
எங்கு பார்த்தாலும் கொலைகள், கொள்ளைகள், ஏமாற்றுதல், மோசடி, இலட்சியம் இல்லாத வாழ்க்கை முறை, போகத்துக்கு மட்டுமே பாவிக்கப்படும் பண்டமாகிய பெண், அரை நிர்வாணம், முழு நிர்வாணம் என்பதுவே நாகரிகம் என வாழ்வொழுன்கே சீரழிந்து போயிருந்த காலப்பகுதியிலே "பண்பாடுகளை பூரணப் படுத்தவே நான் அனுப்பப்பட்டேன்' என்ற மகுடத்துடன் ஒரு வழிகாட்டி உலகில் பிறப்பெடுக்கிறார்.
உலகுக்கே பண்பாட்டை எடுத்துக் காட்டி, வாழ்க்கையின் இலக்கை கற்றுத் தந்து, இழி நிலையிலிருந்த மனிதனை மாமனிதனாக வடிவமைத்துக் காட்டிய அந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களை ஞாபகப் படுத்துகின்ற காலப்பகுதியில் அவர் கற்றுத் தந்த பண்பாடுகளை அடுத்தவர்களுக்கு எத்தி வைப்பதில் நாம் எவ்வளவு தூரம் சாதித்திருக்கின்றோம்?
ரபீஉல் அவ்வல் பன்னிரண்டாம் நாள், சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட எமது தாயகத்தில் தேசிய விடுமுறை நாள். இலங்கையின் விடுமுறைகளில் எல்லா மதத் தலைவர்களினதும் பிறந்த தினத்தை விடுமுறையாகக் கணிப்பிடுவது என்ற தீர்மானத்தின் படி இயேசு நாதர் பிறந்த தினம் (நத்தார்), புத்தர் பிறந்த தினம் (வெசாக்), முஹம்மத் நபி பிறந்த தினம் (மீலாத்) என விடுமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
நத்தார் காலத்தில் மாதம் முழுவதும் முழு நாடுமே கிறிஸ்தவ மயமானதுபோல இயேசு நாதரும் கிறிஸ்தவ மதமும் எல்லா ஊடகங்களையும் ஆட்கொள்கின்றன.
வெசாக் காலங்களிலே புத்தரின் பண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்ற நிகழ்வுகளும் அவரது வரலாற்றை காட்சிப் படுத்தும் தொரனங்களுமாக நாட்டில் பௌத்தம் மிகைத்து விடுகிறது.
இந்த நிலையில் உலகுக்கே வழிகாட்டியாக வந்த நபிகளாரின் தேசிய விடுமுறையை பயன்படுத்துவதா கூடாதா என்ற சர்ச்சையில் முஸ்லிம்கள் மட்டும் வாய்ப்புக்களை தவற விட்டுக்கொண்டிருப்பது அறிவு பூர்வமானதாகத் தெரியவில்லை.
முஹர்ரத்திலே ஹிஜ்ரத்தையும் ரஜபிலே மிஃராஜையும் நினைவு படுத்துகிறோம். அல்குர்ஆன் இறங்கிய ரமலானில் முழு மாதத்திலும் குர்ஆனைப் பற்றிப் பேசுகிறோம். அதனுடனான நெருக்கத்தை அதிகரிக்கிறோம். அதனை ஓதவும் விளங்கவும் நடைமுறைப்படுத்தவும் அறைகூவல் விடுக்கின்றோம். ரபீஉல் அவ்வலின் முழு மாதத்திலும் ரசூலுல்லாவைப் பற்றிப் பேச, நெருக்கமாக ஏன் பின்னிட்கின்றோம் என்பதன் அர்த்தம் பிடிபடுவதில்லை.
மீலாத் விழா கொண்டாடலாமா? குறித்த தினம் நபிகளாரின் பிறந்த தினமா? அரபு நாடுகளில் இந்தப் பழக்கம் இருக்கின்றதா? என்ற சர்ச்சைகளை விட்டு விட்டு, நமக்கென ஒதுக்கப்பட்டுள்ள இந்தத் தினத்தை மாற்று மதத்தினருக்கு சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்திப்பதே விவேகமானவர்களின் வழியாக இருக்க முடியும்.
குறித்த தினத்தில் தான் நபியவர்கள் ஞாபகப் படுத்தப்பட வேண்டுமா? என்ற கேள்விகளை விட்டு, குறித்த தினத்தில் நபியவர்களை ஞாபகப்படுத்துவை ஏன் மறுக்கின்றோம் என்பதற்கு நாம் விடை காண வேண்டும்.
ஏனைய தினங்களில் நபியவர்களை ஞாபகப்படுத்துவது மதம் சார்ந்த நிகழ்வாகக் கருதப்பட்டாலும், குறித்த தினத்தில் நபியவர்களை ஞாபகப்படுத்த நாம் எதைச் செய்தாலும் அது தேசிய அங்கீகாரம் பெரும் நிலையில் நாம் ஏன் இந்த வாய்ப்பை புறந்தள்ளி விடுகிறோம்? என்பதில் திருப்தியான விடை காண வேண்டும்.
நபியவர்களுக்கு எதிரான நிகழ்வுகளினால் உந்தப்பட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்க முன்னர், நபியவர்கள் மீது அடுத்தவர்களும் ஆதரவு வைக்கக் கூடிய வகையிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நாங்கள் இந்த நாட்களை பயன்படுத்தியிருக்க வேண்டும்.
பாரம்பரிய வழிமுறைகளுக்கு அப்பாலும் சென்று நவீன பரம்பரைக்குப் பரிச்சயமான வழிமுறைகளைப் பாவித்து நாம் இதனை முன்னெடுத்திருக்க வேண்டும்.
நம்மைப்பற்றிய நியாயங்களை எடுத்துச் சொல்வதற்கான மற்றுமொரு அரிய வாய்ப்புத்தான் சுதந்திர தினம். றசூலுல்லாவைப் பற்றி எடுத்துச் சொல்வது எப்படிப் போனாலும் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதில் ஜம்மியத்துல் உலமா பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இது பல்லின மக்கள் வாழும் ஜனநாயக சோசலிசக் குடியரசு என்பதையும் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு எமக்கிருப்பதையும் அழுத்திச் சொல்லும் தருணமாக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
நாட்டை ஆக்கிரமித்துச் சுரண்டும் நோக்கில் நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க வந்தவர்கள் அல்ல நாங்கள் என்பதையும், பிரிவினைவாத யுத்தமோ நாட்டுக்கு எதிரான கிளர்ச்சிகளோ செய்யாத தூய இலங்கையர்கள் நாங்கள் என்பதை உரத்துச் சொல்ல வேண்டும்.
சுதந்திரத்துக்கு பாடுபட்ட முஸ்லிம்களை நினைவு படுத்துவதோடு சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கைக்கு முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் செய்துவரும் பங்களிப்பினை கட்டாயமாக ஞாபகப்படுத்த வேண்டும்.
இந்த விடயத்தில் முஸ்லிம் நாடுகளின் தூதுவராலயங்களிளிருந்து தரவுகளை பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக தீவிரக் குழுக்கலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்கள் தமது தேச உணர்வை வெளிப்படுத்திக் கொள்ள இந்த சுதந்திர தினத்தைப் பயன்படுத்த முயல வேண்டும்.
ஒவ்வொரு பிரதேசத்திலும் தேசத்துக்கு தொண்டாற்றிய கல்விமான்கள், வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்கள், இரானுவ வீரர்கள் வெளிச்சத்துக் கொண்டுவரப்படும் தருணமாக இதனை நாங்கள் பயன்படுத்த வேண்டும்.
இந்த எல்லா நிகழ்வுகளிலும் பெரும்பான்மை இனத்தவரையும் இப்தாரில் கலந்து கொள்ளச் செய்தது போல பங்குபற்ற வைக்க வேண்டும்.
இந்த நாட்டை வளப்படுத்துவதில் முஸ்லிம்கள் இன்றியமையாதவர்கள் என்ற உணர்வை நாங்கள் கொடுக்க முடியுமாக இருந்தால் இம்முறைய சுதந்திர தினம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
அல்லாஹ் அருள் புரிவானாக.
0 comments:
Post a Comment