
தாராளவாதிகளாக இருக்க வேண்டுமாயின், ஜனநாயகவாதிகளாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆயினும், ஜநாயக விரோதிகள் எகிப்தில் தம்மை தாராளவாதிகளாகக் காட்டிக் கொள்வதுதான் மிகப் பெரும் வினோதமாகும்.
சமீபத்திய எகிப்தின் அரசியல் சூழமைவுகளை நோக்கும்போது தாராளவாதிகளின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மிகவும் குரூரமானது என்பதைப் புரியலாம். உச்ச நீதிமன்றத்திலும் ஆயுதப் படையிலும் அமர்ந்திருக்கின்ற முபாரக்கின் அடிவருடிகள் தொடர்ந்தும் எகிப்தின் புதிய ஜனநாயக அரசாங்கத்தைப் புரட்டிப் போடுவதற்கு எல்லா வகையிலும் எத்தனித்து வருகின்றனர்.
ஜனநாயகம் வந்துவிடுமாயின், அது தமது அரசியல் சூதாட்டங்களுக்கு விடுக்கப்படும் அச்சறுத்தல் என்பதை அவர்கள் நன்கு புரிந்துவைத்துள்ளனர். எனவேதான் அவர்கள் தம்மை தாராளவாதிகள் எனக் காட்டிக் கொண்டே ஜனநாயகத்தைப் புதைப்பதற்கு முயல்கின்றனர்.
இஸ்லாமியவாதிகளால் வழி நடாத்தப்படும் பாராளுமன்றத்தை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அறிவிலிகள் அல்ல, மிகவும் அசமந்தமானவர்களும் அல்ல. அவர்களின் இந்நிலையைப் பார்க்கும்போது, ஒன்றில் அதிகார வெறியுள்ள வஞ்சகர்களாக அவர்கள் இருக்க வேண்டும் அல்லது வெளியிலுள்ள சக்திகளின் முகவர்களாக இருக்க வேண்டும். இதற்கு அப்பால் எகிப்தில் தாராளவாதிகளை நாம் காண முடியாது.
அதிகாரத்திற்கு வந்துள்ள இஸ்லாமியவாதிகள், முற்றிலும் ஜனநாயக வழிமுறைகளைத்தான் கையாள்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களின் ஜனநாயகப் பயணம்; நீடித்த அதிகாரத்திற்கான உத்தரவாதம் என்பதைப் புரிந்து வைத்துள்ள இத்தாராளவாதிகள், அரசாங்கத்தை ஆட்டங் காணச் செய்வதற்கு எல்லா முனைகளிலும் செயல்படுகின்றனர். வெளியிலிருந்து வரும் வகை தொகையற்ற பணமும் அவர்களுக்குத் துணை செய்கின்றது.
அமெரிக்கத் தூதுவர் இவர்களோடு அடிக்கடி நடத்தும் சந்திப்பில், கணக்கற்ற டொலர்கள் இவர்களுக்கு வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. அறபு நாடுகளிலிருந்தும் பெருந்தொகைப் பணம் இவர்களுக்குக் கிடைக்கின்றது. வளைகுடாவில் உள்ள 12 முக்கிய ஒளி/ஒலிபரப்பு நிலையங்களை சமீபத்தில் ஒரு அறேபியர் விலைக்கு வாங்கினார். அந்தப் 12 நிலையங்களும் முர்ஸியைப் பதவி கவிழ்ப்பதற்கு முழு அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
அம்ர் மூஸா, முஹம்மத் பராதி போன்ற லிபரல்வாதிகள் மிகக் கவர்ச்சியான ஜனநாயக சுலோகங்களோடுதான் களத்தில் இறங்கினர். ஆனால், அவர்களின் முகமூடிகளுக்குப் பின்னால் மிக மோசமான அரசியல் உள்ளது. எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு இவர்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. எகிப்திலுள்ள மிகக் குறைந்தபட்ச ஜனநாயக விரோதிகளுடன் இணைந்து தொடர்ந்தும் சதித்திட்டங்களை இவர்கள் வகுக்கக் கூடும். சவூதி அறேபியா, ஐக்கிய அறபு எமிரேட்ஸ் போன்ற அரசுகள் உள்ளிட்டு வொஷிங்டன், டெல்அவிவ் என்பனவும் இவர்களுக்குப் பின்னாலிருந்து உதவுகின்றன. ஆனால், அரசியலமைப்பு மீதான மக்கள் வாக்கெடுப்பு இவர்களுக்கு நல்ல பாடத்தைப் புகட்டியுள்ளது.
முழு எகிப்தியர்களின் பொதுப் புத்தியிலும் இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பின் தாக்கம் கனதியானது என்பதை இவர்கள் அறிவார்கள். இதில் அம்ர் மூஸா எகிப்தின் ஆறாவது பிர்அவ்ன் முபாரக்கின் வெளி நாட்டமைச்சராக இருந்தவர். டெல்அவிவ் வட்டாரங்களின் நெருங்கிய நண்பர்.
சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முஹம்மத் அல் பராதி, எகிப்து குறித்த குறைந்தபட்ச அரசியல் அறிவும் இல்லாதவர். இவருக்கு எகிப்தின் பிரஜா உரிமை உள்ளதா என்பதே சந்தேகத்திற்கு இடமானது. கடந்த சில பத்தாண்டுகள் எகிப்துக்கு வெளியே வாழ்ந்த அவர், அமெரிக்காவுக்குச் சார்பான அறிக்கைகளைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் கொண்டவர். இவர்கள்தான் இன்று பெரும்பான்மை எகிப்தியர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிராகக் கிளர்கின்றனர்.
எகிப்தின் இரண்டாவது சக்தி அதன் ஆயுதப் படையினர். அவர்களில் 90 வீதமானோர் மதச்சார் பற்றவர்கள். அப்துன் நாஸர் தொடர்ந்து அன்வர் சாதாத், அதற்குப் பின்னர் முபாரக் என ஒவ்வொருவரினதும் காலத்தில் இவர்களுடம் வகைதொகையற்ற அதிகாரங்கள் குவிக்கப்பட்டன. இம்மூன்று பேரும் இராணுவ உயர் அதிகாரிகளாக இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. பெரும் சலுகைகளையும் சுகபோகங்களையும் கொண்டுள்ள இந்த இராணுவக் கட்டமைப்பு, அவற்றை இழப்பதற்கு ஒருபோதும் விரும்பாது.
1981 இல் இராணுவ ஜெனரல்கள் கூடி, இராணுவத்திற்குச் சார்பான ஓர் அரசியலமைப்பை எப்படி துருக்கியில் உருவாக்கினார்களோ, அதுபோன்றுதான் 1971 இல் வரையப்பட்ட எகிப்தின் அரசியலமைப்பு எல்லை மீறிய அதிகாரங்களை இராணுவத் துறைக்குத் தாரைவார்த்தது. இராணுவ நீதிமன்றங்கள் பரவலாக உருவாக்கப்பட்டன.
அரசாங்கத்தை விமர்சித்தவர்களும் எதிர்த்தவர்களும் இந்த இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிந்திய எகிப்தின் அரசியல் வரலாறு என்பது சுமாராக ஒரு இராணுவ வரலாறாகவே இருந்து வந்துள்ளது. அப்துன் நாஸர், சாதாத், முபாரக் ஆகிய மூவரும் இராணுவ வீரர்களே. துப்பாக்கிகளையும் குண்டுகளையும் அவர்களால் நன்கு இயக்கத் தெரிந்தது. பகுத்தறிவை விட, எகிப்தியர்களின் நலன்களைவிட அவர்களது இராணுவ வெறித்தனமும் அதிகார நீடிப்புக்கான ஆசையும்தான் எகிப்தை இந்த நிலைக்குக் கொண்டு சென்றது.
புதிய அரசியலமைப்பு பொதுமக்கள் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதைத் தடுக்கின்றது. துருக்கி போன்று இராணுவத்தின் அதிகாரம் படிப்படியாகக் குறைக்கப்படுகின்றது. ஆனால், எகிப்திய இராணுவத்தை ஊழல் மோசடிகள் இன்றி, ஜனநாயகமயமாக்குவதற்கு குறைந்தது பத்து ஆண்டுகள் செல்லும் எனக் கூறப்படுகின்றது. அரசியலமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், இராணு வத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முதற்படி என்பது மாத்திரம் தெளிவானது.
சமீபகால எகிப்திய அரசியலில் நிர்ணயகரமான பாத்திரம் வகித்த தன்தாவி பதவி விலகிக் கொள்ளுமாறு பணிக்கப்பட்டமை இராணுவத் துறையின் மீது விழுந்த முதல் அடியாகும். துருக்கி போன்று இராணுவத் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள ‘களையெடுப்பின்’ முதல் உதாரணமே தன்தாவி. எகிப்திய இராணுவத்தை சிவில் சமூகக் கட்டமைப்புடன் இணைப்பதிலும் ஜனநாயக மயமாக்குவதிலும் இஸ்லாமியவாதிகள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
எகிப்தின் பொருளாதாரம், முறையான நிருவாகம், வெளிப்படைத் தன்மையுள்ள நிதி நிர்வாகம் என்பவற்றை உறுதி செய்வதாயின், இராணுவத் துறையில் இந்தக் களையெடுப்பு மிகவும் இன்றியமையாதது. அதிலும் இஸ்லாமியவாதிகள் மிக நுணுக்கமாகவே காய்களை நகர்த்துகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இஸ்லாமியவாதிகள் எதிர்நோக்கும் நான்காவது சவால், 1960 களிலிருந்து செயற்பட்டு வரும் தீவிர பெண்ணிலைவாதிகள். இவர்கள் கனடா, ஐக்கிய அமெரிக்க என்பவற்றிலிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக் கொண்டு எகிப்தில் பெண்களின் உரிமை மறுக்கப்படுவதாக பிரச்சாரம் செய்கின்றனர். புதிய அரசியலமைப்பு சட்டத்தில் ஆண்-பெண் சமத்துவம் மறுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செவ்வியளித்து வருகின்ற இவர்கள், சமநிலையான இஸ்லாமிய ஆட்சிக்குப் பெரும் இடைஞ்சலாக இருக்கின்றனர்.
பொதுவாக, எகிப்தில் இஸ்லாமிய அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் இந்த அனைத்து சக்திகளுக்குப் பின்னணியிலும் அமெரிக்க, சியோனிஸ லொபிகள் கவனமாகத் தொழிற்படுகின்றன. இஸ்லாமிய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஒவ்வொரு வகையான தந்திரோபாயங்களை இவர்கள் தீட்டிச் செயல்படுகின்றனர்.
ஆனால், எகிப்தின் சகோதரத்துவ அமைப்பும், அவர்களது நீதிக்கும் சுதந்திரத்திற்குமான கட்சியும் முக்கியமான அல்லது பாரிய தடைகள் அனைத்தையும் தாண்டிவிட்டனர். பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அவர்கள் முன்னாலுள்ள முதற்தர கவனத்திற்குரிய அம்சமாகும். எகிப்தின் தற்போதைய இஸ்லாமிய அரசாங்கம் அதை மிக சீரியஸாக கையாள்வதற்குத் தொடங்கியுள்ளது. இது தொடர்பில் நம்பிக்கை தரக் கூடிய குறிகாட்டிகளும் தென்படத் தொடங்கியுள்ளன.
மொத்தத்தில் எகிப்தின் இஸ்லாமியவாதிகள் புதியதோர் அறபு-இஸ்லாமிய உலகிற்கான முன்மாதிரி வேலைத் திட்டங்களைக் கவனமாக முன்னெடுத்து வருகின்றனர் என்பது தெளிவானது. ஆனால், நாம் மிக தொலை தூரத்தில் இருந்து கொண்டு, களநிலவரங்களைப் புரியாமல், அவர்கள் குறித்து அவசரமாக கருத்துச் சொல்வதில் எந்தத் தார்மீக நியாயங்களும் இருப்பதாகத் தோன்றவில்லை.
ஜனநாயகத்தை எதிர்ப்பவர்கள் தோற்றுப் போய் விட்டனர் என்பதை இஸ்லாமியவாதிகள் நிரூபித்துள்ளனர். உண்மையில் அவர்கள் தோற்றுத்தான் போயினர்.
கட்டுரை எழுத்தாளர்
அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன்

0 comments:
Post a Comment