Banner 468 x 60px

 

Thursday, August 1, 2013

எகிப்திய இராணுவ சதிப் புரட்சி எதிர்வினைகளின் அரசியல்

0 comments

Žsupporters-Morsi-005றவூப் ஸெய்ன்


ஒரு இராணுவ சதிப் புரட்சியின் எல்லாக் கூறுகளையும் கொண்டுள்ள, சமீபத்திய எகிப்தின் இராணுவப் புரட்சியும் அதற்குப் பிந்திய நிலவரங்களும் பல்வேறு கருத்து நிலைகளை உருவாக்கியுள்ளது. ஜனநாயகம் பற்றி பேசி வரும் அமெரிக்கா இது வரை அங்கு நடந்ததை "இராணுவப் புரட்சி" என்று குறிப்பிட பின்வாங்குகின்றது.


இந்த இராணுவ சதிப் புரட்சிக்குப் பெருமளவு நிதி ஆதரவு வழங்கிய வொஷிங்டன், அதனை இராணுவப் புரட்சி என்று குறிப்பிட பின்வாங்குவதில் ஆச்சரியமில்லை.

ஜனநாயக வழிமுறைகளின் மூலம் இஸ்லாமிய வாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது வொஷிங்டனுக்கு விருப்பத்திற்குரியதல்ல என்பது மிகவும் தெளிவானது. ஜனநாயகத்திற்கு நேர்-எதிரான இராணுவ சர்வாதிகாரம் ஒரு நாட்டில் தலைதூக்கும் போது அதற்கு அமெரிக்க வழங்கி வரும் இராணுவத்துறை உதவியை நிறுத்துவதுதான் வொஷிங்டனின் பாரம்பரியம்.

ஆனால், அப்துல் பத்தாஹ் ஸீஸியின் எகிப்திய இராணுவ இயந்திரத்திற்கு ஒபாமா வழங்கி வரும் 1.5 பில்லியன் உதவித் தொகையை ஒபாமா நிறுத்தாமை சதிப் புரட்சிக்குப் பின்னணியில் வொஷிங்டனும் இருப்பதை உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த அணுகுமுறைக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது.

supporters-Morsi-003எவ்வாறாயினும், சதிப் புரட்சியைத் தொடர்ந்து சில அறபு நாட்டுத் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள், அறிக்கைகள், புரட்சிக்குப் பின்னணியில் உள்ள சதிகாரர்களின் முகங்களை தோலுரித்துள்ளன. சவூதி அறேபியா, ஐக்கிய அறபு எமிரேட்ஸ், சிரியா என்பன எகிப்தில் உருவாகியுள்ள ஜனநாயக விரோத, இராணுவ சர்வசாதிகாரத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளமை பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தூனிஸிய அறபு வசந்தத்திற்குப் பின்னர் ஒவ்வொரு அறபு நாடாகப் பரவி வந்த மக்கள் புரட்சி தசாப்தகாலமாக அதிகாரத்தில் இருந்த மாபியா கும்பல்களை தூக்கி வீசியது. இன்னொரு புறம், மிதவாத, ஜனநாயகத் தன்மையுள்ள இஸ்லாமியவாதிகளுக்கு அதிகாரத்தைக் கைமாற்றியது. இந்த ஜனநாயக மாற்றம் மூன்று வகையான சக்திகளால் பெரும் சவாலாகவே பார்க்கப் பட்டு வருகிறது. பிராந்தியத்தில் குடும்ப ஆட்சி நடத்தி வரும் மன்னர்கள் உள்ளிட்டு, அறபு- இஸ்லாமிய நாடுகளில் பரவியிருக்கும், சோசலிஸ முகமூடி அணிந்த, மதச்சார்பற்ற சக்திகள் மற்றும் பிராந்தியத்தின் பெற்றோலிய வளத்தில் குறியாய் இருக்கும் சியோனிஸ ஆதரவு வொஷிங்டன் ஆகிய மூன்று சக்தி களுக்கும் இஸ்லாமியவாதிகள் ஒரு சிம்ம சொப்பனமாகவே தோன்றுகின்றனர்.

பெற்றோலிய பொருளாதாரத்தின் அடித்தளமாக உள்ள அறபு நாடுகள் மீது காலா காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் வொஷிங்டன், அங்கு ஜனநாயக மாற்றம் வருவதை தடுத்து வருவதேன் என்ற கேள்விக்கு கிடைக்கும் விடை மிகவும் தெளிவானது.

குடும்ப ஆட்சியில் நீடிப்பவர்களும் தமக்கு நடக்க இருக்கும் ஆபத்து குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். அதனால் தான், "சுரங்கத்திலிருந்து எகிப்தியர்களை மீட்டெடுத்த இராணுவம்" என சதிகாரக் கும்பலை சவூதியின் அப்துல்லாஹ் சிலாகிக்கிறார்.

1947 இல் ஹெரி எஸ். ட்ரூமன் ஜனாதிபதியாக இருந்தபோது சவூதியின் ஆதிக்க வர்த்தகத்திற்கும் வொஷிங்டனுக்கும் இடையில் ஓர் இரகசிய ஒப்பந்தம் நடைபெற்றது. சவூதி அறேபியாவில் இப்னு ஸுஊதின் பரம்பரை ஆட்சியைப் பாதுகாக்கும் பொறுப்பை அது முதல் அமெரிக்கா ஏற்கின்றது என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

இறுக்கமான ஜனநாயகப் பெறுமானங்களை மீறுகின்ற மன்னராட்சிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தாலும் ஐ.நா.வினூடாக அதனை வொஷிங்டன் பாதுகாத்துவருகின்றது. வொஷிங்டனின் இந்த செஞ்சோற்றுக் கடனுக்காக மன்னர்கள் இஸ்ரேல் குறித்தும், அதன் அடாவடித்தனங்கள் குறித்தும் மௌனமாக இருக்கின்றனர்.

அரசியல் இஸ்லாம் மேலெழுந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றது. அறபுகளின் ஆடம்பர வாழ்க்கை மோகத்தையும் வசதிகளையும் எல்லையின்றி மேம்படுத்துவதன் மூலம் மக்கள் புரட்சி வராமல் மன்னர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இப்பின்னணியிலேயே எகிப்தின் இராணுவக் கும்பலுக்கு ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை சவூதி அறேபியா உதவித் தொகையாக ஒதுக்கியுள்ளது.

மிக வேகமாக மேற்கத்தேய மயமாகி வரும் ஐக்கிய அறபு எமிரேட்ஸின் அமீரும் எகிப்தின் இராணுவக் கும்பலை ஆதரித்து அறிக்கை விட்டுள்ளதோடு, 3 பில்லியன் அமெரிக்க டொலரை உதவியாக வழங்கியுள்ளார். 3 இலட்சம் டொன் டீசலையும் அன்பளிப்பாக அளித்துள்ளார். தமது மன்னராட்சியைக் காக்க வேண்டுமாயின், இத்தகைய கீழ்த்தரமான அரசியல் வழிமுறைகளையே கையாள வேண்டிய நிர்ப்பந்தம் இத்தகையோருக்கு இருந்து வருகின்றது.

எகிப்தில் நடைபெற்ற சதிப்புரட்சி குறித்து உடனடியாகக் கருத்துத் தெரிவித்த சிரிய அரச ரோபோவும் ஈரானின் கையில் கட்டப்பட்டுள்ள பொம்மையுமான பஷ்ஷார் அல் அஸத், எகிப்திய ஆட்சி மாற்றத்தோடு அரசியல் இஸ்லாத்தின் கதை முடிந்து விட்டதாக கதை பரப்புகிறார். supporters-Morsi-004

அரசியல் இஸ்லாம் என்பது ஜனநாயகப் பெறுமானங்களைக் கொண்டது. நீதி, சுதந்திரம், சமத் துவம், பொருளாதார அபிருத்தி, மனித உரிமைகள் ஆகியனவே அரசியல் இஸ்லாத்தின் குறிக்கோள்கள் என்பதை அஸதும் முன்னர் அவரது தந்தையும் நன்று அறிந்து வைத்திருந்தனர். ஆனால், அரசியல் இஸ்லாத்தை அடியோடு ஒழித்தால்தான் தமது பாசிஸ ஆட்சியை நீடிக்கச் செய்யலாம் என இவர்கள் எண்ணுகின்றனர்.

90%மான மக்கள் அவரது அதிகாரக் கட்டிலின் மீது காறி உமிழ்கின்றபோது, சொந்த மக்களை நோக்கி தனது துப்பாக்கியை திருப்புகின்றார். எகிப்தில் சதிகாரக் கும்பலால் இஸ்லாமிய வாதிகளின் ஆட்சி தற்காலிகமாக கவிழ்க்கப்பட்டிருக்கலாம். இதன் அர்த்தம் அரசியல் இஸ்லாத்தின் கதை முடிவதல்ல. என்றென்றும் அஸத் எனும் இறுமாப்பு என்றோ ஒருநாள் உடைந்து நொறுங்கும் போதுதான் அஸதுக்கு இந்த உண்மை உறைக்கும். அதுவரை தற்காலிக மகிழ்ச்சியில் அவர் மிதக்கலாம்.

ஈரானின் புதிய ஜனாதிபதி எகிப்தில் சகோதரத்துவ அமைப்பினர் ஆட்சி கவிழ்க்கப்பட்டமை ஷீஆ பீதியின் அறுவடை என்கிறார். ஷீஆ பீதி என்பது என்ன என்பதை அவர் தெளிவாகச் சொல்லவில்லை. பிராந்தியத்தில் தன்னாதிக்கத்தை நிறுவும் மமதையுடன் செயல்பட்டு வரும் ஈரானின் உள்ளே வகைதொகையற்ற நெருக்கடிகளும் பிரச்சினைகளும் நீடிக்கின்றன. இந்நிலையில் எகிப்து குறித்து அவர் கருத்து வெளியிட்டிருப்பது மிகவும் கேலிக்கூத்தானது.

சியோனிசத்தின் அகன்ற இஸ்ரேல் கனவு போன்று ஷீஆயிஸத் திற்கும் ஓர் அகன்ற ஈரான் கனவு உள்ளது. அது இமாமியத் கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டது. பிராந்தியத்தில் இஸ்லாமிய வாதிகள் கிலாபத் அடிப்படையிலான ஆட்சியொன்றை வடிவமைக்கும்போது, இமாமியத் பெரும் சவாலை எதிர்நோக்கும் என்ற முன்னெச்சரிக்கையோடுதான் ஹஸன் ரூஹானி இப்படி அறிக்கை விட்டுள்ளார்.

துருக்கியின் அர்தூகான் மாத்திரமே எகிப்தில் நடந்தது ஒரு தெளிவான இராணுவ சதிப் புரட்சி எனவும், மேற்கு நாடுகள் அதனை ஆதரிப்பது பெரும் அரசியல் குற்றம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மொத்தத்தில் இராணுவ சர்வதிகாரமா, ஜனநாயக ஆட்சியா என்ற இரண்டக நிலையில் எகிப்தியர்கள் திணறிக் கொண்டிருக்கையில் பிராந்தியத்தின் ஏனைய தலைவர்களும் சர்வதேச சக்திகளும் எகிப்தியர்களின் சுதந்திரப் புரட்சியை சிறிது சிறிதாக திருடிக் கொண்டிருக்கின்றனர். துப்பாக்கிகளால் மக்களைப் பணிய வைக்கலாம் என்ற இராணுவத்தினரின் கனவு அங்கு பலிக்கப் போவதில்லை.

சேகுவரா ஒரு முறை சொன்னதுபோல், மக்களை அவர்கள் சாகடிக்கலாம், ஆனால் புரட்சியை தோற்கடிக்க முடியாது. Meelparvai

0 comments:

Post a Comment