Banner 468 x 60px

 

Wednesday, January 23, 2013

சகிப்புத் தன்மையின் விளைவுதான் சகவாழ்வு என இஸ்லாம் கருதுகின்றது - அஷ்ஷெய்க் றஊப் ஸெய்ன் (நளீமி)

0 comments


Rauff-Zain0பிற சமூகங்களுடன் இணங்கி வாழ்வதே இஸ்லாத்தின் அடிப்படை. முஸ்லிம்களுடன் இணக்கமாக வாழும் ஏனைய சமூகங்களுடன் சகிப்புடன் நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் எம்மைப் பணிக்கிறது. இந்த சகிப்புத் தன்மையின் விளைவுதான் சகவாழ்வு என இஸ்லாம் கருதுகின்றது என அஷ்ஷெய்க் றஊப் ஸெய்ன் (நளீமி) தெரிவித்தார்.

மர்கஸுஸ் ஸலாமாவின் இரு மாதங்களுக்கிடையில் நடைபெறும் “ஹதீஸுஸ் ஸுலஸா“ நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (22.01.2013) மாலை 7.00 மணிக்கு ஸலாமா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், இஸ்லாம் யுத்தத்தின் அல்லது வன்முறையின் மதம் என்று மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையுமில்லை. இஸ்லாம் என்ற சொல்லின் அர்த்தமே அமைதியும் சமாதானமும் என்பதுதான்.
அல்குர்ஆனில் யுத்தம் என்பதைக் குறிக்கும் “ஹர்ப்“ எனும் சொல் 6 இடங்களில் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. ஆனால், “சில்ம்“ எனப்படும் சமாதானத்தைக் குறிக்கும் சொல் 110 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இஸ்லாம் கூறும் சமாதான சகவாழ்வின் ஐந்து அடிப்படைகளை எடுத்துக் கூறினார்.
  1. இஸ்லாத்தின் கொள்கைச் சுதந்திரம். இஸ்லாம் மதச் சுதந்திரத்தை முழுமையாக அங்கீகரிக்கின்றது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கொள்கையை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ உரிமை உண்டு. ஸூறதுல் பகராவில் இடம்பெறும் அதிகாரத்தின் வசனம் (ஆயத்துல் குர்ஸி) இதனைத் தெளிவாக வலியுறுத்துகின்றது. மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது. உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் இந்த கொள்கைச் சுதந்திரம் உள்ளதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது.
  2. மனிதர்கள் அனைவரும் கண்ணியமானவர்கள். “ஆதத்தின் சந்ததியினரை நாம் கண்ணியப்படுத்திவிட்டோம். கடலிலும் கரையிலும் அவர்களைச் சுமந்தோம்” என அல்குர்ஆன் மனித கண்ணியத்தை பறைசாற்றுகின்றது.
  3. மனிதர்கள் அனைவரும் ஒரே இறைவனின் படைப்பினங்கள். “மனிதர்களே! நாம் உங்களை ஒரே ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம் பின்னர் பல்வேறு கோத்திரங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். நீங்கள் பரஷ்பரம் ஒருவரைப் புரிந்து கொள்வதற்காக“
  4. மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள். றஸூல் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பின்னரும் “அல்லாஹ்வே நீயே ஒரே இறைவன் என நான் சாட்சி பகர்கின்றேன். முஹம்மத் உனது தூதர் எனவும் சாட்சி பகர்கின்றேன். மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என சாட்சி பகர்கின்றேன்“ எனப் பிரார்த்தனை செய்துள்ளார்கள். ஒரு நாளைக்கு 5 விடுத்தம் பர்ளான தொழுகைக்குப் பின்னர் அல்லாஹ், இறைத்தூதரைத் தெடர்ந்து இந்த சகோதரத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளமை அதன் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறது.
  5. மனித குலத்திற்கு நன்மை பயப்பது ஒவ்வொரு மனிதர் மீது கடமை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் குடும்பத்தினர். அவர்களில் அல்லாஹ்வின் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளவர்களை அல்லாஹ்வின் விருப்பத்திற்குரியவர். (நஸாயி, அபூதாவூத்)
மேற்கூறிய ஐந்த அடிப்படைகளையும் வலியுறுத்தும் வகையில் ஸூறதுல் மும்தஹினாவின் எட்டாவது வசனம் அமைந்துள்ளது.
“மார்க்கத்தில் உங்களோடு யுத்தம் செய்யாதவர்கள் மற்றும் உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றாதவர்களுக்கு உபகாரம் செய்வதை, நீதி செய்வதை விட்டு அல்லாஹுதஆலா உங்களைத் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவேரை விரும்புகின்றான். (மும்தஹினா-8) எனத் தெரிவித்தார்.
Rauff-Zain1

0 comments:

Post a Comment