Banner 468 x 60px

 

Tuesday, November 27, 2012

க. பொ. த. (உ/த) பரீட்சை: பெறுபேறு; புள்ளிகள்; இஸட் ஸ்கோரில் அணுஅளவேனும் பிழை ஏற்படவில்லை

1 comments

க. பொ. த. (உ/த) பரீட்சை:

பெறுபேறு; புள்ளிகள்; இஸட் ஸ்கோரில் அணுஅளவேனும் பிழை ஏற்படவில்லை

அரசியல் மயமாக்க சிலர் முயற்சி
க. பொ. த. உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளிலோ, வழங்கப்பட்ட புள்ளிகளிலோ, இஸட் ஸ்கோரிலோ அணுஅளவே னும் பிழை ஏற்படவில்லை.
எந்தவொரு மாணவருக்கும் அநீதியும் இழைக்கப்படவும் இல்லை. எனினும், இந்தப் பிரச்சினையை பூதாகரமாக்கி அரசியல் மயமாக்க சிலர் முயற்சிக்கின்றனர் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா கூறினார்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பாக எதிர்க் கட்சியினர் கேட்பதைப் போன்று பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை அமைக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் பந்துல கூறினார்.
பழைய பாடத்திட்டம், புதிய பாடத்திட்டம் என தனித் தனியாக பரீட்சைகள் நடத்தப்பட்டு ஒன்றாக பெறு பேறுகள் வழங்கப்பட்டமை தவறு என் றும் க. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான குளறுபடிக்கு தீர்வு காணும் நோக்குடன் பாராளுமன்ற தெரிவுக்குழு வொன்றை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசினார்.
இதற்கு பதிலளித்துப் பேசும்போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
க. பொ. த உயர்தரப் பரீட்சைகள் முடிவடைந்த பின்னர் பொதுவாக 4 முதல் 6 மாதத்துள் பெறுபேறுகள் வெளியிடப்படும். கடந்த காலங்களில் 2009 ஆம் ஆண்டு 6 மாதங்களில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. 2010 ஆம் ஆண்டு 4 மாதங்களில் வெளியிடப்பட்டன. ஏனோ சிலருக்கு இம்முறை பெறுபேறுகளை அவசர அவசரமாக வெளியிட வேண்டிய தேவை இருந்தது.
இதனாலேயே சிலர் முன்கூட்டியே பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருந்தனர். டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிடப்படாவிட்டால் நீதிமன்றம் செல்வோம் என சிலரும், மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிடுவோம் என்றும் சிலர் அறிக்கை விட்டுக்கொண்டிருந்தனர்.
1968 ஆம் ஆண்டின் பரீட்சைகள் சட்டத்தின் பிரசாரம் எந்தவொரு அரசியல் தலையீட்டுக்கும் பரீட்சைகள் திணைக்களத்தில் இடமில்லை. கல்வி அமைச்சுக்கு மிக அருகில் இருந்தாலும் அதில் தலையீடு செய்வதற்கு முடியாது. முழு அதிகாரமும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளருக்கு உண்டு.
பரீட்சைகள் திணைக்களம் 40 வெளிநாட்டு பரீட்சைகள் உட்பட 364 பரீட்சைகளை நடத்துகிறது. எமது மாணவர்கள் பாடசாலைக்கு சேர்ந்ததன் பின்னர் மிக முக்கியமான மூன்று பரீட்சைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க. பொ. த. சாதாரண தர பரீட்சை மற்றும் க. பொ. த. உயர்தர பரீட்சை என்பவற்றிற்கு முகம் கொடுக்கின்றனர்.
க. பொ. த. உயர்தர பரீட்சை தான் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பற்றிய தீர்மானத்தை ஏற்படுத்தக்கூடிய பரீட்சையாக அமைந்துள்ளது.
இந்தப் பரீட்சையின்போது சில மாணவர்களுக்கு பிழையான பெறுபேறுகள் கிடைத்ததாக செய்திகள் வெளிவந்தன. வர்த்தக துறையில் தோற்றியவருக்கு மருத்துவ துறைக்கான பெறுபேறு வந்ததாக செய்திகள் வெளிவந்தன. எனினும் வெரும் இது தொடர்பாக எமக்கு நேரடியாக அறிவிக்கவில்லை. வரவும் இல்லை.
ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கும் எந்தவொரு மாணவரும் எழுத்து மூலம் அறிவிக்கவும் இல்லை.
இவ்வாறான பிழைகள் இருப்பதாக கூறினால் அவர்கள் யார் என்பதை எங்களுக்கு காட்டுங்கள். எங்களிடம் அழைத்து வாருங்கள் என்றும் அமைச்சர் பந்துல கூறினார்.
பரீட்சை நடத்துவதற்கான வினாத்தாள் தயாரித்தல், பரீட்சைக்கான கைநூல்கள் தயாரித்தல் பரீட்சை நடத்துதல், விடைத்தாள் திருத்துதல், புள்ளிகள் வழங்குதல், ஏ.பி. தரம் பிரித்தல், பெறுபேறுகளை வெளியிடல் என்பதுடன் பரீட்சை திணைக்களத்தின் கடமை முடிந்து விடுகிறது.
இதன் பின்னர், இஸட் ஸ்கோருக்கான சூத்திரத்தைப் பயன்படுத்தி இஸட் ஸ்கோர் வழங்குவது உயர்கல்வி அமைச்சின் பணியாகும் என்றும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டார். எனினும் பல்கலைக்கழக அனுமதி பெறுபவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இஸட் ஸ்கோர் வழங்கப்படுகிறது.
சில மாணவர்கள் பெறும் பெறுபேறுகள் பாடத்திற்கு பாடம் வேறுபடுகிறது. இதனால் பல்கலைக்கழக அனுமதியில் அநீதி இழைக்கப்படாமல் இருப்பதற்காக இஸட் ஸ்கோர் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் எவ்வித பிழையும் இல்லை என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவும் பதிலளித்தார்.

1 comments:

Post a Comment