
போஷாக்கின்மையால் இறப்பவர்களைவிட, உடல்பருமனால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களையும், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை ஏற்படுத்திய காரணங்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் உடற்பருமன் காரணமாக 2010ஆம் ஆண்டில் 30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
போஷாக்கின்மை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக காணப்படுகிறது.
உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுவதும் உடல் உழைப்பு குறைவதுமே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
இதேவேளை உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என்றாலும், அவர்கள் நோய்வாய்ப்படுகின்ற அளவு அதிகரித்துள்ளது என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மக்களிடையே நோயின் தாக்கங்கள் பற்றி உலக அளவில் இதுவரை இல்லாத பாரிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் த லான்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியிருக்கின்றன.
ஐந்து வருடகாலம் வேலைசெய்து தரவுகளை எல்லாம் ஒருங்கிணைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு 500 ஆராய்ச்சியாளர்கள் பங்களிப்பு செய்துள்ளனர்.
கூடிய இரத்த அழுத்தம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை உடல்நலப் பாதிப்புகளின் மிகப் பெரிய காரணியாக உருவெடுத்துள்ளன என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
2010 நிகழ்ந்த இறப்புகளில் 4/1ற்கு காரணமாய் இருதயக் கோளாறும், மூளையில் இரத்தக்கசிவும் இருந்துள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது. அந்த ஆண்டில் மொத்தம் ஒரு கோடியே 30 லட்சம் இறப்புகளுக்கு அந்நோய்கள் காரணமாக அமைந்துள்ளன.
மக்களின் ஆயுட்காலம் பரவலாகப் பல நாடுகளிலும் அதிகரித்துள்ளது என்றாலும், சராசரி ஆயுட்கால வயதில் செல்வந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி என்னவோ குறையவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
தவிர எய்ட்ஸ் நோயும் உயிரிழப்புகளுக்கான பெரிய காரணங்களுல் ஒன்றாக இருக்கிறது. 2010ஆம் ஆண்டு மொத்தம் 15 லட்சம் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.
இறப்புகளை ஏற்படுத்திய காரணங்களின் வரிசைப் பட்டியலில் நீரிழிவு நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் முன்னிலைப் பெற்றுள்ளன.
_bbc_
_bbc_
0 comments:
Post a Comment