Banner 468 x 60px

 

Wednesday, November 28, 2012

யாசிர் அரபாத்தின் உடல் தோண்டி எடுப்பு: மாதிரிகள் பெற்ற பின் மீண்டும் அடக்கம்

0 comments

ரஷ்யா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நிபுணர்கள் தனித்தனியாக ஆய்வு

பலஸ்தீன முன்னாள் தலைவர் யாசிர் அரபாத் மரணமடைந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதிலிருந்து டி.என்.ஏ. சோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் அரபாத்தின் மரணத்திற்கான காரணம் குறித்து நிபுணர்கள் சோதனை மேற்கொள்ளவுள்ளனர்.
அரபாத்தின் உடைமைகளில் பொலொனியம் 210 எனும் ஆட்கொல்லி கதிரியக்கம் இருப்பது கண்டறியப்பட்ட தைத் தொடர்ந்தே அவரது மரணம் குறித்து மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ள்ளன. இதனையொட்டி நேற்று காலை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் பார்வையில் இருந்து தடுக்கப்பட்டு ரகசியமான முறையில் அரபாத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடலில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டதாக பலஸ்தீன நிர்வாகம் உறுதி செய்தது.
மேற்குக் கரையின் ரமல்லா நகரில் இருக்கும் யாசிர் அரபாத்தின் அடக்கஸ்தலத்தை தோண்டும் பணிகள் பலஸ்தீன நேரப்படி நேற்று அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக பலஸ்தீன வட்டாரங்கள் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு தகவல் அளித்துள்ளன. அரபாத்தின் உடல் தோண்டி எடுக்கப்படும் போது அருகில் மூன்று மருத்துவர்கள், மூன்று நீதித்துறை தொடர்பான விஞ்ஞானிகள், சுகாதார அமைச்சர், நீதி அமைச்சர், தலைமை வழக்கறிஞர்கள் இருந்துள்ளனர்.
எனினும் பலஸ்தீன மருத்துவர்களுக்கு மாத்திரமே யாசிர் அரபாத் உடல் வைக்கப்பட்டுள்ள பாகத்தை தொடவும், அதிலிருந்து மாதிரிகளை பெறவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அரபாத்தின் மரண விசாரணையை மேற்கொண்டுவரும் சுவிட்சர்லாந்து, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நிபுணர்களின் முன்னிலையிலேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குள் யாசிர் அரபாத்தின் உடல் மீண்டும் இருந்தவாறே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் போது இராணுவ மரியாதை வழங்க பலஸ்தீன நிர்வாகம் முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் அது முன்னெடுக்கப்படவில்லை.
இதன் போது யாசிர் அரபாத்தின் அடக்கஸ்தலம் தோண்டி எடுக்கப்பட்டதும் அவரது உடல் மேலே எடுக்கப்படாமலும் அதன் ஒரு பாகம் மாத்திரமே திறக்கப்பட்டும் டி.என்.ஏ. சோதனைக்கான மாத்திரிகள் பெறப்பட்டதாக பலஸ்தீன வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனால் இராணுவ மரியாதை வழங்கப்பட வேண்டிய தேவை ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
“அடக்கஸ்தலத்திற்குள் இருந்தே மாதிரிகள் பெறப்பட்டு அவை பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்ப ட்டது” என பலஸ்தீன தரப்பில் கூறப் பட்டுள்ளது. யாசிர் அரபாத்தின் அடக்கஸ்தலம் அமைந்திருக்கும் ரமல்லாவில் உள்ள முகாதா ஜனாதிபதி வளாகத்தின் அரபாத் அடக்கம் செய்யப்பட்ட பகுதி நீல நிற திரையால் ஒருவாரத்திற்கு முன்னரே மூடப்பட்டது. எனினும் அவரது உடலில் இருந்து மாதிரிகள் பெறப்பட்ட பின் நேற்று பின்னேறத்தில் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில் அரபாத்தின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா தரப்பில் தனித் தனியாக சோதனை மேற்கொள்ளவுள்ளது. இதில் அரபாத்தின் உடலில் பொலொனியம் கதிரியக்கம் அல்லது நஞ்சூட்டப்பட்டதற் கான ஆதாரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
அல் ஜkரா தொலைக்காட்சி தனது ஆவணப்படத்திற்காக 9 மாதங்கள் மேற்கொண்ட ஆய்வின் போதே யாசிர் அரபாத்தின் உடைமைகளில் பொலொனியம் கதிரியக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பொலொனியம் கதிரியக்கம் மூலம் ரஷ்ய முன்னாள் உளவாளி அலக்சான்டர் லித்வினன்கோ 2006 ஆம் ஆண்டு லண்டனில் வைத்து கொல்லப்பட்டது பிரபலமானது.
எனினும் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள இராணுவ மருத்துவ மனையில் யாசிர் அரபாத் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்தது தொடக்கமே அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுந்திருந்தது. அவரது மரணம் குறித்த தகவலை பிரான்ஸ் நிர்வாகம் வெளியிடவில்லை. அவர் ரத்த கோளாறு காரணமாக ஏற்பட்ட பக்கவாதத்தால் மரணமடைந்ததாக கூறப்பட்டது. என்றாலும் அவரது மரணத்திற்கு இஸ்ரேலே காரணம் என பெரும்பாலான பலஸ்தீனர்கள் இன்றும் நம்பி வருகின்றனர்.
இதனையொட்டி பிரான்ஸ் கடந்த ஓகஸ்டில் அரபாத்தின் மரண விசாரணையை ஆரம்பித்தது. யாசிர் அரபாத்தின் மனைவி சுஹா மற்றும் மகளின் கோரிக்கைக்கு அமையவே பிரான்ஸ் இந்த மரண விசாரணையை ஆரம்பித்தது. அதேபோன்று அரபாத்தின் உடலில் பொலொனியம் கதிரியக்கம் இருப்பதை கண்டறிந்த சுவிட்சர்லாந்து நிபுணர்கள் தனியாகவும், பலஸ்தீன வேண்டுகோளுக்கு அமைய ரஷ்யா தனியாகவும் மரண விசாரணைகளை ஆரம்பித்தன. இந்நிலையில் அரபாத்தின் உடலில் இருந்து பெறப்பட்ட மாத்திரிகளை பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் தனித்தனியாக சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் முடிவுகள் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் பொலொனியம் கதிரியக்கம் குறைந்த ஆயுட்காலத்தை கொண்டதால் பெறப்பட்டுள்ள மாதிகளில் அது இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஒரு சில நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரான்ஸின் கதிரியக்க பாதுகாப்பு மற்றும் அணுப் பாதுகாப்பு நிறுவனத்தின் மனித பாதுகாப்புப் பிரிவின் துணைத் தலைவர் ஜீன்ரெனெ ஜொர்டை கூறும் போது, “இந்த பொலொனிய கதிரியக்கம் மனிதரால் உருவாக்கப்பட்டதா அல்லது தற்செயலாக இயற்கையால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய பல வாரங்கள் தேவைப்படும். இதனால் பொலொனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மனிதரால் உருவாக்கப்பட்டது என தீர்மானிக்க முடியாது" என்றார்.
எனவே, பொலொனியம் கதிரியக்கம் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ள உறுப்புகள் மற்றும் எலும்பு மாதிரிகள் அரபாத் உடலில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment