Banner 468 x 60px

 

Monday, January 21, 2013

சிரியாவில் இராணுவம் அட்டகாசம்: 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

0 comments

syriசிரியாவின் ஹோம்ஸ் நகரில் 100 க்கும் அதிகமான அப்பாவிகளை இராணுவத்தினர் கொடூரமான முறையில் படுகொலை செய்திருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்துகின்றனர்.
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் 100 க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களை இராணுவத்தினர் படுகொலை செய்திருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
அந்த அமைப்பு மேலும் கூறியிருப்பதாவது, சிரியாவின் ஹோம்ஸ் நகரம் மற்றும் அதை ஒட்டியுள்ள பசாடின் அல் ஹசாவியா என்ற கிராமத்தில் இராணுவத்தினர் கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
சரமாரியாக குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பல அப்பாவி மக்கள் பலியாயினர். அது மட்டுமின்றி, வீடு புகுந்து பலரை கத்தியால் குத்தியும் உயிரோடு கொளுத்தியும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 106 பேர் பலியாகிவிட்டனர் என்றும் ஹோம்ஸ் மட்டுமின்றி டெரா, ஹமா, அலீபோ, டமாஸ்கஸ் உட்பட பல நகரங்களிலும் அப்பாவிகளை குறிவைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அலீபோ பல்கலைக்கழகத்தில் கடந்த 15 ஆம் திகதி மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் சக்திவாய்ந்த 2 குண்டுகள் வெடித்து சிதறின.
85 க்கும் அதிகமானோர் உடல் சிதறி பலியாயினர். இராணுவம் தாக்குதல் நடத்தியதாக போராட்ட அமைப்பினர் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் ராக்கெட் குண்டுகளை வீசியதாக இராணுவம் கூறியது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment