கேள்வி: பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சில தீவிரப் போக்குடையவர்கள் இஸ்லாத்தை இகழ்ந்தும் முஸ்லிம்களை புண்படுத்தியும் கருத்துகளை வெளிப்படுத்துகிறார்களே?
பதில்: நமது நாட்டிலே வாழும் பெளத்த மதத்தவருள் 99 சதவீதமானோர் உண்மையாகவே புத்தபிரானின் போதனைகளைப் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்கள் தாமும் தமது வாழ்க்கையும் என யாருக்கும் துன்பம் விளைவிக்காது வாழ்கிறார்கள். புத்தபிரான் ஒரு பெரிய மகான். அவர் அன்பாலும், கருணையாலும் மக்களைக் கவர்ந்தார். நமது எண்ணங்களும் செயல்களும் பிறருக்குத் துன்பம் விளைவிக்கக் கூடாது. நல்லனவற்றையே எண்ணவேண்டும். செய்யவும் வேண்டும் எனப் போதித்தார். அதிக ஆசை துன்பத்தை விளைவிக்கும் என்று கூறினார். புத்த பிரானின் இந்தப் போதனையின் அர்த்தத்தைச் சரியாகப் பின்பற்றினால் கடும் போக்காளர்கள் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரியாக மாறி இருக்க மாட்டார்கள். பிற மதங்களைத் தூஷித்தும் இகழ்ந்தும் அவர் பெளத்தத்தை வளர்க்கவில்லை. சர்வமத இணக்கத்தோடு சமாதான வழியில் புத்த மதத்தை வளர்த்தார்.
அதனாலேதான் ஆசியாவில் பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் புத்தமதம் தழுவி வாழ்வதைக் காண்கிறோம். இந்தியா, சீனா, ஜப்பான், கம்போடியா, தாய்வான், வியட்னாம், மியன்மார் போன்ற நாடுகளில் புத்த மதத்தவர்கள் வாழ்கின்றனர். அவர்களால் மற்ற மதத்தவருக்கு எத்துன்பமும் இழைக்கப்படுவதில்லை. தத்தம் வழியிலே ஒவ்வொருவரும் தாம் போற்றும் சமயத்தைப் பின்பற்றிச் சந்தோஷமாக வாழ்கி
ன்றார்கள். நம் நாட்டிலும் இதுகாலவரை புத்த மதத்தவர்கள் முஸ்லிம்கள் மீது வசைமாரி பாடியதில்லை. மத சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்த வரலாறு பசுமையானது. ஆனால் தற்காலம் ஒரு சிறுகூட்டம் மட்டும் இல்லாத பொல்லாத விஷயங்களைச் சோடித்து முஸ்லிம் சமூகத்தின் மனதைப் புண்படுத்தி வருகின்றது. இது வேதனை தரும் சம்பவமே. பெரும்பான்மைச் சமூகத்தை முஸ்லிம்களாகிய நாம் பகைப்பதற்கில்லை.

நமது உண்மையான நிலவரத்தை, நமது நியாயங்களை எடுத்துக் கூறி அமைதியை நிலைநாட்டவே முயற்சிக்க வேண்டும். நமது தஃவா அமைப்புகளும், உலமாப் பெருமக்களும் விழிப்புணர்வோடு செயற்பட்டு கடும்போக்காளர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி: பள்ளிகளை இக்கடும் போக்காளர்கள் உடைப்பதற்கான காரணங்கள் எவையாக இருக்கும்?
பதில்: முஸ்லிம் பள்ளிகளில் நாளாந்தம் இறைவணக்கமே இடம்பெறுகிறது. அத்துடன் இஸ்லாமிய தத்துவங்கள், கொள்கைகள், சட்ட திட்டங்கள், நல்லொழுக்கம் போன்றவை போதிக்கப்படுகின்றன. மதரசாக்களில் புனித குர்ஆன் கற்பிக்கப்படுகிற்து. ஒழுக்க நெறிகளும் போதிக்கப்படுகின்றன. பெளத்தம், கிறிஸ்தவம் போன்ற பிற மதங்கள் பற்றியோ ஒரு வார்த்தையேனும் பேசப்படுவதில்லை. பேசவேண்டிய அவசியமுமில்லை. முழுக்க முழுக்க இஸ்லாம் பற்றிய பணிகளே இடம்பெறுகின்றன. ஆனால் இந்தக் கடும் போக்காளர்கள் பள்ளியில் நடைபெறும் பணிகளைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்.. பெளத்தத்துக்கெதிரான போதனை நடைபெறுவதாக கற்பனை பண்ணிக் கதை அளக்கிறார்கள்.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் வெறும் மனப்பிராந்தி கொண்டே பள்ளிகளை உடைத்தும், கபZகரம் செய்தும் தமது குரோத வெளிப்பாட்டைக் காட்டுகிறார்கள். குருநாகல் மாவட்டத்திலே இரண்டு பள்ளிகைகளை முற்றுகையிட்டனர். ஆரிய சிங்காவத்தைப்பள்ளி, தெதுறு ஓயா கடப்பள்ளிகளில் குழப்பம் விளைவிக்கப்பட்ட போது எனக்குத் தெரியவந்தது. நான் குருநாகல் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு சமாதானத்தை நிலைநாட்டினேன். தொழுகை அப்பள்ளிகளில் வழமைபோலவே நடைபெற்று வருகிறது. இதுபோன்று பல இடங்களில் பள்ளிகள் கபZகரம் செய்யப்பட்டன. இவற்றை நிறுத்த அரச தலையீடு முக்கியமானது. அரசாங்கம் விழிப்பாக இருந்தால் பிரச்சினைகளை தீர்க்க உதவும் அந்தந்தப் பிரதேசத்துக்குரிய முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம் தஃவா அமைப்புகள் உடன் செயல்பட்டு அரசின் உதவியுடன் இவற்றைத் தடுக்க முன்வரவேண்டும். குறிப்பாக ஜம் இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசாரத்திணைக்கள வக்பு சபை போன்றவை தமது கடமைகளுடன் இவ்வித பிரச்சினைகளையும் கவனித்து சமூக நலனை மேம்படுத்தலாம்.
கேள்வி: இஸ்லாமிய எதிர்ப்புப் பிரசாரம் எவ்வெவ்வகையாக நடைபெறுகின்றது என்று கூறுவீர்களா?
பதில்: கடும் போக்காளர்கள் பல வழிகளில் தமது பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்கள். துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், கேலிச்சித்திரங்கள் மூலம் தமது பொய்ப்பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். பாராளுமன்றில் கூட ஒரு ஐ.தே.க உறுப்பினர் இஸ்லாமிய ஷர்ஆ சட்டத்தை இழிவுபடுத்திப் பேசியபோது அங்கிருந்த இரண்டு மூன்று முஸ்லிம் எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினர்.
அந்தவேளை பாராளுமன்றத்திலிருந்த அனைத்து முஸ்லிம் எம்.பிக்களுமே எதிர்ப்புத் தெரிவித்து அந்தத் துவேஷப் பேச்சை வாபஸ் பெறச் செய்திருக்க வேண்டும். இஸ்லாமிய ஷரிஆ சட்டம் பற்றிய அறிவு கொஞ்சமும் இல்லாத காரணத்தினாலே அந்த எம்.பி இவ்வாறு பேசி இருக்கின்றார். இவ்வாறான தொடர்ச்சியான துவேஷக்கருத்துக்கள் தொடர்பில் ஜம் இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம் சட்ட அறிஞர்கள் கொண்ட தூதுக்குழு கடும் போக்காளர்களுக்கு இஸ்லாமியர்களின் வழிமுறைகளை விளக்கியுள்ளமை பாராட்டத்தக்கதே.
கடும் போக்காளர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களில் இடம்பெற்றுள்ள கருத்துகள் பாரதூரமானவை. 2090ஆம் ஆண்டில் இலங்கை முஸ்லிம் நாடாகிவிடும். திட்டமிட்டு முஸ்லிம்கள் தமது இனத்தைப் பெருக்குகின்றனர். நாட்டின் வர்த்தகத்தை முஸ்லிம்கள் கையில் எடுத்து கொள்ளை இலாபமீட்டுகின்றனர். என்றவாறாகப் பல ஆதாரமற்ற கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது துரதிஷ்டமானதாகும். மதரஸாக்களும் தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையே போதிக்கின்றன என்றவாறாக பல ஆதாரமற்ற கற்பனைக் கருத்துக்களை கடும் போக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.
கேள்வி: ஹலால் சான்றிதழ் பற்றி அண்மைக்காலமாக பேசப்பட்டு வருகின்றதே?
பதில்: ஹலால் அல்லாத உணவுகளை முஸ்லிம்கள் உண்பது மார்க்கப் படி தடை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு அவ்வாறான விதிகள் இல்லை. முஸ்லிம்கள் மார்க்கக் கட்டளைக்கமைவாக உணவைப் பெறவேண்டும் என்பதற்காகவே ஹலால் அத்தாட்சிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை அமுலில் வந்தது. இந்த முறையானது முஸ்லிம்களுக்கு மட்டும் அல்லாது மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் கருமமாகும். சுகாதார முறைப்படியான உணவை உண்டு தேகாரோக்கியமாக நாம் வாழ இவ்வத்தாட்சிப்பத்திரம் உதவுகிறது. இதைத் தவறாக விளங்கிக் கொண்ட கடும் போக்காளர்கள் அதையும் விமர்சிக்கின்றனர். ஹலால் அத்தாட்சிப் பத்திரம் மூலம் ஆண்டொன்றில் 100 கோடி ரூபாவை ஜம்இய்யதுல் உலமா வருமானமாகப் பெறுவதாகவும் இப்பணம்
இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் அப்பட்டமான பொய்யையும் புரளியையும் கிளப்பி முஸ்லிம்களின் மனதை உடைக்கிறார்கள். ஹலால் அத்தாட்சிப் பத்திரத்தின் அவசியம் பற்றி இந்தக் கடும் போக்காளர்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. நமது மார்க்க அறிஞர்கள் முன்வந்து அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியது அவசியமாகும்.
கேள்வி: பாராளுமன்ற உணவுச் சாலையில் பன்றி இறைச்சி வேண்டுமென்ற கோரிக்கை எவ்வாறு இருக்கின்றது?
பதில்: ஐ.தே.கட்சியைச் சேர்ந்த பிரபல ஆட்சிமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ரோசி சேனாநாயக்க, இருவருமே இந்த யோசனையை பாராளுமன்றில் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்கள் பன்றி இறைச்சியை உண்பதில்லையென்பது அவர்களுக்குத் தெரியாததல்ல. இருந்தபோதும் ஏதோ உள்நோக்கத்துடன் கூறப்பட்ட இந்த யோசனையை பாராளுமன்றத்தில் பிரசன்னமாயிருந்த ஓரிரண்டு முஸ்லிம் எம்.பிக்கள் எதிர்த்துக் கதைத்து மறுப்புத் தெரிவித்தமை பாராட்டுக்குரியதாகும். முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இதுவாகும்.
கேள்வி: இஸ்லாத்துக்கெதிரான இந்தக் கேவலமான நடவடிக்கைகளை எவ்வாறு தடுக்கலாம் என்று கூறுவீர்களா?
பதில்: பொது எதிரியைக் கட்டுப்படுத்த ஒற்றுமை வேண்டும். ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரன் என்ற நபிமொழியை நாம் மறந்து செயல்படுகின்றோம். முஸ்லிம்கள் மத்தியிலே பல பிளவுகள், பிரிவினைகள் உள்ளன. தப்லீக் ஜமா அத் என்றும் தெளஹீதுக் கூட்டம் என்றும் ஜமா அதே இஸ்லாமி என்றும் சிறுச்சிறு கொள்கை வேறுபாட்டால் அடிதடிப்பட்டு பொலிஸில் முறைப்பாடு, நடவடிக்கை வரை செல்கின்றோம். ஒரே மதத்தவர்கள் ஒருவரொடொருவர் அடிபடும் மார்க்கம் தேவையா என்று பிற மதத்தவர் கேட்கும் அளவுக்குப் புத்திசாதுரியமின்றிச் செயல்பட்டு சமூகத்தையும் மார்க்கத்தையும் இழிவுபடுத்துகின்றோம். ஒரே குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் முஸ்லிமாக இருந்தும் கொள்கை வேறுபாட்டால் கருத்துவேற்றுமைப்பட்டு பிரிந்து விடுவதுடன் குடும்பத்தில் நடக்கும் நன்மையான காரியங்கள் துக்ககரமான நிகழ்வுகளில் கூடப்பங்கு கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. இத்தகைய கொள்கை வேறுபாடுகளைப் பொருட்படுத்தாது வேற்றுமை களைந்து நமக்குள்ளே ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். நம்மிடையேயான ஒற்றுமை மூலம்தான் பொது எதிராளிகளைத் தோற்கடிக்க முடியும்.
கடும் போக்காளர்களின் கருத்துகளைக் கவனித்து அதனை முறியடிக்க அதனை விளக்கமளிக்க நமது மார்க்க அறிஞர்கள் தகைமை பெற வேண்டும். துறைபோன மார்க்க அறிவும் சரளமாகச் சிங்களத்தில் வேண்டிய கருத்துக்களை எடுத்துரைக்கும் ஆற்றலும் மெளலவிமாருக்கும் மார்க்க அறிஞர்களுக்கும் சமூகத் தலைவர்களுக் கும் இருக்க வேண்டும். நமது பாடசாலை களிலே மதரசாக்களிலே சிங்களம் திறம்படக் கற்பிக்கப்பட வேண்டும். தீகவாபி பிரச்சினையிலே மர்ஹும் அஷ்ரப் முத்தான கருத்துக்களை அழகிய சிங்கள மொழியில் எடுத்துரைத்தே மதத்தலைவர்களை வெற்றிகொண்டார்.
அத்தகைய தகைமை நமது சமூகத்தை வழிநடத்தும் அரசியல்வாதிகள், முஸ்லிம் தலைவர்கள், ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர்கள், மெளலவிமார் போன்ற அனைவருக்கும் தேவை. இஸ்லாம் பற்றிய உண்மை விளக்கங்களைக் கடும் போக்காளர்கள் புரிந்து கொண்டால இனவாதமும் பழிகளும் தாமாகவே மறையும் என எதிர்பார்க்கலாம்.
0 comments:
Post a Comment