்காக
வணக்க வழிபாடுகளில் மாத்திரம் முற்றுமுழுதாக ஈடுபடுவதற்காக
இச்சையின் தூண்டுதல்களை விட்டு தூரமாகி நோன்பைப் பாதுகாப்பதற்காக
உலக வாழ்வில் பற்றற்று வாழப் பழகுவதற்காக

இஃதிகாப் இருக்கும் போது:

இஃதிகாப் இருப்பதிலிருந்து பூரண பயன் அடைந்து கொள்ள விரும்பும் ஒருவர் வீணான பேச்சுக்களை விட்டும் தவிர்ந்து கொண்டு தொழுகை, குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல் போன்ற இபாதத்களிலேயே கழிக்கவேண்டும். தனியாக இஃதிகாப் இருப்பது போலவே கூட்டாகவும் பலர் சேர்ந்து இஃதிகாப் இருக்கலாம். ஆனால், கூடிக்கதைத்து அதன் பலனை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழுக்களாக இருந்து குர்ஆன் விளக்கங்களை, சன்மார்க்க சட்டங்களை, அல்குர்ஆனில் ஒரு ஸூராவை மற்றும் பயனுள்ள புத்தகங்களையும் படிக்க முடியும்.

இஃதிகாப் இருப்பவரை பாதிக்காக செயற்பாடுகள்

1) மனைவியை வழியனுப்புவதற்காக வெளியேறுதல். நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் சமயத்தில் ஒரு தேவையின் நிமித்தம் நபியவர்களிடம் வந்த அவர்களது மனைவி ஸபிய்யா (ரழி) அவர்களை வழியனுப்;புவதற்காக வீடு வரை சென்றார்கள்.

2) முடி களைதல், நகம் வெட்டுதல், தலை வாருதல்: இது போன்ற சுத்தம் பேணும் விடயங்களில் ஈடுபடலாம்.

3) மலசலம் போன்ற அவசியத் தேவைக்காக பள்ளியை விட்டும் வெளியேறலாம்.

4) உண்ணுதல், பருகுதல், தூங்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.

5) ஜும்மா தொழுகைக்காகவும் நோயாளியை தரிசிப்பதற்காகவும் ஜனாஸாவில் கலந்து கொள்வதற்காகவும் வெளியேறுவதை அலி (ரழி) அவர்கள் விரும்பத்தக்கதாக கருதியுள்ளார்கள். சில சமயம் சமூகப் பணிகளில் கூட ஈடுபட்டுள்ளார்கள். உண்மையில் இஸ்லாத்தில் துறவரம் என்பது கிடையாது. இஃதிகாப் என்ற பெயரில் சமூக உறவை முற்று முழுதாக அறுத்துவிடக் கூடாது என்பதையே இது காட்டுகின்றது. எனவே, இஃதிகாப் விடயத்திலும் சமநிலை பேணுவது ஷரீஆ வேண்டி நிற்கின்ற ஒரு விடயமாகும்.

இஃதிகாப் தனிமனிதனில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

இஃதிகாப் இருக்கும் வழக்கம் தனிமனித வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இஃதிகாப் தேவையற்ற சகவாசம், அதிகமாக தூங்குதல், நாவினால் ஏற்படும் பாவங்களிலிருந்து பாதுகாப்பு வழங்குவதுடன் இறை நினைவோடு வாழ்வதற்கும் அல்குர்ஆன் ஓதுவதற்கும் அல்லாஹ்வைப்பற்றி சிந்திப்பதற்கும் அதிகமாக தொழுவதற்கும் மனக் கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கும் இன்னும் பல வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் துணை செய்கின்றது.

இஃதிகாபை முறிக்கும் கருமங்கள்

1) எந்தத் தேவையுமின்றி வேண்டுமென்றே பள்ளியில் இருந்து வெளியேறுதல்.
2) மதம் மாறுதல்.
3) மயக்கம் அல்லது மனநோய் காரணமாக புத்தி நீங்குதல்.
4) ஹைழ், நிபாஸ் ஏற்படுதல்
5) உடலுறவு கொள்ளுதல்

இறுதியாக

முறையாக விடுமுறை எடுக்காமல் தொழிலை விட்டு விட்டு அல்லது பெண்கள் தமக்குள்ள கடமையான பணிகளை கவனிக்காமல் பள்ளியில் தங்க நினைப்பது அங்கீகரிக்க முடியாத செயலாகும். ஒரு சுன்னத்தான அமலை செய்வதற்காக அதைவிட முற்படுத்த வேண்டிய பணிகளை விட்டுவிடுவது தவறாகும். எனவே, இந்த விடயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
Read more...

எகிப்திய இராணுவ சதிப் புரட்சி எதிர்வினைகளின் அரசியல்

0 comments

Žsupporters-Morsi-005றவூப் ஸெய்ன்


ஒரு இராணுவ சதிப் புரட்சியின் எல்லாக் கூறுகளையும் கொண்டுள்ள, சமீபத்திய எகிப்தின் இராணுவப் புரட்சியும் அதற்குப் பிந்திய நிலவரங்களும் பல்வேறு கருத்து நிலைகளை உருவாக்கியுள்ளது. ஜனநாயகம் பற்றி பேசி வரும் அமெரிக்கா இது வரை அங்கு நடந்ததை "இராணுவப் புரட்சி" என்று குறிப்பிட பின்வாங்குகின்றது.


இந்த இராணுவ சதிப் புரட்சிக்குப் பெருமளவு நிதி ஆதரவு வழங்கிய வொஷிங்டன், அதனை இராணுவப் புரட்சி என்று குறிப்பிட பின்வாங்குவதில் ஆச்சரியமில்லை.

ஜனநாயக வழிமுறைகளின் மூலம் இஸ்லாமிய வாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது வொஷிங்டனுக்கு விருப்பத்திற்குரியதல்ல என்பது மிகவும் தெளிவானது. ஜனநாயகத்திற்கு நேர்-எதிரான இராணுவ சர்வாதிகாரம் ஒரு நாட்டில் தலைதூக்கும் போது அதற்கு அமெரிக்க வழங்கி வரும் இராணுவத்துறை உதவியை நிறுத்துவதுதான் வொஷிங்டனின் பாரம்பரியம்.

ஆனால், அப்துல் பத்தாஹ் ஸீஸியின் எகிப்திய இராணுவ இயந்திரத்திற்கு ஒபாமா வழங்கி வரும் 1.5 பில்லியன் உதவித் தொகையை ஒபாமா நிறுத்தாமை சதிப் புரட்சிக்குப் பின்னணியில் வொஷிங்டனும் இருப்பதை உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த அணுகுமுறைக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது.

supporters-Morsi-003எவ்வாறாயினும், சதிப் புரட்சியைத் தொடர்ந்து சில அறபு நாட்டுத் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள், அறிக்கைகள், புரட்சிக்குப் பின்னணியில் உள்ள சதிகாரர்களின் முகங்களை தோலுரித்துள்ளன. சவூதி அறேபியா, ஐக்கிய அறபு எமிரேட்ஸ், சிரியா என்பன எகிப்தில் உருவாகியுள்ள ஜனநாயக விரோத, இராணுவ சர்வசாதிகாரத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளமை பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தூனிஸிய அறபு வசந்தத்திற்குப் பின்னர் ஒவ்வொரு அறபு நாடாகப் பரவி வந்த மக்கள் புரட்சி தசாப்தகாலமாக அதிகாரத்தில் இருந்த மாபியா கும்பல்களை தூக்கி வீசியது. இன்னொரு புறம், மிதவாத, ஜனநாயகத் தன்மையுள்ள இஸ்லாமியவாதிகளுக்கு அதிகாரத்தைக் கைமாற்றியது. இந்த ஜனநாயக மாற்றம் மூன்று வகையான சக்திகளால் பெரும் சவாலாகவே பார்க்கப் பட்டு வருகிறது. பிராந்தியத்தில் குடும்ப ஆட்சி நடத்தி வரும் மன்னர்கள் உள்ளிட்டு, அறபு- இஸ்லாமிய நாடுகளில் பரவியிருக்கும், சோசலிஸ முகமூடி அணிந்த, மதச்சார்பற்ற சக்திகள் மற்றும் பிராந்தியத்தின் பெற்றோலிய வளத்தில் குறியாய் இருக்கும் சியோனிஸ ஆதரவு வொஷிங்டன் ஆகிய மூன்று சக்தி களுக்கும் இஸ்லாமியவாதிகள் ஒரு சிம்ம சொப்பனமாகவே தோன்றுகின்றனர்.

பெற்றோலிய பொருளாதாரத்தின் அடித்தளமாக உள்ள அறபு நாடுகள் மீது காலா காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் வொஷிங்டன், அங்கு ஜனநாயக மாற்றம் வருவதை தடுத்து வருவதேன் என்ற கேள்விக்கு கிடைக்கும் விடை மிகவும் தெளிவானது.

குடும்ப ஆட்சியில் நீடிப்பவர்களும் தமக்கு நடக்க இருக்கும் ஆபத்து குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். அதனால் தான், "சுரங்கத்திலிருந்து எகிப்தியர்களை மீட்டெடுத்த இராணுவம்" என சதிகாரக் கும்பலை சவூதியின் அப்துல்லாஹ் சிலாகிக்கிறார்.

1947 இல் ஹெரி எஸ். ட்ரூமன் ஜனாதிபதியாக இருந்தபோது சவூதியின் ஆதிக்க வர்த்தகத்திற்கும் வொஷிங்டனுக்கும் இடையில் ஓர் இரகசிய ஒப்பந்தம் நடைபெற்றது. சவூதி அறேபியாவில் இப்னு ஸுஊதின் பரம்பரை ஆட்சியைப் பாதுகாக்கும் பொறுப்பை அது முதல் அமெரிக்கா ஏற்கின்றது என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

இறுக்கமான ஜனநாயகப் பெறுமானங்களை மீறுகின்ற மன்னராட்சிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தாலும் ஐ.நா.வினூடாக அதனை வொஷிங்டன் பாதுகாத்துவருகின்றது. வொஷிங்டனின் இந்த செஞ்சோற்றுக் கடனுக்காக மன்னர்கள் இஸ்ரேல் குறித்தும், அதன் அடாவடித்தனங்கள் குறித்தும் மௌனமாக இருக்கின்றனர்.

அரசியல் இஸ்லாம் மேலெழுந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றது. அறபுகளின் ஆடம்பர வாழ்க்கை மோகத்தையும் வசதிகளையும் எல்லையின்றி மேம்படுத்துவதன் மூலம் மக்கள் புரட்சி வராமல் மன்னர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இப்பின்னணியிலேயே எகிப்தின் இராணுவக் கும்பலுக்கு ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை சவூதி அறேபியா உதவித் தொகையாக ஒதுக்கியுள்ளது.

மிக வேகமாக மேற்கத்தேய மயமாகி வரும் ஐக்கிய அறபு எமிரேட்ஸின் அமீரும் எகிப்தின் இராணுவக் கும்பலை ஆதரித்து அறிக்கை விட்டுள்ளதோடு, 3 பில்லியன் அமெரிக்க டொலரை உதவியாக வழங்கியுள்ளார். 3 இலட்சம் டொன் டீசலையும் அன்பளிப்பாக அளித்துள்ளார். தமது மன்னராட்சியைக் காக்க வேண்டுமாயின், இத்தகைய கீழ்த்தரமான அரசியல் வழிமுறைகளையே கையாள வேண்டிய நிர்ப்பந்தம் இத்தகையோருக்கு இருந்து வருகின்றது.

எகிப்தில் நடைபெற்ற சதிப்புரட்சி குறித்து உடனடியாகக் கருத்துத் தெரிவித்த சிரிய அரச ரோபோவும் ஈரானின் கையில் கட்டப்பட்டுள்ள பொம்மையுமான பஷ்ஷார் அல் அஸத், எகிப்திய ஆட்சி மாற்றத்தோடு அரசியல் இஸ்லாத்தின் கதை முடிந்து விட்டதாக கதை பரப்புகிறார். supporters-Morsi-004

அரசியல் இஸ்லாம் என்பது ஜனநாயகப் பெறுமானங்களைக் கொண்டது. நீதி, சுதந்திரம், சமத் துவம், பொருளாதார அபிருத்தி, மனித உரிமைகள் ஆகியனவே அரசியல் இஸ்லாத்தின் குறிக்கோள்கள் என்பதை அஸதும் முன்னர் அவரது தந்தையும் நன்று அறிந்து வைத்திருந்தனர். ஆனால், அரசியல் இஸ்லாத்தை அடியோடு ஒழித்தால்தான் தமது பாசிஸ ஆட்சியை நீடிக்கச் செய்யலாம் என இவர்கள் எண்ணுகின்றனர்.

90%மான மக்கள் அவரது அதிகாரக் கட்டிலின் மீது காறி உமிழ்கின்றபோது, சொந்த மக்களை நோக்கி தனது துப்பாக்கியை திருப்புகின்றார். எகிப்தில் சதிகாரக் கும்பலால் இஸ்லாமிய வாதிகளின் ஆட்சி தற்காலிகமாக கவிழ்க்கப்பட்டிருக்கலாம். இதன் அர்த்தம் அரசியல் இஸ்லாத்தின் கதை முடிவதல்ல. என்றென்றும் அஸத் எனும் இறுமாப்பு என்றோ ஒருநாள் உடைந்து நொறுங்கும் போதுதான் அஸதுக்கு இந்த உண்மை உறைக்கும். அதுவரை தற்காலிக மகிழ்ச்சியில் அவர் மிதக்கலாம்.

ஈரானின் புதிய ஜனாதிபதி எகிப்தில் சகோதரத்துவ அமைப்பினர் ஆட்சி கவிழ்க்கப்பட்டமை ஷீஆ பீதியின் அறுவடை என்கிறார். ஷீஆ பீதி என்பது என்ன என்பதை அவர் தெளிவாகச் சொல்லவில்லை. பிராந்தியத்தில் தன்னாதிக்கத்தை நிறுவும் மமதையுடன் செயல்பட்டு வரும் ஈரானின் உள்ளே வகைதொகையற்ற நெருக்கடிகளும் பிரச்சினைகளும் நீடிக்கின்றன. இந்நிலையில் எகிப்து குறித்து அவர் கருத்து வெளியிட்டிருப்பது மிகவும் கேலிக்கூத்தானது.

சியோனிசத்தின் அகன்ற இஸ்ரேல் கனவு போன்று ஷீஆயிஸத் திற்கும் ஓர் அகன்ற ஈரான் கனவு உள்ளது. அது இமாமியத் கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டது. பிராந்தியத்தில் இஸ்லாமிய வாதிகள் கிலாபத் அடிப்படையிலான ஆட்சியொன்றை வடிவமைக்கும்போது, இமாமியத் பெரும் சவாலை எதிர்நோக்கும் என்ற முன்னெச்சரிக்கையோடுதான் ஹஸன் ரூஹானி இப்படி அறிக்கை விட்டுள்ளார்.

துருக்கியின் அர்தூகான் மாத்திரமே எகிப்தில் நடந்தது ஒரு தெளிவான இராணுவ சதிப் புரட்சி எனவும், மேற்கு நாடுகள் அதனை ஆதரிப்பது பெரும் அரசியல் குற்றம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மொத்தத்தில் இராணுவ சர்வதிகாரமா, ஜனநாயக ஆட்சியா என்ற இரண்டக நிலையில் எகிப்தியர்கள் திணறிக் கொண்டிருக்கையில் பிராந்தியத்தின் ஏனைய தலைவர்களும் சர்வதேச சக்திகளும் எகிப்தியர்களின் சுதந்திரப் புரட்சியை சிறிது சிறிதாக திருடிக் கொண்டிருக்கின்றனர். துப்பாக்கிகளால் மக்களைப் பணிய வைக்கலாம் என்ற இராணுவத்தினரின் கனவு அங்கு பலிக்கப் போவதில்லை.

சேகுவரா ஒரு முறை சொன்னதுபோல், மக்களை அவர்கள் சாகடிக்கலாம், ஆனால் புரட்சியை தோற்கடிக்க முடியாது. Meelparvai
Read more...