Banner 468 x 60px

 

Monday, January 7, 2013

சிரிய ஜனாதிபதி அஸாத் தொலைக்காட்சியில் நேரடி உரை கிளர்ச்சியாளர்களை மேற்கின் பொம்மைகளென விமர்சனம்

0 comments


சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தனது முதலாவது நேரடி தொலைக்காட்சி உரையில் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் ‘கடவுளின் எதிரிகள் என்றும் மேற்கின் பொம்மைகள் என்றும்’ விமர்சித்துள்ளார்.
இதில் சிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் குறித்து தமது கவலையை வெளியிட்ட அசாத் ‘கறும்புகை’ அனைத்துப் பக்கங்களையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இதன்போது தீர்வு குறித்து தேசிய அளவிலான பேச்சுவார்த்தைக்கான மாநாடொன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் மக்கள் கருத்துக் கணிப்பை பெற திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த 2011 மார்ச் மாதம் ஆரம்பமான மக்கள் எழுச்சி போராட்டம் காரணமாக சிரியாவில் இதுவரை 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ. நா. கணித்துள்ளது.
இந்நிலையில் பஷர் அல் அஸாத் கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னரே நேற்றைய தினம் முதல் முறையாக மக்கள் முன் நேரடியாக உரையாற்றினார். இதில் அவர் சிரிய எதிர்ப்பாளர் முன்னணியை முற்றாக நிராகரித்தார். அது மேற்கு நாடுகளால் தயாரிக்கப்பட்ட பொம்மை என அவர் கூறினார். எனவே சிரியா பணியாளனுடனல்ல எஜமானனுடனேயே பேச்சுவார்த்தை நடத்தும் என குறிப்பிட்டார்.
மத்திய டமஸ்கஸில் இருக்கு ஒபரா கூடத்திலேயே பஷர் அல் அஸாத் உரையாற்றினார். அவரது உரைக்கு மத்தியில் அங்கு கூடியிருந்த அஸாத் ஆதரவாளர்கள் கரகோசம் எழுப்பினர்.
எதிர்ப்பாளர்கள் தமக்கு எதிராகவே செயற்படுவதாகவும் புரட்சியை நோக்கியல்ல என்றும் அசாத் சுட்டிக்காட்டினார். ‘புரட்சிக்கான கருத்தை முன்வைக்கும் சிந்தனையாளர்கள் தேவை. அதற்கு ஒரு தலைமை தேவை. இந்த புரட்சிக்கு யார் தலைமை வகிக்கிறார்?’ என்று அசாத் கேள்வி எழுப்பினார்.
கிளர்ச்சியாளர்கள் மக்களின் கோதுமையை திருடுகிறார்கள், பாடசாலைகளிலிருந்து குழந்தைகளை காவுகிறார்கள். மின் விநியோகத்தை, மருத்துவ விநியோகத்தை துண்டித்துள் ளார்கள் என்றும் பஷர் அல் அஸாத் கிளர்ச்சியாளர்கள் மீது குற்றம் சாட்டினார். ‘சிரிய நிலங்கள் ஒடுக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்று கூறிய பஷர் அல் அஸாத் நாடெங்கும் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை குலைந்துவிட்டது என்றார். எனவே அனைத்து பிரஜைகளும் நாட்டை பாதுகாக்க முன்வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
‘தேசம் அனைவருக்கும் சொந்தமானது எனவே அதனை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்’ என்று அஸாத் குறிப்பிட்டார். இதில் அடுத்தவர்களின் உதவிக்காக காத்திருப்பது நாட்டை மேலும் மோசமான நிலைக்கே இட்டுச் செல்லும் என அவர் வலியுறுத்தினார்.
அஸாத் தனது உரையில் சிரியாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து தீர்வை எட்டுவதற்கு யோசனைகளை முன்வைத்தார்.
* வெளிநாட்டு சக்திகள் தீவிரவாத குழுக்களுக்கு (கிளர்ச்சியாளர்கள்) ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
* இதனைத் தொடர்ந்து இராணுவம் தனது யுத்த நடவடிக்கையை முடித்துக்கொண்டு தேசத்தை பாதுகாக்கும் பணியை முன்னெடுக்கும்.
* இதனையடுத்து அரசு சிரிய தனிநபர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து தேசிய அளவில் பேச்சுவார்த்தைக்கான மாநாட்டை நடத்தும்.
* இந்த மாநாட்டின் மூலம் தேசிய தீர்வொன்று எட்டப்பட்டு அது மக்கள் கருத்துக் கணிப்புக்கு விடப்படும் என்பதோடு புதிய பாராளுமன்றம் மற்றும் புது அரசு அமைக்கப்படும்.
பஷர் அல் அஸாத் கடைசியாக கடந்த நவம்பரில் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அதில் தாம் ‘வாழ்வதும் இறப்பதும் சிரிய மண்ணில்தான்’ என்று வலியுறுத்தி இருந்தார். எனினும் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்கள் உள்நாடில் தொடர்ந்தும் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். அவர்கள் நாட்டின் வட பகுதியின் பெரும்பா லான நிலத்தை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சிரிய கிளர்ச்சியாளர்களின் தேசிய எதிர்ப்பாளர் கவுன்சிலுக்கு பிராந்திய நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் மிகப்பெரிய நகரங்களில் முன்னேற்றம் காண்பதில் கிளர்ச்சியா ளர்கள் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர். எனினும் தலைநகர் டமஸ்கஸிலும் கிளர்ச்சியா ளர்கள் அரச படைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சிரியாவில் தொடரும் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் இராஜதந்திர முயற்சிகள் அனைத்தும் தோல்வியி லேயே முடிந்துள்ளன. ஐ. நா. மற்றும் அரபு லீக்கின் சிரியாவுக்கான விசேட தூதுவர் லக்தர் பிராஹிமி கடந்த ஜூனில் சிரியாவில் இடைக்கால அரசொன்றை அமைக்க முற்பட்டார். எனினும் அதில் ஜனாதிபதி அஸாத்தின் பங்கு குறித்து தெளிவு பெறப்படாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. எனினும் மோதலை முடிவுக்கு கொண்டுவர அஸாத் பதவி விலக வேண்டும் என எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

0 comments:

Post a Comment