Banner 468 x 60px

 

Tuesday, January 22, 2013

இஸ்ரேல் பொதுத் தேர்தல் இன்று: நெதன்யாகுவின் கடும்போக்கு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு

0 comments

பலஸ்தீன விவகாரத்தில் மேலும் நெருக்கடி
ஈரானின் அணு செயற்பாடு, தடைப்பட்டுள்ள பலஸ்தீனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை, பிராந்திய நாடுகளில் பாதகமான ஆட்சி மாற்றம் என கடும் சவாலுக்கு முகம்கொடுக்கும் இஸ்ரேலில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆட்சியில் இருந்த பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் கூட்டு அரசு 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையிலேயே கடந்த ஆண்டு இறுதியில் கலைக்கப்பட்ட இஸ்ரேல் பாராளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இஸ்ரேல் தேர்தலை ஒட்டி கடந்த ஒரு சில மாதங்களில் அங்கு பலஸ்தீனத்திற்கு எதிரான ஒடுக்குமுறை சம்பவங்களும் பதிவாயின.
குறிப்பாக மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலின் சட்டவிரோத யூதக் குடியிருப்பு திட்டங்கள் அதிகரிக்கப்பட்டன. கடந்த நவம்பரில் காசாவுக்கு எதிரான இஸ்ரேலின் ஒருவார தாக்குதலில் 170க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் ஈரானின் அணு செயற்பாட்டுக்கு எதிராக இஸ்ரேலின் கடுமையான அறிக்கைகளும் தேர்தலையொட்டியே வெளியானது.
முன்னாள் உஸ்மானிய சாம்ராஜ்யத்திலிருந்து பிரிக்கப்பட்ட பலஸ்தீனில் இஸ்ரேல் உருவாகி 64 ஆண்டுகள்தான் ஆகின்றது. இந்த குறுகிய காலத்திற்குள் அயல் நாடுகளின் எதிர்ப்பையும் பல யுத்தங்களையும் சந்தித்த இஸ்ரேல் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்தும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. தனது அயல்நாடுகள் இஸ்ரேலை ஒரு தேசமாகவே அங்கீகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1948ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டன் துருப்புகள் வெளியேறியதையடுத்து இஸ்ரேல் சுதந்திர பிரகடனம் மேற்கொண்டது. இதன்போது இஸ்ரேல் 8 மாதங்கள் அரபு நாடுகளுடன் பாரிய யுத்தத்தை எதிர்கொண்டது. தவிர 1967 மற்றும் 1973 ஆம் ஆணடுகளிலும் பாரிய யுத்தத்தை எதிர்கொண்டது.
இதில் 1967 ஆம் ஆண்டு இடம்பெற்ற 6 நாள் யுத்தத்தின் போது இஸ்ரேல் கிழக்கு ஜெரூசலத்திலிருந்து ஜோர்தான் வரை ஆக்கிரமித்தது. அதேபோன்று சிரியாவின் கோலன் ஹைட் பகுதியையும் ஆக்கிரமித்து 1981 ஆம் ஆண்டுவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
அத்துடன் இஸ்ரேல் தனது நாட்டின் தலைநகராக ஜெரூசலத்தை அறிவித்த போதும் அதனை சர்வதேச சமூகம் ஏற்கவில்லை. அனைத்து வெளிநாடுகளும் தனது தூதரகத்தை டெல் அவிவிலேயே வைத்துள்ளது.
நெதன்யாகுவுக்கு வெற்றி வாய்ப்பு
கெனசட் என்று அழைக்கப்படும் இஸ்ரேல் பாராளுமன்றத்தின் 120 ஆசனங்களுக்காகவே இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் 38 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. குடியேற்ற வாசிகளை அதிக பெரும்பான்மையாகக் கொண்ட இஸ்ரேலின் சனத் தொகை 7.93 மில்லியனாகும். இதில் 75. 4 வீதமானவர்கள் யூதர்கள் என்பதோடு 20.6 வீதமானவர்கள் அரபிகளாவர். கடந்த 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் 3.2 மில்லியன் பேர் இஸ்ரேலில் குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் யூதர்களுக்கும் இஸ்ரேலில் குடியுரிமை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இஸ்ரேல் பொது தேர்தலில் எந்த ஒரு கட்சியும் தனித்துப் பெரும்பான்மை பெற வாய்ப்பு இல்லை. பல கட்சிகள் சேர்ந்த கூட்டணிகளே அங்கு ஆட்சி நடத்தி வருகிறது. எனவே இன்றைய தேர்தலில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சி, முன்னாள் வெளியுறவு அமைச்சரான அலிக் டொர்லைபர்மனின் கடும் போக்கு தேசியவாத கட்சியான யிஸ்ராயெல் பெய்ட்னும்வுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுகிறது. பலஸ்தீன் தேசத்தை நிராகரிக்கும் இந்தக் கூட்டணி பலஸ்தீனம் முன்னிபந்தனையற்ற அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்துகிறது.
இந்நிலையில் இன்றைய தேர்தலில் நெதன்யாகுவின் கூட்டணி எந்த சவாலும் இன்றி அதிக ஆசனங்களை வெல்லும் என கருத்து கணிப்புகள் குறிப்பிடுகின்றன. அத்துடன் தற்போதைய அரசை விடவும் பலமான அரசை நெதன்யாகு அமைக்க வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
இதில் எதிர்க்கட்சியான லேபவ்ர் கடந்த காலங்களில் கடும் பின்னடைவை சந்தித்த நிலையிலேயே இன்றைய தேர்தலை எதிர்கொள்கிறது. லெபவ்ர் கட்சியின் தலைவர் எஹுட் பராக் ஓய்வு பெற்றுள்ள நிலையில் சமுக நீதிக் கொள்கையுடன் ஷெல் யெச்சிமோவிச் தலைமையில் லேபவ்ர் கட்சி களத்தில் குதித்துள்ளது. இந்தக்கட்சி கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் 13 ஆசனங்களையே வென்றதோடு அதுவே 2011 தேர்தலில் 8 ஆக வீழ்ச்சி கண்டது. எனினும் லேபவ்ர் இந்த தேர்தலில் 17 ஆசனங்களை செல்லும் என கருத்து கணிப்புகள் குறிப்பிடுகின்றன.
அதற்கு அடுத்து மூன்றாவது வலுவான கட்சியாக உள்ள ஜுவிஷ் ஹோம் கட்சி கடும்போக்கு தேசியவாத மற்றும் மதக் கொள்கை கொண்ட கட்சியாகும். இது பலஸ்தீன தேசத்தை நிராகரிப்பதோடு மேற்குக் கரையில் 60 வீத யூத குடியேற்றங்களை நிறுவ வலியுறுத்தி வருகிறது.
இதுதவிர இஸ்ரேல் பொதுத் தேர்தலில் இஸ்ரேல் அரபிகள் மற்றும் பலஸ்தீன கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சிகள் நீண்டகாலமாக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருந்தபோதும் அவை அரசுடன் ஒருபோதும் கூட்டுச் சேர்ந்ததில்லை. இதில் இஸ்ரேல் பாராளுமன்றத்திற்கு தேர்வான முதல் பலஸ்தீன பெண்ணான ஹனின் சொஹாபியும் இன்றைய தேர்தலில் போட்டியிடுகிறார்.
“இஸ்ரேல் தம்மை ஒரு யூத தேசமாகவே அடையாளப்படுத்துகிறது. அது அனைத்து பிரஜைகளுக்குமான தேசம் அல்ல. இஸ்ரேல் யூதர்களை உயர்வானவர்களாகவும் அரபிகளை தாழ்ந்தவர்களாகவும் கருதும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. அவர்கள் அரபிகளின் நிலம், சுகாதார பராமரிப்பு, பொருளாதார உரிமை ஏன் அடையாளத்தைக் கூட மறுத்து வருகிறது” என்று சொஹாபி சி. என். என். தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டார். “இஸ்ரேல் என்னை பலஸ்தீனியனாக ஏற்பதில்லை. இஸ்ரேல் என்னை அரபு இஸ்ரேலியராகப் பார்க்கிறது. அது எனக்கே என்னவென்று புரியவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாக்காளருக்கு ஈரானின் கவனம் குறைவு
இஸ்ரேல் பொதுத் தேர்தலில் ஈரானின் அணு செயற்பாடு அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் ஈரான் தொடர்பான பென்ஜமின் நெதன்யாகுவின் நிலைப்பாடு தேர்தல் முடிவில் அதிக பாதிப்பு செலுத்தும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஈரான் அணு ஆயுத நாடாவதை தடுக்க அதன்மீது தன்னிச்சையான யுத்தத்தை முன்னெடுக்க நெதன்யாகு தயாராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தேர்தலில் கவனத்தை ஈர்க்கும் விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் இஸ்ரேலின் பெரும்பான்மையானோர் ஈரான் விவகாரத்தை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. இஸ்ரேலின் ‘ஹரட்ஸ்’ நாளிதழ் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் ஈரானின் அணு செயற்பாடு இஸ்ரேலுக்கு மிக முக்கியமானது என்று 10 வீதமான இஸ்ரேலியர்களே வாக்களித்துள்ளனர்.
எனினும் அதிகபட்சமான 47 வீதமான இஸ்ரேலியர் நாட்டின் சமூக, பொருளாதார விடயத்திலே முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளனர். தவிர, 18 வீதமானவர்கள் பலஸ்தீனத்துடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் பென்ஜமின் நெதன்யாகு தனது தேர்தல் பிரசாரத்தில் சர்வதேச உறவு, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் ஈரானின் அணு செயற்பாட்டுக்கே முன்னுரிமை அளித்துள்ளார். அவரது தொலைக்காட்சி விளம்பரத்தில் வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக உலக நாடுகளுடன் இணைந்து செயற்படுவதாக கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இஸ்ரேல் அண்மைக்காலமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. 2012 ஆம் ஆண்டில் இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.3 ஆக மந்தமடைந்துள்ளது. அதே போன்று அதன் பற்றாக்குறை 4.2 வீதமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் அரசு கடந்த ஆண்டு சிக்கன நடவடிக்கையை அறிமுகப்படுத்தியதால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களும் இடம்பெற்றன. எனவே இன்றைய தேர்தலில் இந்த விவகாரங்களும் பாதிப்புச் செலுத்த வாய்ப்பு உள்ளது.
பலஸ்தீன நிலைப்பாடு
இஸ்ரேல் தேர்தல் பலஸ்தீனத்தின் தலைவிதியிலும் கடும் பாதிப்பைச் செலுத்தக்கூடியதாகும். இதில் பென்ஜமின் நெதன்யாகுவின் கூட்டணி தற்போதை விடவும் பலமான நிலையில் ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பலஸ்தீனத்திற்கு பெரும் பாதகமாக அமையும் என அவதானிகள் குறிப்பிடுகின்றனர். ஏற்கனவே மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் சட்டவிரோத குடியேற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் புதிய அரசு இந்த செயற்பாட்டை மேலும் துரிதப்படுத்த வாய்ப்பு உள்ளது.
“எவரும் இஸ்ரேல் பற்றி பேசுவதில்லை” என விமர்சித்த பலஸ்தீன விடுதலை அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஹனான் அஷ்ராவி, “பலஸ்தீனத்தின் அமைதி கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இஸ்ரேல் வாக்குப் பெட்டிகள் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும்” என்றார்.
இதில் பென்ஜமின் நெதன்யாகுவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள கடும்போக்கு தேசியவாதக் கட்சியான யிஸ்ராயில் ரெய்ட்னு பலஸ்தீன தேசத்தை முற்றாக நிராகரிக்கிறது.
“இஸ்ரேல் தேர்தல் மேலும் சட்டவிரோத குடியிருப்புகளுடனும் பலஸ்தீன வெளியேற்றங்கள், பலஸ்தீனர்களின் இரத்த கறையுடனேயே நடைபெறுகிறது” என்று காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர் பவ்சி பர்ஹும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment