பேச்சுவார்த்தைக்கான ஜனாதிபதியின் அழைப்பும் நிராகரிப்பு

சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் புதிய அரசியலமைப்புக்கு மக்கள் பெரும்பான்மை ஆதரவு வழங்கியதை அடுத்து அதனை சட்டமாக அங்கீகரிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி முர்சி தொலைக்காட்சியூடே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அதற்காக தேவைப்பட்டால் அமைச்சர வையிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
சர்ச்சையை கிளப்பிய புதிய அரசியலமைப்புக்கு 63.8 வீதமானோர் ஆதரவாக வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையத்தால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும் புதிய அரசியலமைப்பில் கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள எதிர்ப்பாளர்கள், பேச்சுவார்த்தைக்கான ஜனாதிபதியின் அழைப்பையும் நிராகரித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தை தற்போதைய பதற்ற நிலையை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே ஹொஸ்னி முபாரக். அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டத்தின் இரண்டாவது ஆண்டு பூர்த்தியடையும் தினமான ஜனவரி 25 ஆம் திகதி தலைநகர் கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பிரதான எதிர்த் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயின் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின் முதல் முறையாக உரையாற்றிய ஜனாதிபதி முர்சி, இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினம் என விபரித்தார். ஒரு ஆக்கிரமிப்பாளரோ, மன்னரோ அல்லது ஜனாதிபதியோ ஆதிக்கம் செலுத்த முடியாத வகையில் எகிப்துக்கு இப்போது சுதந்திரமான அரசியலமைப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதன் மூலம் எகிப்து பாதுகாப்பு மற்றும் ஸ்திரமான நிலையை நோக்கி முன் நகர்ந்திருப்பதாக முர்சி தெரிவித்தார். அத்துடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், அதற்காக முதலீட்டாளர்களை கவரும் திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
“எகிப்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எனது அனைத்து முயற்சிகளையும் செய்வேன். பொருளாதாரம் பாரிய சவாலை சந்தித்தாலும் அதில் முன்னேற்றம் காண சந்தர்ப்பம் உள்ளது. இந்த இலக்கை எட்ட தேவைப்படும் அனைத்து மாற்றங்களையும் மேற்கொள்வேன்” என்றும் முர்சி உறுதி அளித்தார்.
கடந்த புதன்கிழமை எகிப்து பவுன்ட், டொலருக்கு எதிராக எட்டு ஆண்டுகளில் பாரிய சரிவை எதிர்கொண்டது. இந்நிலையில் வரியை அதிகரித்து செலவுகளை குறைக்காத பட்சத்தில் எகிப்து அரசு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடுகளின் கடன் அந்தஸ்தை கண்காணிக்கும் ஸ்டான்டர் அன்ட் புவர்ஸ் நிறுவனம் எகிப்தின் நீண்டகால தர நிலையை ‘கி-’ ஆக குறைத்துள்ளது.
இதில் புதிய அரசியலமைப்புக்கு பலர் எதிராக வாக்களித்திருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக முர்சி குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டவர்கள் போன்றே அதனை நிராகரித்தவர்களையும் நான் வரவேற்கிறேன். இதன் மூலம் எகிப்து ஒரு கருத்தை கொண்ட யுகத்திற்கு மீளவும் திரும்பாது என்பதை உறுதி செய்கிறது. எனினும் கடந்த காலங்களில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு முர்சி கடும் கண்டனத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்க அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்துடன் தேசிய பேச்சுவார்த்தை ஒன்றுக்கு செல்ல வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
இதில் நிர்வாக ரீதியில் தவறுகள் செய்யப்பட்டிருந்தாலும் அவை தேசத்தின் நலனுக்கு அப்பால் தாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என மொஹமட் முர்சி வலியுறுத்தினார்.
ஜனாதிபதியின் உரை குறித்து கருத்து வெளியிட்ட எதிர்ப்பாளர்களின் கூட்டணியான தேசிய மீட்பு முன்னணியின் பேச்சாளர் ஹுஸைன் அப்துல் கானி, அரசு மதத்தின் பேரால் கொடுங்கோலாட்சியை நிறுவ முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். “இந்த உரையில் பொடுபோக்குத் தனமின்மை மிகக் குறைவாகவே இருந்தது” என்று அப்துல் கானி குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் 52 மில்லியன் வாக்காளர்களில் 32.9 வீதமானோரே தமது வாக்குகளை அளித்திருந்தனர். உத்தியோகபூர்வ முடிவு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டி ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்த அரசியலமைப்பு கடும்போக்கு இஸ்லாமிய சட்டங்களை கொண்டது என்றும் பெண்கள் அல்லது கிறிஸ்தவர்களின் உரிமையை பாதுகாக்க வில்லை என்றும் எதிர்ப்பாளர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய அரசியலமைப்புக்கு எதிராக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பிரசாரம் நடத்த எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் எகிப்தின் பதற்ற நிலை தொடர்ந்தும் நீடிக்கும் அபாயம் உள்ளது.
0 comments:
Post a Comment